Share it

Wednesday, September 12, 2018

முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | அத்தியாயம் - 03 | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா


பயணம் - 03 


அவை முடிந்து விரைவாய்த் தளபதிகள் அனைவரும் தங்களது பாசறையில் ஒன்று கூடினார்கள். உபதளபதிகளில் ஒருவர் மெதுவாய் அருகே வந்து 'நாயகரே விவாதத்தில் எதாவது முக்கிய விஷயம் உண்டா?' என்று பவ்யமாய் கேட்டார். 'ஆம் உண்டு. ஆனால் அதைப்பற்றி விவாதிப்பதற்காகவே அனைவரும் ஒன்றாய் வந்துள்ளோம். முதலில் நம் ஒற்றர்கள் அனைவரையும் இங்கு வரச் சொல்லுங்கள்' என்று பரபரப்புடன் உத்தரவிட்டதைப் பார்த்ததும் புரிந்து கொண்டார்கள் விவாதத்தின் வீரியத்தை. 'இப்பொழுதே அழைக்கிறேன்' என்று வேகமாய் உபதளபதிகள் ஆளுக்கொரு திசைக்குச் சென்றார்கள்.



ஒற்றர் வருவதற்குள் பலநூறு யோசனைகள் பேசி ஆயிரம் விஷயங்களை மனதினுள் கணக்கிட்டுக் கொண்டிருந்தார்கள் தளபதிகள் தீவிரமாய். நாழிகைக்குள் ஒற்றர்கள் அனைவரும் அவ்வறைக்கு வந்து வணங்கி நின்றார்கள். 'அனைவரும் வந்துவிட்டீர்களா?' என்று உரத்த குரலில் ஒரு தளபதி கேட்டார். 'அனைவரும் வந்தாகிவிட்டது நாயகரே' என்றார் உபதளபதிகளில் ஒருவர் சரிபார்த்து.

"நம்முடைய பல்லவ தேசம் விரைவில் தொண்டை மண்டலத்தின் மீது போர்தொடுக்கப் போகிறது. அதற்கான அறிவிப்பையே மன்னர் விடுத்தார்". 

'ஆஹா... ஆஹா...' என்ற உபதளபதிகளின் ஆனந்த குரல் அறையெங்கும் எதிரொலித்தது. 'எப்பொழுது நாயகரே?' என்றார் ஒருவர் ஆர்வத்துடன். 

"சற்று நான் சொல்வதைப் பொறுமையாகக் கேளுங்கள் பிறகு கேள்விகள் கேட்கலாம்" என்றதும் அறையே நிசப்தம் ஆனது.

"நம்முடைய ஒற்றர்கள் வேங்கட மலைப்பகுதியில் தற்போதைய சூழ்நிலையைத் தெளிவாய் மீண்டுமொருமுறை கண்டறிந்து விரைவில் வந்து சொல்லுங்கள். அனைத்து சூழ்நிலைகளையும் முழுமையாய்க் கண்காணித்து வாருங்கள். பிசகு இருக்கக் கூடாது. உங்களின் தகவலுக்குப் பிறகே படையெடுப்பு நாள் தெளிவாய் முடிவாகும். ம்... விரைந்து இப்பொழுதே கிளம்புங்கள், காலம் தாழ்த்தாதீர்கள்" என்றதும் ஒற்றர்கள் உத்தரவைப் பெற்று விரைவாய்க் கிளம்பினார்கள். 

"நமது ஒற்றர்களின் தகவல் வந்ததும் நாம் கிளம்ப வேண்டும். ஒற்றர்களிடமிருந்து தகவல் வரும் வரை வீரர்களுக்கு முழுமையான தகவலைத் தெரிவிக்க வேண்டாம். எப்பொழுது வேண்டுமானாலும் கிளம்ப வேண்டியிருக்கும் என்று மட்டும் கூறுங்கள். அவர்களே புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன். படைக்கு வீரர்கள் பற்றாக்குறையிருப்பின் பயிற்சிப் பட்டறையிலிருந்து சேர்ப்பித்துக் கொள்ளுங்கள். ஆர்ப்பாட்டம் இல்லாமல் குழுக்களாய் அமைதியாய்க் கிளம்ப வேண்டும். இது மன்னரின் உத்தரவு. இதை மனதில் கொள்ளுங்கள். உங்களில் யாரும் தொலைதூரப் பயணம் மேற்கொள்ள வேண்டாம். எந்த நேரம் வேண்டுமானாலும் அழைப்பு வரும் இங்கேயே இருங்கள். என்ன புரிந்ததா அனைவருக்கும்?" என்று விரைவாய்க் கூறி அதட்டலுடன் முடித்தார் தளபதி. "சரி இப்பொழுது கிளம்புங்கள்" என்றார். உபதளபதிகள் ஒவ்வொருவராய் உத்தரவு பெற்று வெளியேறினார்கள்.

