Share it

Saturday, September 29, 2018

முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | அத்தியாயம் - 07 | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா


பயணம் - 07 


பணி முடிந்து அனைவரும் இல்லம் நோக்கி விரையும் நேரத்தில் ஆதவனும் அன்றைய பணியை முடித்துக் கிளம்பத் தயாரானது. ஒளி நிறைந்த வான் மங்கத் தொடங்கியது. பறவையினங்கள் தன் கூட்டையடைந்து கூக்குரலிட்டுத் தன்னுடைய வருகையைப் பதிவு செய்து கொண்டிருந்தது. அரண்மனை எங்கும் தீப ஒளியால் மின்னிக் கொண்டிருந்தது. அரண்மனை வாயில் காவலர்கள் உள் நுழைவோரையும் வெளியேறுபவரையும் ஒவ்வொருவராய்ப் பரிசோதனை செய்து கொண்டிருந்தார்கள். மாலைநேரம் என்பதால் அவ்விடம் முழுவதும் மக்கள் தலைகளால் நிரம்பிப் பரபரப்பாய் இருந்தது. 


முன்புற வாயிலில் இருந்து சங்கேத மொழியில் ஒரு சங்குநாதம் வந்தது. இதை உணர்ந்த உட்புறக் காவலர்கள் மக்களின் நெரிசலைக் கட்டுப்படுத்தி இருபுறத்திலும் மக்களை ஒரே வரிசையாய் சீராய் நிறுத்தி ஒவ்வொருவராய்ப் பரிசோதித்து வெளியில் அனுப்பினார்கள். சத்தம் குறைந்து அமைதியடையச் செய்தார்கள் அவ்விடத்தில். ராஜ்ஜிய முக்கியஸ்தர்கள் ஒருவர் பின் ஒருவராய் வீரர்கள் புடைசூழ ரதத்திலும் புரவியிலும் வந்த கொண்டேயிருந்தார்கள். 

அரண்மனையின் முன் மண்டபத்தில் யாகசாலைகள் அமைத்து பூஜைக்குத் தயார் நிலையில் இருந்தது. ஆசனங்கள் அனைத்தும் அகற்றி கீழே பட்டாடை விரிக்கப்பட்டு அரசர், இளவரசர், அரச குடும்பத்தார்கள், முக்கிய மந்திரிகள், துறை ரீதியான அமைச்சர்கள், முதன்மைத் தளபதிகள், தளபதிகள், துணைத்தளபதிகள் மற்றும் கிராம நிர்வாகத்தைப் பார்க்கும் வேளாண்குடிகளின் தலைவர்கள் என அனைவரும் அமர்ந்திருந்தார்கள். 

அரண்மனை நிர்வாகத் தலைவரை அருகே அழைத்தார் அரசர். வாய்பொத்தி "சொல்லுங்கள் அரசே" என்று பணிவாய் அருகில் மண்டியிட்டு அமர்ந்தார். "அந்தணரிடம் பூஜைப் பொருட்கள் அனைத்தும் வந்துவிட்டதா என்று கேட்டறிந்து கொள்ளுங்கள். நம்முடைய அரசபையைச் சார்ந்தவர்கள் அனைவரும் வந்துவிட்டார்களா என சரிபார்த்துக் கொள்ளுங்கள். அனைவரும் வந்துவிட்டால் யாகத்தைத் தொடங்கச் சொல்லலாம். பிறகு வந்திருக்கும் அனைவருக்கும் உணவு தயாராகி விட்டதா என்பதையும் பார்த்துவிடுங்கள் சரியா?" என்றார் அரசர். "உத்தரவு அரசே" என்று வணங்கி விடைபெற்றுத் தன்னுடைய உதவியாளரை அருகில் அழைத்து "சமையல் கூடத்தில் சமையல் சமைத்தாகி விட்டதா எனப் பாருங்கள். இல்லையென்றால் துரிதப்படுத்தச் சொல்லுங்கள்" என்று உத்தரவைப் பிறப்பித்தபடியே நடந்து யாகசாலை அமைக்கப்பட்டிருக்கும் இடம் அடைந்தார். 

