Share it

Tuesday, August 28, 2018

முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | அத்தியாயம் - 01 | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா

வண்ணங்கள் நிறைந்த வாழ்வில் கருமைக்கு எப்பொழுதும் தனியிடம் உண்டு. அதே கருமை ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருளான இருண்ட நாட்களாய் ஆழமாய்ப் படிந்திருக்கும். அதை மறக்க நினைப்போரும் உண்டு... மறைக்க நினைப்போரும் உண்டு... அதேபோல் மறை(ற)ந்து இருக்கும் வரலாறு இன்றளவும் தமிழக வரலாற்றில் உண்டு. அதை வெளிக்கொணரப் பல வரலாற்று அறிஞர்கள் தங்களின் ஆய்வைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களின் ஆய்வுகளை மையமாய்க் கொண்டு தமிழக வரலாற்றையும் இருண்ட காலத்தைப் பற்றியும் சோழர் சரித்திரத் தேடல் என்ற தலைப்பில் கட்டுரை வடிவில் அளித்தார் திரு. மாரிராஜன் அண்ணண் அவர்கள். அவரளித்த தீக்குச்சியின் வெளிச்சத்தின் மூலம் இருண்ட காலத்தைக் காண ஆவல் கொண்டேன் நான். அந்த ஆவலே இந்தக் காலத்தைப் பற்றி எழுதவும் தூண்டியது. அந்தக் காலத்தை நோக்கிப் பயணப்படப் பல ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு நூல்களும் கட்டுரைகளும் பல நல்லுள்ளங்களின் ஆதரவும் இத் தொடரை எழுத வழிநடத்திச் சென்றது. யாரைப் பற்றியது? எந்தக் காலமது? என்ன நடந்தது? பார்ப்போம்.



காலத்தால் கணிக்க இயலாத தொன்மை வாய்ந்த தமிழினம், பெரும் காவியங்களையும் இலக்கியங்களையும் படைத்து மொழியுடன் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், வீரத்தையும் வளர்த்துக் கொண்டிருந்த காலத்தில் வேங்கட மலையை ஒட்டிய பகுதியை அரசாட்சி செய்த வம்சமொன்று பெரும் படையுடன் தொண்டை மண்டலத்தின் வழியே சோழ தேசத்தினுள் நுழைந்து சோழத்தைத் தன் ஆளுகைக்கீழ் கொண்டு வந்து, பின் பாண்டிய தேசத்தையும், சேர தேசத்தையும் அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து சுமார் (கி.பி 250 முதல் கி.பி 575 வரை) முன்னூறு ஆண்டுகள் மூவேந்தர்களையும் அடக்கியாண்டு ஆளுமை செலுத்தி வந்தார்கள் களப்பிரர் எனும் ஓர் இனம். இவர்கள் யார்? இவர்களின் ஆட்சிக் காலத்தில் நடந்த போர்கள், அந்தக் காலகட்டத்தில் மக்களின் வாழ்க்கை முறை, சமயநெறிகள், மன்னர்களின் ஆட்சி முறைகள் என எந்தத் தகவலும் பெருமளவு கிடைக்கப் பெறவில்லை. சில கல்வெட்டுகள், சங்க இலக்கியப் பாடல்கள், பெரிய புராணப் பாடல்கள் மூலம் மட்டுமே இவர்களின் தகவல்களை அறிய முடிகிறது. அவ்வாறு கிடைத்த தகவல்களை வைத்தே தமிழ் நாட்டில் களப்பிரர்கள் ஆளுமை செலுத்தியதை ஆய்வு செய்துள்ளார்கள் ஆய்வாளர்கள். அவர்களின் ஆய்வு நூல்களை அடிப்படையாய்க் கொண்டு நான் இத்தொடரை எழுதியுள்ளேன். இந்தத் தொடர் அக்கால நிகழ்வை ஓரளவேணும் உணர்த்தும் என்ற நம்பிக்கையில் தொடர்கிறேன். இனி பயணிப்போம்.


