Share it

Monday, October 8, 2018

ஆறுதல் பரிசு ஆயிரம் ரூபாய் | சிறுகதை | ராசு

குடிகாரம் பேச்சு விடிஞ்சாலும் தவறாது என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் சரியாக காலை ஆறு மணிக்கு பல்லடம் திருப்பூர் சாலையில் தயாராக நின்றிருந்தான் சண்முகன். 

பொன்ராஜின் கேன்வாஸ் கொஞ்சம் லூசாக இருந்தது சண்முகன் காலுக்கு. பொன்ராஜை தவிர யாரும் இரவல் கொடுக்க மாட்டார்கள் என்பது தான் அவ்வளவு லூசான கேன்வாசை சண்முகன் உபரி கயிறு போட்டு இறுக்கி கட்டிக்கொண்டு சக போட்டியாளர்களை பார்வையால் எடை போட்டபடி நின்று கொண்டிருக்க காரணம்.


*

மொத்தம் இருபது பேர். அதில் ஐந்து பேர் மட்டுமே அசால்ட்டாக இதெல்லாம் சாதாரணம் என்பது போல் நின்றிருந்தனர். போக ஒரு நான்கு பேர் பார்த்துக் கொள்ளலாம் ஒரு கை என்பது போல் குனிந்து நிமிர்ந்து உடம்பை தயார் செய்து கொண்டிருந்தனர். பிறகு ஒரு நான்கைந்து பேர் கொஞ்சம் பரபரப்பும் பதற்றமும் சேர்ந்து செய்த கலவையாக நின்றிருந்தனர். மீதி இருந்த பீஸ்கள் இதுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை. பொழுது போகாம இந்த பக்கம் வந்தமாக்கும் என்பதாக சாலை வாகனங்களை கொட்டாவி போட்டவாறே பார்த்துக் கொண்டிருந்தனர்.

பாக்கி இருந்த சண்முகன் மட்டுமே கேன்வாஸ் கழண்டு போகாமல் போய்சேர வேண்டும் என்ற கூடுதல் கவலையுடன் நின்றிருந்தான். துணைக்கு வந்திருந்த ராசப்பன் தன் XL Super மேல் அமர்ந்து சண்முகனின் அவஸ்தையை ரசித்துக் கொண்டிருந்தான். ராசப்பன் எப்பவமே அப்படி தான். அவன் ஒரு டைப்!

இன்னும் ஐந்து நிமிடம் இருக்கிறது. அதன் பிறகு எட்டு கிலோமீட்டருக்கு தள்ளி இருக்கும் வெற்றிக் கோட்டை நோக்கி ஓடத் தொடங்க வேண்டும். ஏனென்றால் இது சுதந்திர தின மாரத்தான் போட்டி என்று அறிவிக்கப்பட்டிருந்தது நகரெங்கும் விளம்பர தட்டிகள் மூலம். 14 ம் தேதி போட்டி 15 ம் தேதி பரிசளிப்பு விழா என்று.

முதல் பரிசு ரூபாய் 5000
இரண்டாம் பரிசு ரூபாய் 3000
மூன்றாவது பரிசு ரூபாய் 2000
ஓட்டத்தை நிறைவு செய்த அனைவருக்கும் ஆறுதல் பரிசு ரூபாய் 1000




கடைசியில் இருந்த ஆயிரம் ரூபாய் தான் சண்முகனை தூண்டில் போட்டது பார்த்தவுடன். தூண்டிலில் சிக்க வசதியாக ஒரு குத்துமதிப்பான போதையில் வேறு இருந்தான். அதே போதையில் மற்றொரு கட்டிங் வாங்கி கொடுக்க தயாராக இருந்த வேலுச்சாமியிடம் சபதமும் செய்து விட்டான்.

ராசப்பனிடம் பத்து ரூபாயை கொடுத்து இரண்டு வாட்டர் பாட்டில் வாங்கி வண்டியில் வைத்துக் கொள்ளச் சொன்னான்.

"ஒரு பாட்டிலே இருபது ரூபாடா! பத்து ரூபாய்க்கு எப்டி ரெண்டு பாட்டில் வாங்கறது?"

"பத்தாதுக்கு போட்டு அட்ஜஸ் பண்ணிக்க மாப்ள!"