யாகசாலைக்கு அருகில் நின்று மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த குலகுருவின் சிஷ்யரிடம் சென்று "ஐயா பூஜைக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் வந்துவிட்டதா? ஏதாவது பொருள் விட்டுப் போயிருக்கிறாதா? பார்த்துச் சொல்லுங்கள், உடனடியாகக் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்" என்றார் அரண்மனை நிர்வாகத் தலைவர். "அனைத்துப் பொருட்களும் வந்துவிட்டது. தேவையெனில் தெரிவிக்கிறேன் ஐயா" என்றார் மரியாதையுடன். "நல்லது ஐயா" என்று விடைபெற்றுத் திரும்பி சபையை ஒவ்வொரு வரிசையாய்க் கண்காணித்து மனதினுள் பதிய வைத்துக் கொண்டார். அரசரிடம் வந்து "யாகத்திற்கான அனைத்துப் பொருட்களும் வந்துவிட்டது அரசே. சபையோர்கள் அனைவரும் வந்துவிட்டார்கள். சமையல் வேலையையும் துரிதப்படுத்தச் சொல்லி விட்டேன்" என்றார் பணிவாய். "சிறப்பு. கவனமாய்ப் பார்த்துக் கொள்ளுங்கள். பூஜையில் குறை ஏற்பட்டு விடக்கூடாது" என்று தெளிவாய்ச் சொன்னார் அரசர். "அரசே எந்தப் பிழையும் நிகழாது பார்த்துக் கொள்கிறேன்" என்று தலை வணங்கி விடைபெற்றார் நிர்வாகத் தலைவர். 



சரியான நேரத்தில் எக்காளம் அடித்துக் குலகுருவின் வருகை சபைக்குத் தெரிவிக்கப்பட்டது. அனைவரும் அமைதியாய் எழுந்து நின்று கொண்டு குலகுருவை வரவேற்கக் காத்திருந்தார்கள். நல்ல உயரம், உயரத்திற்குத் தகுந்த உடல்வாகு, சிவந்த மேனி, மேனி கமகமக்கும் சந்தன வாசம், மார்பிலாடும் முப்புரிநூல், வெண்ணிற வேஷ்டி, மேலுடலை மறைக்கத் துண்டு, மெல்லிய புன்னகை, சாஸ்திரங்களைக் கற்று நுணுக்கமறிந்தும் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான முகம், அதில் நல்ல தெளிவு. இந்த அம்சம் உடையவர் யாகம் நடக்கும் மண்டபத்திற்குள் பிரவேசித்தார். அரசருக்கும் உயர்வான மதிப்புடையவரான குலகுரு வந்ததும் அரசரும் அரசியாரும் முன் சென்று இருகரம் குவித்து வணங்கி வரவேற்று அழைத்து வந்தார்கள். இளவரசரும் அவரது மனைவியும் குருபாதம் பணிந்தார்கள். "விஜயீபவ... ஆயுஷ்மான் பவ..." என்று ஆசிர்வதித்தார். சபையோர்கள் அனைவரும் சிரம்தாழ்த்திக் கரம்கூப்பினார்கள். பதிலுக்கு அவரும் வணக்கத்தைக் கூறினார். 