அகண்ட பாரதம் அன்று பல நாடுகளாய்ப் பிரிந்திருந்த காலம். நாட்டின் மன்னர்களுக்கிடையே தன் நாட்டை விஸ்தரிக்கும் எண்ணம் மேலோங்கிப் பல பிரிவுகளைக் கொண்ட படைகளின் மூலம் அண்டை நாட்டைப் பிடித்துத் தம் வீரத்தைப் பறைசாற்றி வந்த சமயம். அந்த சமயத்தில் பாரதத்தின் வடக்குப் பகுதியில் நந்தவம்சத்தை சாண்டில்யரின் துணையுடன் சந்திர குப்த மௌரியர் வேரோடு அழித்து சந்திர குப்தர் தலைமையில் மகத தேசத்தைக் கைபற்றிக் கொண்டு மௌரிய வம்சம் பெரும் சாம்ராஜ்யத்தை நிறுவியது.

அதே சமயத்தில் தமிழகத்தில் மூத்த குடிகளான சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்து வந்தார்கள். பொன்னாலான மாடமாளிகைகள் அமைத்தும் அதற்கு அரண்களாய் அகழியையும், கோட்டை மதில்களையும், நேர்த்தியான வடிவமைப்பில் நகரங்களைக் கட்டமைத்தும் நாட்டையும் மக்களையும் காக்கப் பலவகைப் படைகளைக் கொண்டும் பல்வகைத் தொழில்களைக் குடிகள் செய்து கொண்டிருக்க நேர்மையுடன் ஆட்சி செய்து வந்தார்கள் மூவேந்தர்கள்.

கடல்வழியே கிரேக்கர்களுடனும், ரோமானியர்களுடனும் இன்னும் பிற தேசத்தவருடனும் முத்து, அகில், சந்தனம் மற்றும் வாசனைத் திரவியங்களை ஏற்றுமதி செய்து தன் நாட்டின் செல்வத்தைப் பெருக்கிக் கொண்டிருந்தார்கள் மூவேந்தர்கள். உள்நாட்டு வாணிகமும் முறைப்படுத்தப்பட்டு ஐவகை நில மக்களும் தங்களிடம் உள்ள பொருட்களுக்கு மாற்றாய்ப் பிற பொருட்களைப் பெற்று பண்டமாற்று முறையின் மூலம் சிறப்பாய் வாணிபம் நடத்திக் கொண்டிருந்தார்கள். மௌரியப் பேரரசை உயர்நிலைக்கு உயர்த்தியவரான அசோகர் தென்னகத்தின் அழகில் மயங்கி மகதத்திலிருந்து தெற்கு நோக்கிப் படையெடுத்து வந்தார். 

அசோகரின் படை வடக்கு எல்லையை விரிவுபடுத்தி, வரும் வழியெங்கும் வெற்றி மாலை சூடி பாரத்தின் தென்கோடிக்கு மௌரியர்களின் காலாட்படை, பெரிய தேர்ப்படை, யானைப் படை குதிரைப்படையுடன் வடுகர்களின் படையும் மற்றும் கோசர்களின் படையும் சேர்ந்து வந்தது.

முதலில் வடுகர் படை துளுவ நாட்டிற்குள் நுழைந்து பட்டத்து யானையை வீழ்த்தி அரசனான நன்னனையும் வீழ்த்தி , துளுவநாட்டின் தலைநகரமான பாழியையும் கையகப்படுத்தி படைகளுடன் அங்கேயே தங்கித் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டார்கள் வடுகர்கள். கோசர் படையானது சேர தேசத்திற்குள் நுழைந்து சேரரையும் கைக்குள் அடக்கிவிட்டு முன்னே வடவடுகரான கோசரின் படையை விட்டு, பின் மௌரியப் பேரரசின் பெரும் படை சோழநாட்டிற்குள் நுழைந்தது. வந்தவர்கள் அழுந்தூர் வேளான திதியனைத் தாக்கினார்கள். வேங்கையாய்ப் பாய்ந்து தாக்கினார் திதியனும். இப்படையெடுப்பை அறிந்த சோழ மன்னனான இளஞ் சேட்சென்னி தனது படையுடன் வந்து கோசரை வீழ்த்தி சோழ நாட்டை விட்டுத் துரத்தியடித்தது மட்டுமில்லாமல் இனி தெற்கே வரவேண்டும் என்ற எண்ணமே மௌரியர்களுக்கு வரக்கூடாது என்ற எண்ணத்தில் துளுவ நாட்டிலுள்ள பாழி வரையும் இளஞ் சேட்சென்னி துரத்தி வந்து பகைவர்களின் படையை அழித்து ஒழித்து காவல் நிறைந்த பாழியையும் சேர நாட்டையும் மீட்டெடுத்தார். இதனாலேயே இவர் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி என்றழைக்கப்பட்டார். 

