Share it

Saturday, September 15, 2018

முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | அத்தியாயம் - 06 | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா


பயணம் - 06 


அரசரின் வார்த்தையிலிருந்த உண்மை விளங்கித் தன்னுடைய பிழையை உணர்ந்த இளவரசர், அமர்ந்திருந்த ஆசனத்திலிருந்து மனக் குழப்பத்துடன் தன் அறையை நோக்கி விரைந்தார். வீரர்கள் உடன் வருவதையும் மறந்து அறைக்குச் சென்று மேஜையின் மீதிருந்த ஓலையில் தளபதிகளை உடனடியாகக் கிளம்பி வருமாறு தன் கைப்பட எழுதி, தன்னுடைய முத்திரையிட்டுத் திரும்பினார். அறையின் வாயிலில் வேல் பிடித்த வீரர் நின்றிருந்தார். அவரை அருகில் அழைத்து "இதை நம் பாசறையிலிருக்கும் தளபதிகளிடம் உடனே சேர்ப்பித்து விடுங்கள். தாமதம் வேண்டாம்" என்று உத்தரவு பிறப்பித்த மறுகணம் கிளம்பினார் வீரர். 



இளவரசர் காலை உணவை முடித்து ஓய்வாய் ஆசனத்தில் நகராது அமர்ந்திருந்தார். எப்பொழுதும் அமைதியாய் ஒர் இடத்தில் இருக்காதவர் இன்று தனியாய் அமர்ந்திருப்பதைப் பார்த்த மஹாராணியாரின் மனம் பொறுக்காது அருகே வந்து தலையை வருடி விட்டவாறே "ஏன் சிவா? இப்படித் தனிமையில் முகம் வாடி அமர்ந்திருக்கிறாய்? ஏதாவது ராஜ்ஜிய விஷயத்தில் குழப்பமா? இல்லை மன வருத்தமா?" என்று பாசத்துடன் கேட்டார். 

தலையை வருடும் தாயின் கரம்பற்றி அழைத்து அருகே இருக்கும் ஆசனத்தில் அமர வைத்தார். ராணியாரும் அருகில் அமர்ந்து இளவரசரின் தலையை நிமிர்த்தினார். வதனத்தின் பொலிவு குன்றித் தெளிவில்லாது வாடியிருந்தது. பதறிப்போய் "முகம் வாடி அமைதியாய் அமர்ந்திருக்கும் அளவிற்கு என்ன நடந்தது சிவா?" என்று மீண்டும் கேட்டார்.

"தனிமையில் அமைதியாய் இருக்கும் பொழுது தான் விளங்குகிறது தாயே நான் செய்த தவறுகள்" என்றார் வருத்தமுடன் கண்ணில் நீர் தழும்ப.

"என்ன தவறிழைத்தாய் சிவா? எதற்கு இவ்வளவு வருத்தம் கொள்கிறாய்?" என்றார் பாசத்துடன் ராணியார்.

"அதைக் கூறத் தான் உங்களை அமரச் சொன்னேன் தாயே" என்றார் கரத்தை விடாது பற்றிக் கொண்டே. 

"சரி சொல் சிவா" என்றார் ராணியார்.

"தாயே! இதுநாள் வரை திட்டமிடுதலும் வழிநடத்தலும் தான் போர்தொடுத்துச் செல்வதற்கு முக்கியமான கூறு என்று எண்ணி செயல்பட்டுக் கொண்டிருந்தேன். அதை விட நாமெடுக்கும் முடிவும் முடிவிற்கு நாம் எடுத்துக் கொள்ளும் கால அவகாசமும் மிக முக்கியமென்பதை மிகத் தெளிவாய் இன்று காலையில் தான் தந்தையின் மூலமாய்ப் புரிந்து கொண்டேன். இதுநாள் வரை நான் காலம் தாழ்த்தியதை எண்ணி என்மேல் நானே கோபப்படுவதா? இல்லை இன்றாவது இதைக் கற்றுக் கொண்டோமே என ஆனந்தப்படுவதா? என்ற சிந்தனை ஒருபுறம். இதற்கு முன் களபப்பு தேசத்தின் போர்த் திட்டத்தைத் தந்தை கேட்டு இதைச் சரியாய்ச் செயல்படுத்திட முடியுமா? பிசகு ஏற்பட்டு விடுமா? எனப் பயந்து அன்று கேட்டவர்... இன்று எவ்வளவு தெளிந்து தீர்க்கமாய் உள்ளார். ஆனால் இதைப் பற்றியே நிதமும் சிந்தித்துத் தெளிவாய்த் திட்டம் வகுத்த என்னால் தெளிவானதொரு முடிவெடுக்க முடியவில்லையே ஏன் என்ற வருத்தமும் என்னை வாட்டுகிறது தாயே" என்றார் கலங்கியபடி. 