அரண்மனையில் இளவரசர் தன்னுடைய அறையில் ஓலைநாயகரிடம் சில குறிப்புகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார். அவரும் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார். இடையில் நிறுத்திக் காவலரை அழைத்து "இன்று மாலை நேரத்தில் தளபதிகளைச் சந்திக்க வருவதாகத் தெரிவித்து விடுங்கள்.  கட்டாயம் அனைவரும் இருக்க வேண்டும் என்று கூறிவிடுங்கள்" என்றதும் 'உத்தரவு இளவரசே' என்று தலைவணங்கி விடைபெற்றார். குறிப்பு கொடுப்பதை மீண்டும் தொடர்ந்தார். அனைத்தையும் சொல்லி முடித்ததும் "சரி இதை இப்பொழுதே ஓலையில் எழுதி நம் தேசத்தின் அனைத்து பகுதியில் உள்ள எல்லைப் பாதுகாப்புப்படைத் தலைவர்களிடம் விரைவில் சேர்க்க ஏற்பாடு செய்திடுங்கள் ஓலை நாயகரே" என்று உத்தரவு பிறப்பித்தார். 'உத்தரவு இளவரசே' என்று விடைபெற்று ஓலைகளைச் சேர்ப்பிக்க வீரர்களை ஏவினார். ஓலைகளைப் பெற்றுப் புரவிகள் எட்டுத்திக்கும் புழுதி கிளம்பப் பறந்தது.

அமைதியாய் ஆசனத்தில் ஓய்வாய் அமர்ந்தார் இளவரசர். கண்மூடி மனதின் பதட்டத்தைக் குறைத்துக் கொண்டிருந்தார். எந்தவொரு சத்தமுமில்லாமல் அரசர் அந்த அறைக்குள் பிரவேசித்தார். கண்மூடி அயர்ந்தபடியிருந்த இளவரசரைப் பார்த்ததும் அறையிலிருந்து வெளியேற முற்படுகையில் கண்விழித்து எழுந்து "வாருங்கள் தந்தையே... ஏதாவது வேலையா? அழைத்திருந்தால் நானே வந்திருப்பேனே?" என்றார் மரியாதையுடன். "போருக்கான பணி எவ்வாறு போய்க் கொண்டிருக்கிறது என்பதை அறியவே வந்தேன். மனமும் இருப்புக் கொள்ளவில்லை ஒரு இடத்தில்... சரி நானே வந்துவிடலாம் என நினைத்து வந்தேன். நீ சிறிது நேரம் ஓய்வெடு நான் பிறகு வருகிறேன்" என்றார் பாசத்துடன் மன்னர்.

"ஓய்வா? வாருங்கள்..." என்று புன்முறுவலிட்டு ஆசனத்தை நகர்த்தி அரசரை அமரச் செய்தார். "போர் என்று எப்பொழுது தீர்மானித்தோமோ அப்பொழுதே தூக்கம் மறந்துவிட்டது தந்தையே... களமும் அங்கு நாம் காணும் வெற்றியும் தான் என்னுள் ஓடிக்கொண்டிருக்கிறது. அதை அடையும் வழியையே சிந்திக்கிறது மனம்" என்றதும் "எப்படி சிவா!! இப்பொழுதே முடிவே செய்து விட்டாயா?" என்றார் ஆச்சரியத்துடன். "ஆம் தந்தையே... நிச்சயமாக நாம் வெற்றி பெறுவது உறுதி தான்" என்றார் இளவரசர். "எப்படி இவ்வளவு உறுதியாய் நம்பிக்கையுடன் சொல்கிறாய்?" என்று தன் மகனை வியப்புடன் கேட்டார். "அதற்கு பதிலை நீங்களே சொல்லிவிட்டீர்களே தந்தையே நம்பிக்கை என்று அதுதான் என் பலம். என் எண்ணம் எப்பொழும் வெற்றியை நோக்கியது. வெற்றி உறுதியாய் கிட்டும் என நம்புகிறேன். அதை மட்டுமே சிந்திக்கிறேன். அதை விடுத்து மற்ற எதையும் நினைப்பதில்லை. நேர்மறை எண்ணத்துடன் எதிரியை நேர்மையாய் சந்திக்கத் தயாராய் இருக்கிறேன். இந்தப் போர் எனக்கு தியானம் போன்றது. போரிலே லயித்து அதிலே ஒன்றி விட்டேன். இறுதியில் கிடைப்பது வெற்றி எனும் ஞானம் தான் தந்தையே. அதைத் தலையில் வைத்துக் கொண்டாடப் போவதில்லை. அது என் கை நழுவாமலிருக்க தொடர்ந்து போராடப் போகிறேன் தந்தையே" என்றார் அமைதியாய் நிதானத்துடன் இளவரசர்.