வட இந்தியாவிலிருந்து தற்போதைய மைசூர் வரை தன்னாட்சிக்குக் கீழ் கொண்டு வந்து தன்நாட்டை விஸ்தரித்த அசோகர் தென்னாட்டை மட்டும் கைப்பற்ற முடியாமல் சோகமாய்த் திரும்பினார். இதற்குப் பிறகு மூவேந்தர்களுக்கிடையே பெரும் மனமாற்றம் ஏற்பட்டு வடநாட்டவர்களின் படையெடுப்புகளை ஒன்றுபட்டு எதிர்த்தார்கள். இதனால் வடநாட்டினர் தென்னாட்டின் மீது படையெடுப்பது என்பது பொய்த்துப் போய்க் கொண்டிருந்தாலும் அவ்வப்பொழுது சிறுசிறு எல்லைப்போர்கள் நடந்து கொண்டுதான் இருந்தது. 



மௌரியர்களின் ஆட்சியில் அசோகர் மறைந்ததும் மத்தியில் திறமையான ஆட்சியின்றி தடுமாறியது மகதம். வாரிசு சண்டைகள், உள்நாட்டுக் கிளர்ச்சிகள், பிறநாட்டினர் படையெடுப்புகள் போன்ற காரணங்களினால் மௌரிய வம்சம் கொஞ்சம் கொஞ்சமாக சிதைவடைந்தது. அசோகரின் காலத்தில் சாதவாகனர் என்ற ஆந்திர தேசத்தவர்கள் அம்மாகாணத்தை மௌரியர்க்குக் கட்டுப்பட்ட அரசர்களாய் அரசாட்சி செய்துவந்தார்கள். மௌரியர்கள் வீழ்ச்சிக்குப்பின் ஆந்திர தேசத்தை சுயராஜ்ஜியமாக்கி அரசாளத் துவங்கிவிட்டார்கள். இவர்களை எதிர்த்தவர்களை எல்லாம் வலிமையான காலாட்படை, குதிரை மற்றும் யானைப் படை கொண்டு அடக்கி ஆளுமை செலுத்தினார்கள். வடக்கே கங்கையிலிருந்து தெற்கே வேங்கட மலையின் எல்லை வரை விரிந்து பெரும் சாம்ராஜ்யமாய் வளர்ந்தது. 

சாதவாகனர்கள் தங்கள் தேசத்தைப் பல மாகாணங்களாகப் பிரித்தார்கள். ஒவ்வொரு மாகாணத்திலும் தனக்குக் கீழ்ப்படிந்த சிற்றரசர்களுக்கு நிர்வாகப் பொறுப்பைக் கொடுத்து சாதவாகனர் அவர்களின் பேரரசை ஆட்சி செய்து வந்தார்கள். சாதவாகனர்களின் தென்பகுதியின் ஆட்சிப்பொறுப்பைப் பல்லவர்கள் ஏற்றிருந்தார்கள். அந்தச் சமயத்தில் பல்லவர்களுக்கும் தெற்குப்பகுதியில் உள்ள சிற்றரசர்களுக்கும் பல எல்லைப்போர்கள் நிகழ்ந்து கொண்டிருந்தது. எத்தனை பேர் பல்லவர்களின் கட்டுப்பாட்டிலிருக்கும் தென்பகுதியின் மேல் போர் புரிந்தாலும் தன்னிலையை இழக்காது எதிர்த்து வந்தவர்களை வலிமையுடனும் சிறப்பான திட்டமிடுதலுடனும் துரத்தியடித்தார்கள். இவ்வாறு அடிபட்ட பாம்பாய் அடங்கியவர்களில் களப்பிரர்களும் ஒருவர். 

அடிமை நாடாய் இருப்பதை விரும்பாத களப்பிரர்களின் மேல் பல்லவர்கள் பலமுறை போர் தொடுத்தார்கள் காரணம் களப்பிரர்களின் வாழும் வேங்கட மலை பிரதேசத்தை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள அடிக்கடி எல்லைத் தகராறு நடந்து வந்தது. ஒவ்வொரு முறையும் தன்னுடைய வேங்கட மலைப் பகுதியைக் கைவிடாமல் எதிர்த்து நின்றார்கள் களப்பிரர்கள். சற்று வலிமை பெற்றதும் பல்லவர்களின் இடத்தைக் கைப்பற்றக் களப்பிரர்கள் போர் தொடுத்தார்கள். இவ்வாறு இருவருக்குள்ளும் அடிக்கடி போர் நிகழ்வது வாடிக்கையாய் இருந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் வீழ்த்த சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். யார் இந்தக் களப்பிரர்கள்? 