"இதற்கா வருத்தம் கொள்கிறாய் சிவா?" என்றார் மிக எளிதாய்.

"என்ன தாயே இவ்வளவு எளிமையாய் சொல்லுகிறீர்கள்?" என்று ராணியாரை ஆச்சரியமாய்ப் பார்த்து "நான் செய்தது தேசத்தின் வளர்ச்சிக்குத் தடை செய்தது போலல்லவா உள்ளது. அதுவும் இளவரசனாய் இருந்து நான் செய்தது பிழை தானே தாயே?" என்றார் இளவரசர். 

"அறவே இல்லை சிவா. எப்பொழுது ஒரு விஷயத்தைத் தவறென்று தெரிந்தும் அக்காரியத்தை செய்யத் துணிகிறோமோ அந்த செயல் தவறு. ஆனால் இன்று உனக்குத் தெரியாததைக் குறிப்பாய் உணர்த்தியிருக்கிறார் உன் தந்தை. இதில் கவலை கொள்ள அவசியமில்லையே சிவா. நீ இவ்வாறு சிந்தித்து அமர்ந்திருப்பதே ஒரு விதமான தாழ்வு மனப்பான்மையே... இதை அடியோடு அழித்துவிடு சிவா. இல்லையென்றால் அது உன்னை அழித்துவிடும். ஒரு திட்டம் வகுத்து அதை அழகாய்த் தந்தைக்கும் சபைக்கும் விவரித்து அனைவரின் பயத்தையும் போக்கிய நீ துவண்டு அமர்வது கோழைத்தனமாய் இல்லையா? அனைத்தையும் அறிந்தவர்கள் இவ்வுலகில் யாருமில்லை. அதை நன்கு புரிந்து கொள். முதன்மை அமைச்சர்களால் தளபதிகளால் ஏன் உன் தந்தையான அரசரால் கூட வகுக்க முடியாத ஒரு சிறப்பான திட்டத்தை நீ தீட்டியிருக்கிறாய். அப்படியிருக்க நீயேன் கவலை கொள்கிறாய்? நல்லது நடந்தால் அதிகமாய்ச் சந்தோசப்படுவதும் கொஞ்சம் மனச்சோர்வு வந்தால் வருத்தப்பட்டு அமர்வதும் உன் பலவீனத்தையே காட்டுகிறது சிவா. நீ பலவீனன் அல்லன் என்பதை உனக்குள் ஆழமாய் விதை. அது போதும் உன்னை உயர்த்திட."

"சிங்கக்குட்டிக்கு வேட்டையாடக் கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை சிவா. அதே வயது வந்ததும் தானாய் வேட்டையாடும். முதல் முயற்சியில் தோற்றாலும் விடாது. தந்திரத்தை ஆராய்ந்து அது மீண்டும் வேட்டையாடி வெற்றி பெறும். நீ சிங்கமடா... இதற்கெல்லாம் கவலைப்பட்டு துவண்டா அமர்வாய்? உன் தலைக்கு மேல் பல்லவ தேசம் உள்ளது. அதை உயர்த்தும் பணியும் உனக்குள்ளது. அதையோசி. இதற்கெல்லாம் மனம் வருந்தி எதிர்மறையான எண்ணத்தை மனதினுள் விதைக்காதே சிவா. போய் போருக்கான பணியைக் கவனி" என்று அன்புடன் தன் மகனின் மனதிலிருந்த கவலையை வார்த்தையால் எரித்து அவரினுள் நம்பிக்கை எனும் சுடரை ஏற்றிவிட்டார் குருவாய் ராணியார்.




இளவரசரின் முத்திரையிட்ட ஓலையின் செய்தியறிந்ததும் அனைத்துத் தளபதிகளும் அரண்மனையிலுள்ள இளவரசரின் அறையில் காத்திருந்தார்கள். வேலேந்திய வீரன் ஒருவன் வந்து வணங்கி "இளவரசே தங்களைக் காணத் தளபதிகள் அறையில் காத்திருக்கிறார்கள்" என்று பணிவுடன் கூறி நின்றான்.

"சரி கிளம்பு சிவா. உனக்கான பணி உன்னை அழைக்கிறது. அதைக் கவனி. மாலை சந்திப்போம்" என்றார் ராணியார். 

தாயின் மொழியால் புத்துயிர் பெற்று மனத் தெளிவுடன் அறையை அடைந்தார். தளபதிகளைப் பார்த்து வணங்கி "வாருங்கள்" என்று கைகூப்பி வணங்கி ஆசனத்தில் அமர்ந்தார் இளவரசர் கம்பீரமாய். எழுந்து நின்று வணங்கி நின்றவர்களைக் கையமர்த்தினார்.