என்ற சண்முகனிடம் பத்து ரூபாயையும் திருப்பி கொடுத்து விட்டு முனுமுனுத்தவாறே பாட்டில் வாங்கச் சென்றான் ராசப்பன்.

ஆறு மணிக்கு தொடங்கும் என்று சொன்ன போட்டி சரியாக 6.30 க்கு தொடங்கியது. ஒரு கிலோமீட்டர் வரை எந்தச் சிரமமும் தெரியவில்லை சண்முகனுக்கு. சொல்லப்போனால் பாதிப்பேர் அப்போதே அவனை விட பாதி தூரம் பின்தங்கி இருந்தனர். இரண்டு பேர் மட்டுமே அவனை முந்திச் சென்றிருக்க மற்றவர்கள் அவனுக்கு இணையாக ஓடிக்கொண்டிருந்தனர். 

எதிரே 17A வந்து கொண்டிருந்தது. உள்ளே தெரிந்த முகங்கள் தென்படுகிறதா என்று தேடியவனின் பார்வையில் ஜன்னலோரம் அமர்ந்திருந்த சுமதி தென்பட்டாள்! விசிலடித்தவனை பார்த்ததும் "இதுக்கொண்ணும் கொறச்சலில்ல!" என்ற பாவனையில் முகத்தை திருப்பிக் கொண்டாள். ஆயிரம் ரூபாய் வந்தொடனே இவகிட்ட வாங்குன முன்னூறு ரூபாய மொதல்ல திருப்பி குடுத்துரணும் என்று நினைத்தான். கடைசி இருக்கையில் இருந்து இரண்டு கைகளையும் நீட்டி "சம்முவா....." என்று கூவிய குரலுக்கான முகத்தை பார்த்தான். பழனிச்சாமி தான் அது. ஆயிரம் ரூபாயில் முதல் மண் விழுந்தவிட்டதாக தோன்றியது சண்முகனுக்கு. பழனிச்சாமி குறுக்கே போனால் பூனைகளே சகுனம் சரியில்லையென்று திரும்பிச் சென்று விடும். குலதெய்வத்தை வேண்டிக் கொண்டான்.

மூன்று கிலோமீட்டர் முடிந்து விட்டதாக மஞ்சள் தொப்பி போட்ட சிறுவனை அறிவிப்பு தட்டியை கையில் கொடுத்து நிற்க வைத்திருந்தார்கள்.

வழியெங்கும் குறிப்பிட்ட இடைவெளில் மஞ்சள் தொப்பி சிறுவர்கள் வாட்டர் பாக்கெட்டை ஓடுபவர்களுக்கு நீட்டியபடி நின்று கொண்டிருந்தனர்.

பாக்கெட் தண்ணீர் குடலை கெடுக்கக்கூடியது என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை சண்முகனுக்கு உண்டு. ராசப்பனுக்கு ஒரு ரிங் விட்ட மூன்றாவது நிமிடத்தில் வந்து சேர்ந்தான். பாட்டிலை வாங்கி திறந்து வாயில் தண்ணீர் ஊற்றி துப்பினான் இப்படி மூன்று முறை. தலையில் கொஞ்சம் ஊற்றிக் கொண்டான். இதெல்லாம் ஊர் கிரிக்கெட் டீம் கேப்டன் சின்னக் குஞ்சான் குடுத்த யோசனை.

போட்டியிலிருந்து மூன்று பேர் விலகி வரும் வழியில் இருந்த ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருப்பதாக ராசப்பன் சொன்ன தகவல் சண்முகனுக்கு சோர்வை போக்க உதவியாக இருந்தது.

ஓடத்தொங்கினான்.

எதிரில் சுந்தரேஸ் மாம்ஸ் புல்லட்டில் ஆளுயர பால் கேனை கட்டிக்கொண்டு வந்தார். சண்முகனை பார்த்ததும் அவன் ஓட்டத்தை என்ன நினைத்தாரோ சற்று பதற்றத்தோடு வண்டியை நிறுத்தினார். திருப்பூர் சரவண பவன் ஹோட்டலுக்கு தன் பண்ணையிலிருந்து கறந்த பாலை தினம் காலை ஐந்து மணிக்கு எடுத்துப் போவார். பாலை கொடுத்த கையோடு இட்லி தயாராகும் வரை காத்திருந்து முதல் போணி பண்ணிவிட்டுத்தான் வருவார்.