கருநாட தேசத்திலிருந்து மைசூர் தேசத்தின் சிரவண பௌகொள வட்டாரத்தில் கோலாரிலுள்ள (கோலாலபுரம்) நந்தி மலையை உள்ளடக்கிய தேசமாய் இந்த களபப்பு ராஜ்ஜியம் இருந்தது. இந்தப் பகுதிகளை ஆட்சி செய்து வந்தவர்களே களப்பிரர்கள் ஆவார். வேளாண்மையை முதன்மைத் தொழிலாய்க் கொண்டு வாழ்ந்து வந்தவர்கள் வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு ராஜ்ஜியத்தின் கீழ் சிற்றரசர்களாய் அரசாட்சி செய்தவர்கள் களப்பிரர்கள். இவர்களின் ஆட்சிமொழி பாலி, பிராகிருதம் ஆகும். இவர்களின் சமயம் எது என்பது தெளிவாய்த் தெரியாவிட்டாலும் சமண, பௌத்த மதங்களைப் பெருமளவு இவர்கள் ஆதரித்து வந்தார்கள். சங்கப் பாடல்களில் திருமாலை வழிபட்டதாய்க் குறிப்பிடுகிறார்கள்.

காலங்கள் உருண்டோட கி.பி மூன்றாம் நூற்றாண்டு வாக்கில் களப்பிரர்கள் வேங்கட மலை வரை தங்களின் ஆட்சியை விரிவுபடுத்தினார்கள். இந்தக் காலட்டத்தில் மொத்தத் தென்னிந்தியாவும் பல ஆட்சி மாற்றங்களை சந்திக்கத் தயாராகிக் கொண்டிருந்தது. மூவேந்தர்கள் பல எல்லைப் போர்களைக் கொங்கு நாட்டை ஆட்சி செய்து வந்த சிற்றரசர்கள் மீது நடத்தத் துவங்கினார்கள். தனது எல்லைகளை விரிவுபடுத்தும் வேட்கை வேகமாய்ப் பரவி வந்த சூழலில் சாதவாகனர்களும் தங்களின் பலமான ஆட்சியைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்தும் வந்தார்கள். இது பல ஆட்சி மாற்றத்திற்கும் வித்திட்டது. 

தனது வீரத்தைப் பறைசாற்றும் எண்ணத்தில் அடிக்கடி போர் நடத்தினார்கள் அன்றைய தென்னக அரசர்கள். இதனால் நாட்டின் நிதி, நிர்வாகம் அனைத்தும் குலையத் தொடங்கியது. தென்னகத்து சிற்றரசர்களின் வலிமை அதிகரிக்கத் தொடங்கி மூவேந்தர்களின் ஆதிக்கம் குறையத் தொடங்கியது.

சாதவாகனர்களின் பெரும் ராஜ்ஜியம் வீழத் தொடங்கியதை அறிந்த பல்லவர்கள் முன்னெச்சரிக்கையாக சுதாகரித்து தனக்கானதொரு சுயராஜ்ஜியத்தை நிறுவ முற்பட்டார்கள். தென்னகதில் தன்னுடைய நிர்வாகத்தின் கீழ் இருந்த பகுதிகளை முழுமையாய்த் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து ஸ்திரமான ஒரு நாட்டை உருவாக்கிக் கொண்டதும் தனது எல்லைகளை விரிவுபடுத்தும் எண்ணம் தானாய் அவர்களுக்குள் பிறந்தது. 

அந்தக் காலத்தில் சோழப் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்த தொண்டை மண்டலத்தைத் தன்னுடைய ஆளுகைக்குக் கீழ்க் கொணர்ந்திடப் பேராவல் கொண்டார்கள் பல்லவர்கள். அன்று அருவா நாடு, அருவா வடதலை நாடு என இரண்டு நாடுகளை உள்ளடக்கியதாக இருந்தது இம்மண்டலம். கல்வியிலும் வளமையிலும் வேத சாலைகளும் புத்த விகாரங்களும் சைவ வைணவ ஆலயங்களும் யவனர்கள் வாணிகம் செய்யும் இடமாகவும் சிறப்புற்று இருந்தது தொண்டை மண்டலம். இவ்வாறு அழகான தேசமாய்த் தொண்டை மண்டலம் விளங்கிட சோழப் பேரரசரான கரிகாலரின் பெரும் முயற்சியே காரணமாய் இருந்தது. 