"சிவா போருக்குத் தனி விளக்கமடா நீ தந்தது. உன்னுடைய பதில் மகிழ்ச்சியாய் இருக்கிறது. போருக்காக செய்திருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னனென்ன என்று என்னிடம் சொல்வீர்களா இளவரசே?" என்றார் கேலியாய். "தந்தையே என்ன இது கேள்வி ஆணையிடுங்கள்" என்றார் கெஞ்சல் மொழியில் இளவரசர். "ம்... சரி சொல்லு..." என்றார் மன்னர். 

"உள்நாட்டை முதலில் ஒற்றர்கள் மூலம் கண்காணிக்கச் சொல்லியிருக்கிறேன் தந்தையே. இரவுநேரக் கண்காணிப்பில் அதிகம் கவனம் செலுத்தச் சொல்லியிருக்கிறேன். எதிரிகளின் நடமாட்டம் தேசத்தினுள் இருந்தாலோ அல்லது சந்தேகப்படும்படியான ஆட்கள் இருந்தாலோ அவர்களைக் கைது செய்யும்படியும் உத்தரவிட்டுள்ளேன் தந்தையே. தேசத்தின் எல்லைக் காவலை அதிகப்படுத்தி கண்ணிமைபோல் காக்கச் சொல்லியிருக்கிறேன். ஒரு சிறு உறுத்தல் அதனால் வடக்கு எல்லைப் பகுதியில் பாதுகாப்பைத் தீவிரப்படுத்தச் சொல்லியிருக்கிறேன். எல்லை முழுக்கப் படை தயார் நிலையில் நிற்க எல்லைப் பாதுகாப்புப் படைத் தலைவர்களுக்கு ஓலையனுப்பியுள்ளேன். நாம் வடயெல்லையின் பாதுகாப்பை உறுதி செய்த பிறகே நாம் தெற்கு நோக்கிப் படையெடுக்க வேண்டும் தந்தையே." என்று இதுவரை செயல்படுத்தியதை அரசரிடம் விளக்கினார். "அருமை... நல்ல திட்டம் தான் சிவா. பிறகு?" "தந்தையே இன்று மாலை படைத்தளபதிகளைச் சந்திக்கச் செல்கிறேன். எந்தப் படைகள் எப்படி நகர்ந்து போக வேண்டும் என்பதை விவாதிக்க வேண்டும் தந்தையே..." 

"அவர்களிடம் பகிர்வதை என்னிடம் சொல்" என்று அரசர் கேட்டதும் குதூகலத்துடன் மேஜையின் மேலிருந்த தேசத்தின் வரைபடத்தை விரித்தார். மேஜையின் அளவிற்கு விரிந்தது அந்தப்படம். "தந்தையே நம் படைகளின் ஒருபகுதியின் காலாட்படையினரை வேங்கட மலை வழியே இன்னும் இரு தினம் கழித்து குழுக்களாய்க் கிளம்பச் சொல்லி விடுவோம். அதிலிருந்து இரண்டு நாள் கழித்து யானை, குதிரை, தேர்ப்படைகளின் ஒரு பகுதியை நாம் வேங்கட மலை வழியே அருவா வடதலை நாடு செல்லும் பிரத்யோகமான சாலையில் ஆரவாரமில்லாமல் கிளம்பச் சொல்வோம். வேங்கட மலையிலிருந்து நந்தி மலைக்குச் செல்லும் பிரதான சாலைக்குச் சென்று எல்லையில் பாதுகாவலுக்காகத் தங்கியிருக்கட்டும். பிரத்யேக சாலையில் செல்லும் படை நகரத்திற்கருகே செல்லும் நேரமும் வனத்தின் வழியே செல்லும் காலாட்படை செல்லும் நேரமும் என் கணிப்புப்படி சரியாய்த் தானிருக்கும். களப்பிரர்களின் தேசத்திற்கு முன்னரே இருபடையும் இணைந்து களப்பிரர்களை வீழ்த்த உட்புக வேண்டும். எல்லையிலிருக்கும் படை நந்தி மலையிலிருக்கும் களப்பிரர்கள் அங்கோ அல்லது நம் தேசத்திற்குள் நுழையாதவாறு கவனித்துக் கொள்ளட்டும் தந்தையே" என்று தங்குமிடம், கிளம்பும் நேரம் முதற்கொண்டு தெளிவான திட்டத்தைக் கூறி முடித்தார் இளவரசர். 