"இளவரசே, அவசரமாய் ஓலை அனுப்பி வரச் சொல்லியிருக்கிறீர்கள். எதற்காக என்று தெரிந்து கொள்ளலாமா?" என்றார் பணிவாய் முதன்மைத் தளபதி. 

"ஆம். அவசரம் தான் தளபதியாரே. நம்முடைய களபப்பு தேசத்தின் மீதான படையெடுப்பில் முதலில் கிளம்பவிருக்கும் காலாட்படை நாளை மதியம் கிளம்பத் தயாராகட்டும்" எனறதும் தளதிகள் அனைவரும் ஒருவரொருவரின் முகத்தைப் பார்த்து எதிர்த்துக் கேள்வி கேட்க யோசித்தபடி அமர்ந்திருந்தார்கள்.

"ஏன் யாரிடமிருந்தும் எந்தப் பதிலுமில்லை? இவ்வளவு அமைதியாய் இருக்கிறீர்கள்?" என்றார் மிக அமைதியாய்ப் புன்னகையுடன்.

"தற்பொழுது அங்கிருக்கும் சூழ்நிலை பற்றி நாமின்னும் அறியவில்லை. எங்களுடைய ஒற்றர்களின் பதிலை நீங்களின்னும் கேட்கக் கூடவில்லை. இவைகளைப் பற்றிக் கேட்காது உடனடியாய் உங்களிடமிருந்து உதிர்ந்த வார்த்தையால் மூர்ச்சையாகி விட்டோம் இளவரசே" என்றார் முதன்மைத் தளபதி. 

"எனக்கே இன்று காலை உதித்தது தான் தளபதியாரே. எடுத்த முடிவில் மாற்றம் வேண்டாம், கிளம்பலாம்" என்றார் உறுதியாய்.

"இளவரசே, இந்தக் கணம் வரை எங்களிடம் ஒற்றர்களின் பதிலைப் பற்றி நீங்கள் கேட்கவில்லையே?" என்றார் தளபதி.

"நீங்கள் விசாரித்து விட்டீர்கள் அல்லவா? பதில்கள் உங்களனைவருக்கும் திருப்தி தானே? பிறகென்ன புறப்படலாம்" என்றார் அதே புன்னகையுடன்.

"ஏன் இளவரசே, இப்பொழுது கூட ஒற்றர்களின் பதிலை அறிவதில் ஆர்வம் காட்டவில்லை. எங்களின் பணியில் ஏதாவது பிழையை உணர்ந்தீர்களா?" என்றார் ஏக்கத்துடன் தளபதி. 

"நான் கேட்டதிற்கு மட்டும் பதிலளிக்கக் கூடாது என்று ஏன் பிடிவாதமாய் இருக்கிறீர்கள்? அப்படியென்றால் போர்தொடுத்துச் சென்றால் நாம் வெற்றி பெறுவதில் உங்களுக்கெல்லாம் நம்பிக்கையில்லையா?" என்றார் அதிரடியாய் இளவரசர்.

அனைத்துத் தளபதிகளும் பதறிப் போய் "இப்படியொரு வார்த்தை உதிர்த்து விட்டீர்களே இளவரசே. கனவிலும் பல்லவத்திற்குத் தீங்கிழைக்கும் எண்ணம் எங்களுக்கு உதித்ததில்லை. நிச்சயம் போர்தொடுத்துச் சென்று வெற்றி பெற்று வரலாம். இதில் கடுகளவும் எங்களுக்குச் சந்தேகமில்லை" என்று கூறினர். 

"ஆசுவாசம் ஆகுங்கள்... உங்களை எடைபோட நான் இக்கேள்வியைக் கேட்கவில்லை. எம் வீரர்கள் எந்த சூழ்நிலையையும் சமாளிப்பவர்கள். யாரிடமும் விலைபோக மாட்டார்கள் என்பதை நான் நன்கறிவேன். ஆனால் நீங்கள் நான் கேட்கும் கேள்வியை விடுத்து பதிலளித்துக் கொண்டிருக்கிறீர்கள். அதனால் எழுந்த கேள்வியே இது" என்றார் நிதானமாய் இளவரசர்.

"சரிதான் இளவரசே. ஆனால் நீங்கள் ஒற்றர்களை அனுப்பச் சொன்னீர்கள். அதைப் பற்றி விவாதிக்காமல் இருந்ததால் ஏற்பட்ட குழப்பம் தான் இது. தவறாய் எண்ண வேண்டாம்" என்றார் பணிவுடன் முதன்மைத் தளபதி.

"நடந்தவைகளை விடுங்கள். உங்களுக்கு வந்த செய்திகளெல்லாம் திருப்தியாய் இருந்ததா? போர்தொடுப்பதில் தாமதம் தேவையில்லை தானே?" என்றார் மற்றொரு முறை தெளிவாய் இளவரசர். 