ஓடிக்கொண்டே விவரத்தை சொன்னான் சண்முகன்.

"ஏன்டா மாப்ள ஆயிரம் ரூபாய்க்கு ஆசப்பட்டு ஒன்னு கெடக்க ஒன்னு நடந்து போச்சுனா! உங்கப்பன் ஆத்தாளுக்கு பையன் போச்சேடா"

ஓடுவதை நிறுத்தினான் .

"ஏ மாம்ஸ்! உனக்கு வாய்ல நல்ல வார்த்தையே வராதா? வந்தா வந்த சோலிய பாத்துட்டு போவ மாட்டயா" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே ராசப்பன் வந்தான். மேலும் நாலு பேர் பஸ் ஏறி பல்லடத்துக்கு டிக்கெட் எடுத்து சென்று விட்டதாக சொன்னான். வாட்டர் பாட்டிலை வாங்கி ஒரு வாய் குடித்து விட்டு ஓட முயன்றவனை "மாப்ள இன்னும் மூனு மைல் போகணும். பேசாம நாஞ்சொல்ற மாதிரி செய். மொத பிரைஸ் வாங்கிடலாம்" என்று நிறுத்தினார்.

"வண்டில கொண்டு போய் எறக்கி வுட்றயா மாமா?"

"அதேதா மாப்ள! அதா தெரீது பாரு ஒரு புங்க மரம்! அங்க லெப்ட்டுல ஒரு மண்ணு தடம் பிரியும். அதுல கொஞ்ச தூரம் போனதும் நேரா வடக்க ஒரு இட்டேரி போகும்! அதுலயே போனா நீ போய்ச்சேர வேண்டிய எடம் வந்துரும். உக்காரு மாப்ள புடுபுடுனு கொண்டு போய் எறக்கி உட்றேன்"

"அத்தை உன்னய செருப்புல போட்றது தப்பே இல்ல மாமா! பேசாம ஊரு போயி சேரு. நான் பாத்துக்கறேன்!"

சிரித்துக் கொண்டே போய்விட்டார்.

ஒரு கிலோமீட்டரை கடந்தவனுக்கு மீதி இரண்டு கிமீ இமயமலையை விட உயரமாக தோன்றியது. கால்கள் இரண்டும் உணர்வற்று நடுங்க ஆரம்பித்தன. ஒரு குளுக்கோஸ் பாக்கெட் இருந்தால் கொஞ்சம் வாயில் போட்டால் உடம்பு தெம்பாகிவிடும் என்று தோன்றியது. ராசப்பனுக்கு போன் அடித்தான்.

"வண்டி பஞ்சர் ஆய்டிச்சு மாப்ள! நீ போய்ட்டே இரு பின்னாடி வந்துடறேன்!" என்றான்.

சாபம் ராசப்பனுக்கு கொடுப்பதா அவன் வண்டிக்கு கொடுப்பதா என்ற குழப்பத்தில் அமைதியாக ஓடத்தொடங்கினான்.

சுமதி மூஞ்சியை திருப்பிக் கொண்ட காட்சி ஞாபகம் வர உடம்பு ஒரு உதறு உதற நூறு மீட்டர் பந்தயத்துக்கான வேகத்தை அவனுக்கு கொடுத்தது. முன்னால் சென்று கொண்டிருந்த இரண்டு பேரைக் கடந்தான்! சுமதீ.....! மேலும் இரண்டு பேர் பின் தங்கினர். இன்னும் நான்கு கிமீ இருந்தாலும் ஓடிவிட முடியும் என்று சண்முகன் உணர்ந்த போது வெற்றிக்கோட்டில் பலத்த ஆரவாரத்துக்கிடையில் வரவேற்கப்பட்டான்.

இரண்டாவது பரிசு பெற்றவர் என்று சண்முகனின் பெயரும் எண்ணும் அறிவிக்கப்பட்டது.

முதல் பரிசு வாங்கய இளைஞன் கைகொடுத்து வாழ்த்துச் சொன்னான்.

