Share it

Friday, September 14, 2018

ஞாபகங்கள் | அத்தியாயம் - 02 | தொடர் கதை | சிகரம் பாரதி


இனிமையான ஞாபகங்கள் அதிர்ஷ்டலாப சீட்டில்
கிடைக்கும் ஒரு கோடி பரிசை விட மேலானது

ஞாபகங்கள்
அத்தியாயம் - இரண்டு
வக்கீல் வந்தியத்தேவன்

அவன் ஞாபகங்களை மீட்டுக்கொண்டே தன் குழந்தைக்கு உடைமாற்றிவிட்டிருந்தான். அதற்குள் நந்தினியும் குளித்து முடித்து அழகான பச்சை நிற சேலைக்கு மாறியிருந்தாள். பச்சை நிறத்தில் சேலை அணிந்திருந்தது அவள் அழகை மேலும் மெருகூட்டுவதாக வந்தியத்தேவன் எண்ணினான்.




"தேவா சாமி கும்புட வாடா... ரம்யா நீ வா" என்றபடி பூஜையறைக்குள் நுழைந்தாள் நந்தினி.

சாம்பிராணி போட்டு கற்பூரம் காட்டி பூஜை வேலை முடிந்த பிறகு மூவரும் சாப்பாட்டு மேசைக்கு வந்து அமர நந்தினி இருவருக்கும் பரிமாறி தானும் உண்டாள்.

வந்தியத்தேவன் ஒரு வக்கீல். நேர்மை யார் பக்கம் இருக்கிறதோ அவர்களுக்காகவே வாதாடுவான். நந்தினி மருத்துவப் படிப்பை முடித்து பட்டம் பெற்று தனியார் வைத்தியசாலையில் பணிபுரிந்து கொண்டிருந்தாள். அவளுக்கு ஏழைகளுக்கு இலவச வைத்தியம் செய்ய ஆசைதான். என்றாலும் வைத்திய அதிகாரியின் பணிப்பின் பேரிலேயே பணம் வாங்கி வைத்தியம் செய்து அனுப்பினாள்.

நேரத்தைப் பார்த்தான் வந்தியத்தேவன். கடிகாரம் 07.42ஐக் காட்டியது. புறப்படுவதற்கு யாரும் அவசரப்படவில்லை.

"தேவா... இன்னிக்கு ஏதாவது கேஸ் இருக்கா...?" - நந்தினி கேட்டாள்.

"ம்... கேஸ்னு இல்ல... கேஸ் விஷயமா கொஞ்சம் டிஸ்கஷன் பண்ணனும்"

"யாரோட?"

"என்னோட ஃப்ரெண்ட் லாயர் வித்யாதர்கிட்டயும் நம்ம ரெண்டு பேரோட சீனியர் அகிலன் சார்கிட்டயும்தான். டிஸ்கஷன் முடிஞ்சாலும் கேஸ்ல வாதாடறதுக்கு பொயின்ட்ஸ்லாம் தேடணும்"

"எப்ப கேஸ்?" - நந்தினி கேட்டவுடன் நாட்காட்டியைப் பார்த்தான் வந்தியத்தேவன். அன்று சித்திரை 7.

"சித்திரை 16" என்றான் வந்தியத்தேவன். அந்த மெய்கண்டான் நாட்காட்டியில் சித்திரை 7 ஏப்ரல் 20ஐயும் சித்திரை 16 ஏப்ரல் 29ஐயும் காட்டியது.

"அதான் ஒன்பது நாள் இருக்கே? ஏன் அவசரப்படணும்?" என்று கேட்டாள் நந்தினி.



"நந்தினி... இது ஒரு அவசர கேஸ். குற்றவாளியை பிடிக்காம நிரபராதிய பிடிச்சுட்டாங்க. அவனை இப்போ வெளிய எடுக்கணும்"

"என்ன கேஸ்?"

"கொலை" என்று சத்தமில்லாமல் மெதுவாக சொன்னான் வந்தியத்தேவன்.

"வேண்டாம் தேவா... ப்ளீஸ்..." என்று கெஞ்சினாள் நந்தினி.

"ஏன் வேண்டாங்கறே?"

"அவனை புடிச்சதுக்கு ஆதாரம் இருக்கணும். ஆதாரம் இல்லாமலா.."

"ம்... ஆதாரம் உண்டு... காப்பாத்திடலாம்..."

"இப்ப நேரம் பத்தாது. அந்திக்கு பேசிக்கலாம் நந்தினி..."

"எப்ப வருவே?"