தங்கக் குடத்தில் புனித நீரிட்டுக் குடத்தைச் சுற்றியும் நூலால் அலங்கரித்துக் குடத்தின் வாயின்மேல் மாவிலை விரித்து அதற்கு மேல் தேங்காய் வைத்துத் தங்கக் குடத்தைத் தங்கக் கலசமாக்கி யாகசாலையின் முன்னே நடுவில் வைத்திருந்தனர். யாகசாலையின் அருகே சென்று ஒவ்வொன்றாய் கவனித்து  பூஜையை ஆரம்பித்தார் குரு. கலசத்திலிருக்கும் நீரை மந்திர உச்சாடனத்தால் புனித நீரான கங்கை, யமுனை, சரஸ்வதி நீரை அக்கலசத்திற்குள் வருமாறு முப்பத்து முக்கோடி தேவர்களையும் மனமார வேண்டி யாகசாலையினுள் நெருப்பிட்டு யாகத்தைத் தொடங்கி வைத்து அவருக்குண்டான இடத்தில் வந்து அமர்ந்தார். வேத மந்திரத்தை ஒரே நேரத்தில் பல அந்தணர்கள் உச்சாடனம் செய்தார்கள். அப்பொழுது அவ்விடம் முழுவதும் தெய்வீக அதிர்வலையால் நிரம்பியது. யாகத்திலிருந்து வரும் புகை நறுமணத்துடன் அரண்மனை எங்கும் பரவியது. புகையுடன் வேதத்தின் அருட்பேராற்றலும் முழுமையாய் அத்தேசத்தைக் காத்துநின்றது. 

யாகம் முடியும் நேரம் நெருங்கியது. அனைத்து அந்தணர்களும் வேத மந்திரத்தை ஓதி முடித்தார்கள். தீபாராதனை காண்பிப்பதற்காகக் குலகுருவை அழைத்தார்கள். தன்னிடம் விட்டு எழுந்து சென்றார் குரு. அனைவரும் எழுந்து நின்றார்கள். தீபாராதனை காட்டினார். அனைவரும் ஒன்றாய் வேதமந்திரம் ஓதினார்கள். சபையோர் அனைவரும் கரம்கூப்பி வணங்கினார்கள். அரசரின் மனம் நிறைந்தது. இம்முறையும் நமக்கு வெற்றி நிச்சயம் என்று அவரின் உள்ளுணர்வு உரக்கச் சொல்லியது. அந்தத் திருப்தியுடன் அனைவருடனும் உணவருந்தச் சென்றார் அரசர். 

பூஜைப் பிரசாதங்களுடன் அரசியாரின் மேற்பார்வையிலே அனைத்து முக்கியஸ்தர்களுக்கும் உணவு பரிமாறப்பட்டது. அருகிலிருந்த மண்டபத்தில் குலகுரு, அரசர், இளவரசர் மூவரும் அமைச்சர்கள் தளபதிகள் மற்ற முக்கியஸ்தர்களின் வருகைக்காகக் காத்திருந்தார்கள். ஒவ்வொருவராய் மண்டபத்தினுள் வரத் தொடங்கினார்கள். சில நிமிடங்களில் அனைவரும் வந்தனர். மேடையின் மீது குலகுருவும் அரசரும் இளவரசரும் நின்றிருக்க மற்றவர்கள் வரிசையாய்க் கீழே நின்றிருந்தார்கள். "நாளை வனப்பிரவேஷம் கொள்ளும் படைத் தளபதிகள், உபதளபதிகள் கவனத்திற்கு, நீங்கள் தான் தெற்கு நோக்கிய இப்படையெடுப்புக்கு முதலில் பல்லவத்திற்காக இப்படையெடுப்பில் கிளம்பப் போகிறீர்கள். உங்களுக்கான நடவடிக்கைகள் ஏற்கனவே சொன்னது தான். இங்கிருந்தே பெரும் படையாய் நகர வேண்டாம். சிறுசிறு குழுக்களாய் நகர்ந்து வனத்தின் மையத்தில் இணைந்து கொள்ளுங்கள். கவனமாய் நகருங்கள். முதன்மைத் தளபதிகள் நம்முடைய வீரர்களின் பாதுகாப்பையும் நாட்டின் நலனையும் மனதில் கொண்டு முடிவெடுத்து கவனமாய்ச் செயல்படுங்கள். நம் எண்ணம் அனைத்தும் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றுவதே. ஆகவே அதில் மட்டும் குறியாய் இருங்கள்" என்று அரசர் உரைத்து முடித்ததும் குலகுருவின் முகத்தைப் பார்த்தார். 