"நீங்க பல்லடமா? நான் உங்கள பாத்ததே இல்லையே"

"பல்லடம் இல்லீங்க! நமக்கு அய்யம்பாளையங்க"

"தினமும் பிராக்டீஸ் பண்ணுவீங்ளா?" கேட்டுக் கொண்டே அவன் பார்வை சண்முகனின் கேன்வாஸ் மேல் பதிந்தது. ஆமாம் என்றால் சத்தியமாக நம்பப் போவதில்லை அவன்.

"வாரத்துல ரெண்டு நாளோ மூனு நாளோ பண்ணுவனுங்க"

"அந்த ஊர்ல கிரௌண்டு இல்லியே.... வேற எங்க பிராக்டீஸ் பண்ணுவீங்க?" மூன்றாவதாக வந்தவனும் வந்து சேர்ந்து கொண்டான். அவனும் வாழ்த்து சொன்னான். அவர்கள் இரண்டு பேரும் நண்பர்கள் போல ராசப்பனை இன்னும் காணம்! "ஒரு டீ சாப்டுட்டே பேசலாங்ளா?"

பேக்கரியில் இரண்டு ஹார்லிக்ஸ் ஒரு டீ க்கு ஆர்டர் கொடுத்தான் மூன்றாவது பரிசு.

முதல் பரிசு கேட்ட கேள்வி ஞாபகம் வந்தது! பாவம் இவன் என்று நினைத்த போது சண்முகனுக்கு லேசாக சிரிப்பு வந்தது.

"கிரௌண்டுக்கெல்லாம் போய் ஓடணும்னு நெனச்சதில்லீங்க! பசங்க நாங்க வாரத்துல ரெண்டு நாள் சரக்கு போடுவம்ங்களா... எல்லாம் முடிஞ்சு வீட்டுக்கு போக எப்டியும் மணி பதனொண்ணுக்கு மேல ஆயிரும்! குஷில இருந்தா பயங்கரமா பாட்டு வரும் நமக்கு. அதும் பக்கத்துல யாரும் இல்லீனு வைங்க தியாகராஜ பாகவதர் பாட்டு ஒன்ன எடுத்து உடுவம்பாருங்க! அப்பதான் ஒரு நாய் சன்னமா இருட்டுக்குள்ள இருந்து 'வள்'ளுங்கும். அதுக்கெல்லாம் நிறுத்த முடியுங்களா... கொஞ்சங்கொஞ்சமா சத்தம் அதிகமாகும். நாலஞ்சு எடத்துல இருந்து சத்தம் வரும். திடீர்னு ஒன்னு மட்டும் பாஞ்சு வரும் பாருங்க! உசுர கையில புடிச்சுட்டு திரும்பி எடுப்பம் பாருங்க ஓட்டம்.... அதான் நமக்கு பிராக்டீஸ் பொழுதுபோக்கு எல்லாம்! அந்த நாய் சங்கிப்போய் நிக்கற வரைக்கும் பிராக்டீஸ் தானுங்க. ஒவ்வொரு நாள் வெடிஞ்சே போகும்ங்க "

இரண்டு பேரும் ஜெர்க்காகி உட்கார்ந்திருந்தனர். முதல் பரிசு தனக்கு பழக்கமில்லை என்றதால் மூன்றாம் பரிசும் சண்முகனும் மட்டும் சிகரெட் புகைத்தார்கள்.