"ராத்திரி ஏழு ஆகும்"

"ம்.... அப்ப எனக்கும் டைம் சரி தான். எங்க ரம்யா? ரம்யா... ரம்யா..." என்று அழைத்தாள் நந்தினி.

"என்னம்மா?" என்று கேட்டுக்கொண்டே பாடசாலைப் பையை மாட்டியபடியே அவள் வர "இன்னிக்கும் வண்டி அனுப்பறேன். ஸ்கூல் முடிஞ்சு நேத்து மாதிரியே வந்துரணும். ஹொஸ்பிட்டல்ல இன்னிக்கு V.P சைட்ல இருப்பேன்" என்று கூறினாள் நந்தினி.

"அந்த... ம்... பார்மசிக்கு பக்கத்துல உள்ள ரூம் தானே?" என்று திக்கியபடியே கேட்டாள் குழந்தை ரம்யா.

இரண்டாம் தரத்தில் கல்வி கற்கிறாள் ரம்யா. வயது ஏழு. திருமணமான அடுத்த வருடத்திலேயே பிறந்துவிட்டாள் ரம்யா. அவர்கள் இருவருக்கும் இப்போது எட்டு வருட தாம்பத்திய வாழ்க்கை நிறைவடைகிறது.

"ஆமா... அதே தான்" என்று ரம்யாவின் கேள்விக்கு விடையளித்தாள் நந்தினி.

மூவரும் புறப்பட்டு கீழ்மாடியிலுள்ள விசாலமான வரவேற்பறைக்கு வந்தனர். அந்த வரவேற்பறையின் மத்தியில் தனித்தனியாக அமரக்கூடிய நான்கு நாற்காலிகள் காணப்பட்டன. மூன்று பேர் அமரக்கூடிய நாற்காலிகள் மூன்று காணப்பட்டன. சிறிய மேசைகள் இரண்டு இருந்தன. ஒரு பெரிய கண்ணாடி அலுமாரியும் இருந்தது.

கண்ணாடி அலுமாரியில் தமது திருமணத்திற்குக் கிடைத்த அன்பளிப்புகள், சில அலுமினிய வெள்ளிப் பாத்திரங்கள் மற்றும் சில வாழ்த்து அட்டைகளை அழகாக அடுக்கி வைத்திருந்தனர். வரவேற்பறையின் வடமேற்கு திசையிலும் ஒரு அலுமாரி இருந்தது. அதில் உள்ளே இருப்பதை வெளியில் காண முடியாது. அந்த அலுமாரியில் வந்தியத்தேவனினதும் நந்தினியினதும் சில கோப்புகள் உள்ளன.

மூவரும் வரவேற்பறைக்கு வந்து வீட்டு முன்கதவைத் திறந்து வெளியே வந்தனர். கதவை நன்றாகப் பூட்டிவிட்டு இளம் பச்சை நிற மாருதி காருக்கு அருகில் வந்தனர். வந்தியத்தேவன் ஓட்டுநர் ஆசனத்தில் அமர்ந்து தனது கோப்புகளை பின் ஆசனத்தில் வைத்தான். நந்தினியும் தனது கோப்புகளையும் குழந்தையின் பாடசாலைப் பையையும் வைத்துவிட்டு முன்கதவைத் திறக்க குழந்தை நடுவில் அமர நந்தினி முன் கதவருகில் அமர்ந்துகொண்டாள். கார் உறுமிக் கொண்டு பறந்தது. 

ரம்யாவை பாடசாலையில் இறக்கி விட்டுவிட்டு கொஞ்ச தூரம் சென்று நந்தினியையும் இறக்கிவிட்டான் வந்தியத்தேவன். 

"நா ஏழரை போல வர்றேன். நீ ரெடியா நில்லு என்ன?" 

"சரி" என்று கூறிவிட்டு நந்தினி வைத்தியசாலைக்குள் போக தன் கண்ணிலிருந்து மறையும் வரை அவளையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டேயிருந்தான். 

வந்தியத்தேவனின் கடையிதழ்களில் மெல்லிய புன்னகை பரவியது. மெதுவாக காரை பின்னால் எடுத்து தான் போக வேண்டிய பாதையில் விட்டான். அப்போது அவனுக்கு தான் நந்தினியை சந்தித்த நாட்கள் ஞாபகம் வந்தது. 

#ஞாபகங்கள் #தொடர்கதை #கதை_சொல்லப்_போறேன் #வலைத்தளம் #எண்ணங்கள் #வாழ்க்கை #நட்பு #காதல் #அன்பு #சிகரம்பாரதி #சிகரம் 

No comments:

Post a Comment

Share it