மன்னரைப் பார்த்து தலையசைத்து முன்வந்து நின்றிருந்த அமைச்சர்கள், தளபதிகள், உபதளபதிகள் மற்றும் நிர்வாகிகளின் மீது கண்களை உலாவ விட்டு பேசித் தொடங்கினார். "சபையோர்களே, இம்முறையும் நேரம் நமக்கு சாதகமாகவே உள்ளது. ஆனால் என்ன, உங்களின் பாதை மிகக் கடினம். பல்லவத்திற்காகத் தாங்கிக் கொள்ளுங்கள். நான் உரைக்க நினைத்ததை அரசர் ஏற்கனவே விளக்கமாய் உரைத்து விட்டார். ஆனால் ஒரு முக்கியமான விஷயம். களப்பிரர்கள் யானைகளைப் பிடிப்பதற்காக பெரும் குழிகளைத் தோண்டியிருப்பார்கள். அதை மட்டும் கவனமாய் மனதில் கொள்ளுங்கள். பறவையின் சத்தங்களை உற்று கவனியுங்கள். பேச்சு இல்லாமல் சைகைகளைக் கடைபிடியுங்கள். வனத்தினுள் தங்கும் நாட்களில் நீரையும் உணவையும் நன்கு பரிசோதித்த பிறகே உட்கொள்ளுங்கள். ஒவ்வொரு அசைவையும் கவனித்தபடியே செல்லுங்கள். களபப்பு ஒற்றர்கள் உங்களைக் கண்காணிக்க நேரலாம். கவனம்... களபப்பு தேசத்திற்கு முன்பே வனத்திற்குள்ளே தங்குமிடம் அமைத்து இளவரசரின் படை வரும் வரை காத்திருங்கள். போருக்கான இடத்தை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். நான் ஏன் சொல்கிறேன் என்ற காரணம் உங்களுக்குப் புரியும் என நினைக்கிறேன்" என்று கூறி இளவரசரைப் பார்த்தார். இளவரசர் "நன்றாய் விளங்கியது குருவே" என்றார் சிரம் தாழ்த்தியவாறு. 

"சரி, உங்களுக்கான நேரம் குறைவு தான். அனைவரும் பொறுப்பை உணர்ந்து செயல்படுங்கள். வெற்றி நமதே" என்று அனைவரையும் பார்த்துரைத்தார் குலகுரு. தளபதிகள் அனைவரும் முன் மண்டியிட்டு வாளூன்றி நின்றார்கள். குலகுரு வலக்கரம் தூக்கி "விஜயீ பவ..." என்று ஆசி வழங்கினார். அரசர் "ஜெய் பல்லவா" என்று உரக்கச் சொல்ல அனைவரும் உரத்த குரலில் மீண்டும் "ஜெய் பல்லவா" என்று சொன்னார்கள். குலகுரு அனைவருக்கும் ஆசி வழங்கி வழியனுப்பி வைத்தார். அனைவரின் மனதும் புத்துயிர் பெற்றிருந்தது. 

அன்றிரவே நாடெங்குமுள்ள அனைத்துப் பாசறைகளுக்கும் படை கிளம்புவதற்கான தகவல் அனுப்பப்பட்டது. உள்நாட்டுப் பாதுகாப்பிலிருக்கும் எல்லைப்படை, ஊர்க்காவல் படை தலைமை அதிகாரியிடமிருந்தும் படையெடுப்பில் பங்குகொள்ளும் படையின் உபதளபதிகளிடமிருந்தும் தெளிவான பதில் அரண்மனைக்கும் முதன்மை அமைச்சருக்கும் முதன்மைத் தளபதிகளுக்கும் வந்து சேர்ந்தது. அவர்கள் அனைவரும் தெளிவாயிருப்பது மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தந்தது.