"எங்களுக்கு வந்த தகவலின் படி தற்போதைய சூழல் நமக்கு சாதகமாய்த் தான் உள்ளது இளவரசே. தாராளமாய்ப் போர்தொடுக்கலாம்" என்றார் முதன்மைத் தளபதி.

"சரி, முதலில் நகரும் காலாட்படைக்குத் தலைமை ஏற்க தளபதிகளைத் தேர்ந்தெடுத்து விட்டீர்களா? அவர்களை ஆயத்தமாகச் சொல்லுங்கள். அடுத்தடுத்து மற்ற படைகள் கிளம்பத் தயாராகட்டும். அதற்குண்டான பணிகளையும் செய்யத் தொடங்குங்கள் தளபதியாரே" என்றார் இளவரசர் தெளிவாய்.

"உத்தரவு இளவரசே" என்றார் முதன்மைத் தளபதி. 

"இளவரசே, நாளை பயணம் செய்யலாம் என்று நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் இரண்டு பாதையில் எது என்பதைச் சொல்லவில்லையே?" என்றார் தளபதி.

"சரியான கேள்வி. இதை யாராவது கேட்க மாட்டீர்களா என்றிருந்தேன். இல்லை, நீங்களே முடிவு செய்து சொல்வீர்கள் என்று நினைத்தேன். ஆனால் அதை விடுத்துப் பல விவாதங்கள்" என்றார் பெருமூச்சு விட்டபடி இளவரசர். "சரி இதை நீங்களே சொல்லுங்கள், எந்தப் பாதையில் பயணிக்கலாம்?" என்றார் தன் முடிவு சரி தானா என்பதை அறிந்து கொள்வதற்காக இளவரசர். 

சில நிமிடம் நிசப்தமாய் இருந்த அவையில் "இளவரசே கிழக்குப் புறத்துக் காட்டுப்பாதை ஆபத்து என்றும் அந்த வழியே நாம் களபப்பினுள் நுழைவதும் சிரமம் என்ற தகவலும் வந்தது. அதனால் மேற்குப் பகுதியில் பயணிப்பதே சிறந்தது என்று எம் ஒற்றர் மூலம் அறிந்தேன்" என்று குழப்பத்திலே பதிலளித்தார் தளபதி.

"ஏன் தளபதியாரே, உங்களின் பதிலில் உங்களுக்கே நம்பிக்கை இருப்பதாகத் தெரியவில்லையே தளபதியாரே" என்றார் புன்முறுவலுடன்.

தன் குழப்பத்திற்கான பதிலின்றி மௌனியாய் நின்றார் தளபதி. "நீங்கள் கூறியது மிகச் சரிதான். எனக்கும் இதே தகவல் தான் வந்தது. என்னைப் போல் குழப்பத்தை இன்றோடு விட்டுவிடுங்கள்" என்று இளவரசர் சொன்னதும் அதிர்ந்து போய் இளவரசரைப் பார்த்தார்கள். 

"ஆம். நானும் இந்தக் காரணத்திற்காகத் தான் இம்முறை உங்களிடம் ஒற்றர்களின் பதிலைப் பற்றி விசாரிக்கவில்லை. நீங்கள் சொல்லும் பதிலைப் பலமுறை கேட்டு மீண்டும் தெளிவுபெற வேண்டுமென்று நினைத்து மற்றொருமுறை ஒற்றறிய ஏவிப் பின் பதிலில் நான் குழப்பமடைந்து நாட்களைத் தள்ளிப்போட்டுக் கொண்டே போவேன். இம்முறை அதை விடுத்து ஒரே முடிவில் தீர்க்கமாய் இருக்கிறேன். இதேபோல் நீங்களும் இருங்கள் தளபதியாரே" என்றார் இளவரசர். 

"சரி, இன்று மாலை நம் பல்லவ தேசத்தின் வெற்றிக்காகச் சிறப்பு யாகத்திற்கு அரசர் ஏற்பாடு செய்துள்ளார். அனைவரும் வந்திடுங்கள். பூஜை முடிந்ததும் முக்கிய அமைச்சர்களையும் அரசரையும் குலகுருவையும் பார்த்துப் போர் தொடுத்துச் செல்வதைச் சொல்லி குருவிடம் ஆசிபெற்றுக் கொள்ளலாம் சரி தானே?" என்றதும் "உத்தரவு இளவரசே" என்று விடைபெற்றார்கள் தளபதிகள். 

மாலையில் அரண்மனையில் சந்திப்போம்...

-சதீஷ் விவேகா 





#முடிமீட்ட_மூவேந்தர்கள் #சதீஷ்_விவேகா #சரித்திரத்_தொடர் #வரலாறு #தமிழ் #சோழர்கள் #கரிகாற்_சோழன் #போர் #களப்பிரர் #இருண்ட_காலம் #சிகரம்

1 comment:

Share it