கரிகாலரை சேர, பாண்டியர் என இரு அரசர்களும் வெண்ணி எனும் இடத்தில் எதிர்த்தனர். அவர்களை வென்று பின் தென்பாண்டியும் சேர நாட்டையும் வென்று தன்னுடைய சோழப்பேரரசின் கீழ் சேர்த்து வடக்கு நோக்கி நகர்ந்து அருவா நாட்டை அடைந்து அங்கிருந்த குறும்பரை அடக்கி அருவாளரையும் வென்று வேங்கட மலை வரை தனது சோழநாட்டை விரிவுபடுத்தினார் கரிகாற் சோழர். தொண்டை மண்டலத்தை இருபத்தி நான்கு கோட்டங்களாகப் பிரித்து அங்கு வேளாளர்கள் பலரைக் குடியமர்த்தி இந்த இரு நாடுகளையும் தொண்டை மண்டலம் என்ற ஒரு தேசமாக்கி அதன் தலைநகரமாகக் காஞ்சியை நிர்மாணம் செய்து அகழி சூழ்ந்த பெரும் அரண் அமைத்து பெரும் மாட மாளிகைககள் அரண்மனைகளை அமைத்து அந்த தேசத்திற்கு தன் இனத்தவரில் ஒருவரை சிற்றரசராய் நியமித்து காடுகளை சம நிலமாக்கச் செய்து நீரினை சேமிக்கப் பல ஏரிகள் அமைத்து வாய்க்கால் மூலமாய் நாட்டின் மூலைக்கும் நீரைக் கொண்டுபோய்ச் சேர்த்து துளிநீரும் வீணாகாமல் மதகுகள் பல அமைத்து வேளாண்மை செழிக்கச் செய்தார். சோழ நாடு சோறுடைத்து என்ற சிறப்பும் கிடைத்தது. பிறகே வடக்கு நோக்கித் தன் படையுடன் சென்று பல தடைகளைத் தகர்த்து இமயத்தில் புலிக்கொடியை நிலைநாட்டினார் கரிகாற் சோழர்.

இவ்வாறு கரிகாற் சோழரின் ஆட்சியில் உதயமான தொண்டை மண்டலமானது பொன் விளையும் பூமியாக விளங்கியது. அவருக்கு பிறகு வந்த சோழ அரசர்களும் தொண்டை நாட்டையும் அதன் தலைநகரமான காஞ்சியையும் கண்ணிமைபோல் பேணிக்காத்து வந்தார்கள். கலையிலும், கல்வியிலும், கேள்விகளிலும், வேதங்களைப் போதிப்பதிலும் சிறந்து பல சமயங்கள் கலந்திருந்தாலும் தனித்துவமாய்க் காஞ்சி விளங்கியது. ஆனால் கால மாற்றத்தில் இப்பெருமை மிக்க தேசம் பல காரணங்களினால் சோழத்தின் கரத்திலிருந்து நழுவியது. தொண்டை மண்டலம் நழுவிய காரணத்தால் தென்னகத்தில் பல மாற்றங்களும் நிகழ்ந்தது. எப்படி?

மீண்டும் வருவோம்...

- சதீஷ் விவேகா

#முடிமீட்ட_மூவேந்தர்கள் #சதீஷ்_விவேகா #சரித்திரத்_தொடர் #வரலாறு #தமிழ் #சோழர்கள் #கரிகாற்_சோழன் #போர் #களப்பிரர் #இருண்ட_காலம் #சிகரம் 




#107/2018/SIGARAMCO 
2018/06/25 
பதிவர் : சதீஷ் விவேகா 
#முடிமீட்ட_மூவேந்தர்கள் #சதீஷ்_விவேகா #சரித்திரத்_தொடர் #வரலாறு #தமிழ் #சோழர்கள் #கரிகாற்_சோழன் #போர் #களப்பிரர் #இருண்ட_காலம் #சிகரம்

No comments:

Post a Comment

Share it