"ஏன் தந்தையே, திட்டம் தங்களுக்கு திருப்தி தானே?" என்றார் ஆவலாய். "சரியான திட்டமிடல் தான் சிவா. ஆனால் பிசகு இல்லாமல் நிறைவேற்ற வேண்டும் அதுதான் மனதினுள் ஓடுகிறது." என்று சற்று கவலையுடன் சொன்னார் அரசர். அரசரின் அருகில் மண்டியிட்டு அமர்ந்து "நிச்சயம் பிசகாது, நம்புங்கள் தந்தையே" என்று இருகரம் பற்றி ஆறுதல் மொழியை அன்புடன் கூறினார். "நம்புகிறேன் உன்னையும்... உன் திட்டத்தையும்... நம் வீரர்களையும்..." என்று இளவரசரின் தலையை வருடி விட்டுக் கூறினார் அரசர். "பிறகேன் கவலை கொள்கிறீர்கள் தைரியமாய் இருங்கள் பல்லவம் மேலும் பல உயரம் காணும் அதற்கு அஸ்திவாரமாய் நாமிருப்போம்" என்றார் நம்பிக்கையுடன் இளவரசர். அரசர் முகத்தில் படர்ந்திருந்த கவலை எரிந்து மகிழ்ச்சி ஒளிரத் தொடங்கியது. 

இருவரும் பேசிக் கொண்டிருக்கையில் வீரன் ஒருவன் வந்து வணங்கி "அரசே! அரசியாரின் பணிப்பெண் தங்களைக் காண வேண்டி நிற்கிறார். உள்ளே வரச் சொல்லட்டுமா அரசே?" என்று பணிவுடன் கேட்டு நின்றான். வீரனிடம் "ம்... வரச் சொல்" என்றார் முகபாவத்தை மாற்றியபடி. உத்தரவு பெற்று வீரன் சென்ற சில விநாடிகளில் பணிப்பெண் வந்து வணங்கி "அரசே! தங்கள் இருவரையும் அரசியார் அழைத்தார்." என்றாள் தலை குனிந்தபடி மென்மையான குரலால். "எங்கிருக்கிறார் அரசியார்?" என்றார் அரசர். "சமையல் கூடத்திற்கு அருகிலிருக்கும் மண்டபத்தில் அரசே!" என்றாள். "சரி வருகிறோம்" என்று அரசர் சொன்னதும் வேகமாய் அவ்விடம் விட்டு அரசியாரிடம் சென்றாள் அப்பணிப்பெண். 

அரசரும் இளவரசரும் அரசியாரைச் சந்திக்க சென்றார்கள். அரசியார் ஆசனத்தில் அமைதியாய் தலைகுனிந்தவாறு அமர்ந்திருந்தார். அரசர் தோள் பிடித்து 'தேவி...' என்றழைத்ததும் திரும்பி அரசரைப் பார்த்தவர் எழுந்து "வாருங்கள்..." என்றார். அந்தப் பேச்சில் கோபம் கலந்தேயிருந்தது. சுதாரித்த அரசர் "ஏன் கோபமாய் இருக்கிறாய் போலும்?" என்றார் மென்மையாய். "ஏன் அம்மா என்ன கோபம் உங்களுக்கு?" என்றார் அன்புடன் இளவரசர். இளவரசரின் அருகில் சென்று "இன்று காலை ஆலோசனை முடிந்து உன்னறையினுள் நுழைந்தவன் மாலைநேரம் நெருங்கத் தொடங்கி விட்டது. இன்னும் அறையிலிருந்து வெளியே வரவில்லை. அன்னம் உண்ணவில்லை. நானும் எத்தனை நேரம் காத்திருப்பது? உன் மனைவி காத்திருந்து சலித்து உணவு உட்கொள்ளாமல் அறைக்கே சென்றுவிட்டாள். இப்பொழுதும் அழைக்காவிடில் வந்திருக்கமாட்டாய்." என்று பாசத்தின் மிகுதியால் கடுகாய்ப் பொரிந்தார் அரசியார். 

