Share it

Wednesday, September 5, 2018

ஞாபகங்கள் | அத்தியாயம் - 01 | தொடர் கதை | சிகரம் பாரதி


அலைகள் கடலில் ஓய்வதில்லை 
ஞாபகங்களை மனது மறப்பதில்லை 

கதையைத் தொடங்கும் முன்... 

இந்தக் கதை நமது மனதில் சதா தோன்றிக் கொண்டிருக்கும் ஞாபகங்களைச் சுற்றியே பின்னப்பட்டிருக்கிறது. மனதில் ஆழப் பதிந்துவிட்ட எதையுமே இலகுவில் மறந்துவிட முடியாது. பல நாள் மறந்திருந்த ஒன்று மீண்டும் ஞாபகம் வரும்போது அது இரண்டு வகைகளில் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். 

ஒன்று அது சந்தோஷத்தை தரும். இல்லையேல் துக்கத்தை ஏற்படுத்தி உறங்க விடாமல் செய்யவும் கூடும். இந்த ஞாபகங்கள் தரும் அந்த இரண்டு விளைவுகளும் இந்தக் கதையில் சிலர் வாழ்வில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றியதே இந்தக் கதை. ஞாபகம் வருகிறது... 



ஞாபகங்கள் 
அத்தியாயம் - ஒன்று 
அன்புத் தம்பதியர் 

வந்தியத்தேவன் இன்னும் எழும்பவில்லை. அவனது மனைவி நந்தினி காதில் கிசுகிசுத்தாள். 

"டேய்... எழும்புடா... சொல்றேன்ல..." 

அவன் எழும்பவுமில்லை, அசையவுமில்லை. ஆனால் அவன் மனது துள்ளிக் குதித்தது. ஏனென்றால் அவனது அன்பிற்கினிய மார்னிங் அலாரம் வேலை செய்யத் துவங்கிவிட்டதே! 

உடனே நந்தினி அவனது கையில் தான் கொண்டு வந்த தேநீர்க் குவளையை வைத்தாள். "அம்மா..." என்று அலறிக் கொண்டு எழுந்தான் வந்தியத் தேவன். 

நந்தினி விழுந்து விழுந்து சிரித்தாள். 

"ஏய்... இப்படியா செய்யணும்? நான் முழிச்சு கால் மணி நேரம்..." என்றான் வந்தியத் தேவன். 

"அடப்பாவி... கால் மணி நேரமா? ரொம்ப சினிமா நடிகர்னு நெனப்புத்தான்" என்று கேலி செய்தாள் நந்தினி. 

உடனே வந்தியத்தேவன் அவள் கையைப் பிடித்தான். 

"கைய விடுங்க..." என்று சிணுங்கினாள் அவள். 

"என் மார்னிங் அலாரமே நீ தான். எப்படி தெரியுமா?" 

"எப்படி?" 

"எந்த நாளும் நா தூங்கறேன்னு தெரிஞ்சும் வந்து எழுப்பி விடறியே... அதனால தான்" என்றான் வந்தியத் தேவன். 

"ஆமா. இந்தப் புகழ்ச்சிக்கு கொறச்சலே இருக்காது" என்றாள் நந்தினி. அவன் இன்னும் அவள் கையை விடவில்லை. அவள் கட்டிலில் அமர்ந்தாள். 

"ஏன் புகழக்கூடாதா?" வந்தியத்தேவன் கேட்டான். 

"டேய்... தேவா... டீ ஆறப்போகுது. பட்டுனு குடிடா" என்றாள் அவள். 

"சரிங்க மேடம்" என்றபடியே தேநீரை உறிஞ்சிக் குடித்தான் வந்தியத் தேவன். 

"டீ சூப்பர்" என்று அவன் கூற "லேட்டாகாம எழும்பி நேரத்தோட ஒஃபீசுக்கு போற வழியப் பாருங்க. நா சமைக்கணும். கைய விடுங்க" என்று படபடவென சொன்னாள் நந்தினி. 

"முடியாது" - வந்தியத்தேவன் சொன்னான். 




அவள் பட்டென்று கையை விடுவித்துக் கொண்டு சமையலறைக்குப் போக அவன் மெல்லிய புன்னகையொன்றை உதிரவிட்டவாறே கட்டிலை விட்டிறங்கினான். 

கீழே விழப்போன சாரத்தை ஒழுங்காகக் கட்டிக் கொண்டு மெதுவாக குளியலறைக்குள் நுழைந்தான் அவன். தூரிகையில் பற்பசையைத் தடவி பல் துலக்கத் துவங்கினான். 

கொஞ்ச நேரத்துக்குள் அவர்களது அறையில் இதுவரை தூங்கிக் கொண்டிருந்த குழந்தை ரம்யா "அம்மா..." என்று அழைக்கும் சப்தம் கேட்டது. 

"இரு... இதோ வந்துர்றேன்" என்றபடி அறைக்குள் நுழைந்த நந்தினி அவள் குழந்தையின் கையில் தேநீரை வைத்து விட்டு சமையலறைக்குள் நுழைந்தாள்.

அப்போதுதான் வந்தியத்தேவன் குளிர்ந்த நீரில் குளித்துக் கொண்டிருந்தான். கொஞ்ச நேரத்துக்குள்ளாலேயே அவன் குளியலறையிலிருந்து வெளிப்பட நந்தினி அங்கு வந்தாள்.