"இப்பிடித் தானுங்க ஒரு நாளு மனசு கஷ்டமா இருந்ததுல பாட்டெல்லம் மூட்ட கட்டி வெச்சுட்டு சிவனேனு போயிட்டிருந்தேன். மணி பண்ணெண்டே ஆயிப்போச்சு. நல்ல மப்பு வேற அன்னிக்கு! திடீர்னு அஞ்சாறு நாயிக ஒட்டுக்கா காட்டுக்கத்து கத்தீட்டு வருதுக. பக்கத்துல வந்தருச்சுக போலனு திரும்பி கூட பாக்கல! எடுத்தம் பாருங்க சவாரி! கொஞ்ச தூரம் போனதுமே அதுங்க சத்தத்த காணம். செரீன்ட்டு நாலெட்டு வச்சுருப்பேன்! மறுபடியும் கொல வெறியோட கத்தீட்டு பக்கத்துலயே வந்துருச்சுக போல! நாய் தொரத்துதுனு தெரிஞ்சா சுனாமி தோத்துப்போகும் நம்மகிட்ட! கொஞ்ச தூரம் போனதும் அதுங்கள காணம்! ஒரு நிமஷம் கூட ஆகல மறுபடியும் வருதுக! இப்பிடியே ஒரு மணி நேரம். மப்பு கிப்பெல்லாம் காணாம போச்சு! கடசீல ஒரு தடவ சத்தம் கேக்க ஆரம்பிச்ச ஒடனே டப்புனு நின்னு போச்சுங்க! அப்டியே டொய்ங் டொய்ங் டொய்ங்னு செல்போன் ஆப் ஆகற சத்தம் பேன்ட் பாக்கெட்ல கேக்குது. எடுத்து பாத்தா சார்ஜ் முடிஞ்சு ஆப் ஆகி கெடக்குது அது! வெகு நேரம் கழிச்சு தான் பிரிஞ்சுது வக்காலி எவனோ நம்ம வீக்னச தெரிஞ்சுட்டு நாய் கொரைக்கற சத்தத்த ரிங்டோனா வெச்சு நம்மள கவாத்து வாங்க வச்சிட்டானுகனு! நல்ல வேள சைனா செட்டுனங்கறதால சீக்கிரம் படுத்துருச்சு! கம்பெனி செட்டா இருந்திருந்தா வெடிஞ்சிருக்கும்"

முதலும் மூன்றும் வாயை கைவைத்து பொத்தியபடி சிரிப்பை அடக்கிக் கொண்டிருந்தார்கள்.

"ஏங்க நல்லா சிரிங்க! இதுல என்ன கெடக்குது! ஒவ்வொரு நாள் நானே இத நெனச்சா பயங்கரமா சிரிச்சு கண்ணு ரெண்டுலயும் தண்ணியே வந்துரும்"

மூன்று பேக்கரிக்கு காசு கொடுத்து விட்டு வர மூவரும் வெளியே வரவும் ராசப்பன் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

அவனிடம் போனை வாங்கி சுமதிக்கு போன் அடித்தான் "ஏய் குள்ளி... மூஞ்சிய அந்தக் திருப்பு திருப்பீட்டு போன! உனக்கு நான் எவ்வளவு குடுக்கோணும்? முன்னூறா? குடுக்க முடியாது போ!"

இப்பிடியே ரோசப்பட்டு எல்லாருக்கும் செட்டில் பண்ணனும்னா தெனம் மூனு போட்டீல ஜெயிக்கோணும் என்று முனுமுனுத்தவாறே வண்டியில் உட்கார்ந்து முதலுக்கும் மூன்றுக்கும் டாட்டா வைத்தான் சண்முகன். 

-ராசு 





ஆறுதல் பரிசு ஆயிரம் ரூபாய் | சிறுகதை | ராசு  
http://sigaram-one.blogspot.com/2018/10/aarudhal-parisu-aayiram-roobaa.html 
#சிறுகதை #தமிழ் #வாழ்க்கை #பணம் #போட்டி #ஓட்டப்பந்தயம் #பரிசு #சிகரம் #வலைத்தளம் #கடன் #வானவல்லி #கதை #வாசிப்பு 

1 comment:

  1. வணக்கம்,

    www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த தமிழ்US திரட்டி.

    இத் திரட்டியின் மூலம் உங்கள் செய்திகள், பதிவுகள், கவிதைகள் உடனுக்குடன் பலரைச் சென்றடையும் வகையில் பகிர்ந்து கொள்ளமுடியும். இதனால் உங்கள் தளங்களிற்கான வருகையாளார்களின் எண்ணிக்கையையும் அதிகரிகத்துக் கொள்ளலாம்.

    அதேவேளை இத் திரட்டியில் உங்களின் பதிவைப் பகிர்ந்து இத்திரட்டிக்கான ஒத்துழைப்பை நல்குவதுடன், எமது பதிவுகள் மற்றவர்களைச் சென்றடைய facebook, twitter போன்ற சமூக வலைத் தளங்களை மட்டுமே நம்பியிருக்கிற நிலைமையையும் மாற்றமுடியும் என நம்புகிறோம்.

    நன்றி..
    Tamil US
    www.tamilus.com

    ReplyDelete

Share it