மறுநாள் மதியவேளை நெருங்கிக் கொண்டிருந்தது. வீரர்கள் அனைவரும் அவரவர் வீட்டிலிருந்து பாசறை செல்ல ஆயத்தமானார்கள். தாயைப் பிரிந்து போருக்குச் செல்லும் பிள்ளைகளும் புது மனைவிக்கு விடைகொடுத்துக் கிளம்பும் கணவன்மார்களும் இப்பொழுது தான் கன்னிப் போரைச் சந்திக்கப் போகும் இளசுகளும் பல போர்களைக் கண்டு விழுப்புண் தாங்கி நிற்கும் வீரர்களும் எனப் பல்லவப் படை பல முகங்களைக் கொண்டதாய் இருந்தது. 

வேரோடு பிடுங்கி மற்றொரு நட்ட மரமாய் இருக்கும் புது மனைவிமார்கள் தான் நம்பிவந்தவன் தன்னை விட்டுப் பிரிவதைப் பொறுக்காது, அதேவேளையில் கணவனைத் தடுக்கவும் இயலாது கணவன் முன் சிரித்த முகத்துடன் வழியனுப்பி வைத்துவிட்டு வீட்டின் மூலையில் முட்டியில் தலை வைத்து ஒடுங்கிப் புழுங்கி அழத் தொடங்கினாள். தன் மகனைப் பிரிந்த தாயோ மருமகளை மார்போடு 'அணைத்து அழாதே மகளே நானிருக்கிறேன் கவலை கொள்ளாதே...' என்று ஆறுதல் உரைத்தும் தேம்பி அழுத மனைவிமார்கள். 

கடந்த போரில் கணவனையிழந்து ஒற்றை மகனை வைத்துக் கொண்டு அவனை உயிராய் வளர்த்து அவன் எந்த சுகமும் காணும் முன்னரே தாய்நாட்டிற்காகப் போர்களத்தைக் காணத் துடித்துத் தந்தையைப் போல் வேலுடன் கிளம்பி நிற்கும் மகனுக்கு ஆரத்தி எடுத்து உச்சிமுகர்ந்து முத்தமிட்டு எல்லைக் கோவிலில் வேண்டி வந்த திருநீறை நெற்றியில் வைத்துப் 'போய் வாடா என் செல்வமே' என ஆனந்தமாய் அனுப்பிவைத்து மகன் கிளம்பியதும் உறவுகளிடம் தன் மனபயத்தைக் கூறி அழும் தாய்மார்கள் என இந்த உணர்வு அரச பரம்பரையினர் முதல் சாமானிய மக்கள் வரை அனைவருக்குள்ளும் ஒரே மாதிரி தான் இருந்தது. 

பல்லவ வீரர்களின் இலக்கு எதிரியின் உயிர்மேல் இருந்தது. வீரர்களின் உறவினர்களின் மனமோ தன் மகனின், கணவனின், தந்தையின் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படக் கூடாது என்றிருந்தது. உயிரை வைத்து ஆட்டம் தொடங்கியது நிலத்தைப் பிடிக்க. அரசரின் திட்டத்தின் படி சிறு சிறு குழுக்களாய் எட்டு திசையிலிருந்தும் தொண்டை மண்டலம் நோக்கிப் படை கிளம்பியது...

- சதீஷ் விவேகா



முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | அத்தியாயம் - 07 | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா 
http://sigaram-one.blogspot.com/2018/09/Mudi-Meetta-Moovendhargal-07.html 
#முடிமீட்ட_மூவேந்தர்கள் #சதீஷ்_விவேகா #சரித்திரத்_தொடர் #வரலாறு #தமிழ் #சோழர்கள் #கரிகாற்_சோழன் #போர் #களப்பிரர் #இருண்ட_காலம் #சிகரம்

No comments:

Post a Comment

Share it