"சேர்ட் அந்த செவுத்துல மாட்டிருக்கு. ட்ரவுசர் பீரோவுல பாருங்க" என்றவள் அறை வாசல் வரை சென்று சற்று நின்று "ஃபைல் எல்லாத்தையும் மறந்துடாம எடுத்துட்டுப் போங்க" என்றபடி வெளியேறினாள்.

'ம்ம்... காலம் மாறிப்போச்சு' என்று முணுமுணுத்தவாறே உடை மாற்றினான் வந்தியத்தேவன். உடனே நேரத்தைப் பார்க்க மணி 07.15 எனக் காட்டியது. கடிகாரம் ஓடுவதை நிறுத்தலாம். ஆனால் காலம் மாறுவதை யாராலும் நிறுத்த முடியாதல்லவா? நேரம் தன் பாட்டில் ஓடிக்கொண்டிருந்தது. அந்த நேரம் அவ்வறைக்குள் நந்தினி நுழைந்தாள்.

பீரோவிலிருந்து தனது உடையை எடுத்தவாறே "அடுப்புல தண்ணி வச்சிருக்கேன். கொதிச்ச உடனே இறக்கி வச்சிட்டு கீரையைக் கொஞ்சம் சுண்டுங்க" என்றபடி தன்னுடன் குழந்தையையும் தூக்கிக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள். 

வந்தியத்தேவன் சமயலறைக்குள் சென்று கொதித்துக் கொண்டிருந்த தண்ணீரை இறக்கி வைத்துவிட்டு சட்டியை அடுப்பில் வைத்து கீரையைப் போட்டு தேங்காய்ப்பூ சேர்த்துக் கிண்டினான். பத்து நிமிடத்தில் கீரை சுண்டும் வேலை முடிந்தது. 

குளியலறையிலிருந்து "தேவா..." என்று அழைக்கும் குரல் கேட்டது. 

"என்ன?" என்றபடியே குளியலறைக்குப் பக்கத்திலிருக்கும் தன்னறைக்கு வந்தான் வந்தியத் தேவன். 

"ரம்யா குளிச்சிட்டா. அவளுக்கு ஸ்கூல் டிரஸ் பண்ணிவிடுங்க" என்றாள் நந்தினி. 

அந்த வேலையையும் சளைக்காமல் செய்தான். இருவரும் வேலைகளைப் பகிர்ந்து செய்வதில் தனி இன்பம் கண்டனர். அது சமையலாகவோ குழந்தைக்கு உடை மாற்றிவிடும் வேலையாகவோ ஏன் வீடு கூட்டுவதாகவோ கூட இருக்கலாம். ஆண், பெண் என்று பார்ப்பதில்லை. 

ஒருமுறை வந்தியத்தேவனின் நண்பன் அவசர வேலையாக தலவாக்கலை நகரத்திற்கு வந்த போது பிரதான வீதிக்கு உள்பக்கமாகச் செல்லும் வீதியிலுள்ள வந்தியத்தேவனின் வீட்டுக்கு வந்திருந்தான். 

வந்தியத்தேவனின் நண்பன் கபிலன் காலையில் வந்து மாலை நேரம் போய் விட்டான். காலை நேரம் வந்தியத்தேவன் வீடு கூட்டுவதைப் பார்த்து ஆச்சரியமாக இருந்தது கபிலனுக்கு. 

"டேய்... தேவா! நீ இதெல்லாம் கூட செய்வியா? ஏன் உன்னோட வொய்ஃப் செய்ய மாட்டாங்களா?" என்று கேட்டான் கபிலன். 

"ஏன் உனக்கு ஆச்சரியமா இருக்கா? இது மட்டுமில்ல, சமையலும் செய்யத்தெரியும். போய்ஸ், கேர்ள்ஸ்னு பிரிச்சுப் பேசுறது எனக்குப் பிடிக்காது. அதுக்குன்னு ரெண்டு பேரும் ஒன்ணுன்னும் சொல்ல முடியாது..." என்றான் வந்தியத்தேவன். 

"என்னோட வீட்ல வொய்ஃப் தான் எல்லாம் செய்வா. அவ இல்லாட்டி வேலைக்காரி செய்வா. இதெல்லாம் எதுக்குடா?" என்று மீண்டும் கேட்டான் கபிலன். 

"கபிலன்... நீ நினைக்கிற மாதிரி நா நினைக்கல. ஏதோ நீ முன்ன ஓட்டல்ல வேலை செஞ்சதுனால உன்னோட வீட்ல யாரும் இல்லாதப்ப மட்டும் செய்வே. நா எப்பவும் செய்வேன். உயர்வு, தாழ்வு எங்க வீட்ல இல்ல" என்று கூறினான் வந்தியத்தேவன். 

மனைவி ரம்யாவுக்கு உடை மாற்றச் சொன்ன போது இதுதான் வந்தியத்தேவனுக்கு ஞாபகம் வந்தது. 

#ஞாபகங்கள் #தொடர்கதை #கதை_சொல்லப்_போறேன் #வலைத்தளம் #எண்ணங்கள் #வாழ்க்கை #நட்பு #காதல் #அன்பு #சிகரம்பாரதி #சிகரம் 

No comments:

Post a Comment

Share it