"இதற்கா இவ்வளவு கோபம்?" என்று புன்னகைத்தார் அரசர். "உங்களுக்கு நாடும் அதன் மேன்மையும் தான் முக்கியம் என்றால் எனக்கு இதைக் கட்டிக்காக்கும் என் மகனின் உடல் நலம் தான் முக்கியம்" என்று கோபத்தில் பேசி முடித்த வட்ட முகத்தில் அழகாயிருக்கும் இருவிழியோரமும் நீர் ததும்பி நின்றது. "என்னை மன்னியுங்கள் தாயே. தந்தை மேல் குற்றமில்லை. நான் தான் உடல் நலத்தைப் பற்றி யோசிக்காமல் அறையிலேயே இருந்து விட்டேன்." என்று தன் தோள் உயரமிருக்கும் அன்னையை மார்போடு அணைத்துக் கொண்டார் இளவரசர். 

இளவரசரின் குரல் கேட்டு அறையிலிருந்து இளவரசரின் மனைவியும் பல்லவ தேசத்து அடுத்த மஹாராணியுமான அகலிகை தேவியார் வந்தார். அவரின் கண்களிலும் கோபக் கனல் தெறித்தது. அரசர் இருந்ததால் அமைதியாய் தலைகுனிந்தபடி வந்தவரை "வா... வா... உன்னைத்தான் அழைக்கலாம் என்றிருந்தேன் வந்துவிட்டாய். வா இங்கு அமர்ந்துகொள் சாப்பிடலாம்" என்று ஆசனத்தை நகர்த்திப் போட்டார். "சிவா நீ உணவருந்தி வா முன் மண்டபத்தில் காத்திருக்கிறேன்" என்று புரிந்து விலகிக்கொண்டார் அரசர். 

"தங்களுக்கு எங்களைப் பற்றி யோசிக்கவும் நேரமுண்டா?" என்றார் அகலிகையார் இளவசரைப் பார்த்து. "ஏனடி இவ்வளவு கோபம்?" என்று கொஞ்சும் மொழியில் கேட்டதற்கு "காலையிலிருந்து நானும் மாஹாராணியாரும் இவ்விடம் இருந்து சலித்துப் போனோம்" என்றார் அதே கோபத்தோடு. "முக்கியமான வேலை. அதனால்தான் வரவில்லை. நம் பல்லவம் அடுத்த உயர்வை நோக்கி நகர்கிறது. அதற்காக நாம் இதுபோன்ற சில விசயங்களில் தியாகம் செய்ய வேண்டியிருக்கும். நீ புரிந்து கொள்வாய் என்று நினைத்தேன். ஆனால் நீயோ கோபக் கனலால் தாக்குகிறாய்" என்று இளவரசர் எடுத்துச் சொன்னதும் முனுமுனுத்தபடி மகாராணியாருக்கும் இளவரசருக்கும் பரிமாறத் தொடங்கினார் அகலிகையார். "நீயும் இன்னும் உணவு உட்கொள்ளவில்லை அல்லவா? வா.. நீயும் சாப்பிடலாம்" என்றார். "இல்லை. நீங்களிருவரும் சாப்பிடுங்கள். பிறகு நான் சாப்பிட்டுக் கொள்கிறேன்" என்றார். இளவரசர் தான் உணவருந்திய பின் தன்னுடைய மனைவியை அமரவைத்து உணவைப் பரிமாறினார். தேவியார் மகிழ்ச்சியில் திளைத்தார். மகன் தன்னுடைய மனைவியிடம் கோபப்படாமல் அன்பாய்ப் பேசி, மனைவியையும் நன்கு கவனித்துக் கொண்டதைப் பார்த்த மகாராணியாரின் மனம் பெருமிதம் கொண்டது. 

தாயிடமும், மனைவியிடமும் விடைபெற்றுப் பாசறை நோக்கித் தளபதிகளைச் சந்திப்பதற்காகக் கிளம்பினார். அகலியாரின் மனம் ஏங்கித் தவித்தது. வாயால் விடைகொடுத்தவர் மனதால் வாடிப்போனார். பாசறையில் தளபதிகள் காத்திருந்தார்கள் இளவரசரின் வருகைக்கு. உடன் நாமும் காத்திருப்போமே....

- சதீஷ் விவேகா

நன்றி.
புகைப்படம் டிசைன் திரு. Kannan R அவர்கள். 





#முடிமீட்ட_மூவேந்தர்கள் #சதீஷ்_விவேகா #சரித்திரத்_தொடர் #வரலாறு #தமிழ் #சோழர்கள் #கரிகாற்_சோழன் #போர் #களப்பிரர் #இருண்ட_காலம் #சிகரம்

No comments:

Post a Comment

Share it