Share it

Friday, September 14, 2018

முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | அத்தியாயம் - 05 | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா


பயணம் - 05 


கருக்கல் கலைந்து காலை நேரக் கதிரவன் கண் சிமிட்டியெழும் நேரத்தில் பல்லவ தேசத்து அரண்மனையை நோக்கிப் புரவிகள் வேகமாய் வந்து கொண்டிருந்தது. புரவியிலிருந்த வீரரின் கையிலிருந்த இலட்சினை அவர்களைத் தடங்கலின்றி அரண்மனைக்குள் அழைத்துச் சென்றது. இளவரசரைக் காண அனுமதி வேண்டி முன் மண்டபத்தில் காத்திருந்தார்கள். 

இளவரசரோ உறக்கமின்றி இரவை எரித்து அந்த ஒளியில் விடியலை எதிர்பார்த்துத் தன்னுடைய அலுவல் அறையின் சாளரத்தின் ஓரம் தெரியும் மூன்றாம் பிறையைப் பார்த்தபடியே நின்றவரின் மனதில் ஆயிரம் சிந்தனைகள் முடிவில்லாமல் நீந்திக் கொண்டிருந்தது. 




புரவி வீரர்களின் வருகையை இளவரசருக்கு மெய்க்காவல் வீரர் அறிவித்தார்கள். முகம் மலர்ந்தது இளவரசருக்கு. "உடனடியாக அழைத்து வாருங்கள்" என்று உத்தரவிட்டார். மெய்க்காவல் வீரர்கள் முன்வரப் பின்னே புரவி வீரர்கள் வந்தார்கள். சாளரத்தின் ஓரம் நின்றிருந்தவர் மேஜையின் அருகே வந்து ஆர்வமாய் வீரர்களைப் பார்த்தார். வீரர்கள் இளவரசருக்கு வணக்கத்தைக் கூறி இளவரசரின் ஆவலைப் புரிந்து கொண்டு "இளவரசே!!" என்று ஒற்றை வார்த்தை மட்டும் புரவி வீரர்களில் தலைமைப் பதவியில் இருந்தவர் சொன்னார். இளவரசர் நிமிர்ந்து மெய்க்காவல் வீரரைப் பார்த்து "ம்..." என்று தலையசைத்தார். மெய்க்காவல் வீரர்கள் அறைக்கு வெளியே சென்று பாதுகாத்து நின்று கொண்டார்கள். மெய்க்காவல் தலைவர் மட்டும் அறையைத் தாழிட்டு இளவரசருக்கு அருகே வந்து நின்று கொண்டார்.

"களபப்பு தேசத்தின் பாதுகாப்பு, மக்களின் வாழ்க்கை முறையில் மாற்றம், அண்டை நாட்டோடிருக்கும் நட்புறவின் நிலை, இறுதியாய் நாம் தற்போது படையெடுத்துச் சென்றால் நமது வெற்றி வாய்ப்புகள் எப்படி இருக்கும் என்பதை நீங்கள் அறிந்து ஆராய்ந்ததைச் சொல்லுங்கள். முதலில் உங்களில் வேங்கட மலை வழியே வனத்திற்குள் சென்று உளவு பார்த்து வந்தவர்கள் யார்?" என்றார். நான்கு பேர் முன்வந்து நின்றார்கள். "நீங்கள் சென்று வந்த பாதை பாதுகாப்பாகவும். சிரமமில்லாததாகவும் உள்ளதா? ஆற்றில் நீர் அதிகமாய் உள்ளதா?" என்று இளவரசர் கேட்டார் புரவிகளில் வந்த ஒற்றர்களைப் பார்த்து. 

"இளவரசே நீங்கள் சொன்னபடி கிழக்கு மற்றும் மேற்குப் பாதைகளில் இருவரிருவராய்ச் சென்றோம். கிழக்குப் பாதையை விட மேற்கில் நம்முடைய பிரத்யேகப் பாதையை ஒட்டிச் செல்லும் பாதை பாதுகாப்பானதாய் உள்ளது. ஆற்றில் நீரும் அளவாய் உள்ளது. நடந்து போகும் வழித்தடமும் சிரமமில்லாமலும் களப்பிரர்களுக்கு சந்தேகமில்லாமலும் இருக்கும்" என்று ஒற்றர் கூறியதும் "ஏன் கிழக்கே இருக்கும் மலைப்பாதை வேண்டாம் என்று சொல்லுகிறீர்கள்? எதாவது பிரச்சனையா?" என்றார் இளவரசர் உண்மையை அறியும் ஆவலில். "ஆம் இளவரசே! அடர்ந்த வனம் நிறைந்ததாக இருந்தாலும் அந்தப் பகுதியில் அவர்களின் நடமாட்டம் மிகவும் அதிகமாக உள்ளது. அதுமட்டுமில்லாது மலையோரத்தில் இருக்கும் நிலங்களை செம்மைப்படுத்தி வேளாண்மையும் நடக்கிறது. குடிகளும் அதிகம் தங்கியுள்ளார்கள்". 

"அப்படியா? அவ்விடம் வனம் சூழ்ந்த பகுதியாயிற்றே? காட்டு விலங்குகளின் தொந்தரவுகளும் இருக்குமே, எப்படி அந்த இடத்தில் வசிக்கிறார்கள்?" என்று இளவரசர் சந்தேகத்துடன் கேட்டார். "சரிதான் இளவரசே, அவர்கள் மலையிலும் மலையொட்டிய பகுதியிலும் வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள். மேற்குப் பகுதியில் சாலையில் போக்குவரத்தும், நம்முடைய நடமாட்டமும் அதிகம். எந்த நேரத்திலும் நாம் போர்தொடுப்போம், அதுவே அக்குடிகளுக்குத் தொந்தரவாய் இருக்கும் என்று களப்பிர மன்னர் நிச்சியம் அறிவார். அதனாலயே அவர்களை அங்கு தங்க வைத்துள்ளார். அந்த இடத்தில் பாதுகாப்பும் அளித்துள்ளார்." 

"நீங்கள் சொல்வதை நான் இப்படி புரிந்து கொள்கிறேன். எளிதில் நுழைய முடியாத இடத்திலும் பல்லவன் பல வியூகம் அமைத்து நுழைந்திடுவான் என்ற பயத்தினால் காவலைப் பலப்படுத்தி குடிகளையும் அமர்த்தியிருக்கிறான் களப்பிரன், சரிதானே? இனி நடக்கப் போவதைப் பார்ப்போம்" என்று மீசையை முறுக்கிவாறு சொன்னார் இளவரசர். "சரி களபப்பு தேசத்திற்குள் ஒற்றறியச் சென்றவர்கள் யார்? உள்நாட்டின் நிலவரம் எப்படி உள்ளது?" என்று பரபரப்பாய்க் கேட்டார்.

"இளவரசே! நாங்கள் வேங்கட மலைக்கு அப்பாலிருக்கும் களபப்பு தேசத்திற்குள் சென்றிருந்தோம். மக்களின் வாழ்க்கை முறையோ அல்லது ராஜ்ஜியத்தின் நடவடிக்கைகளிலோ மாற்றமில்லாது இயல்பாய் நகர்கிறது. நாட்டில் அறுவடை முடிந்து அடுத்த விளைச்சலுக்கு விவசாயிகள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். கழனிகளில்லாது இருப்பதால் நம்முடைய தேர்ப்படை நகர்வுக்கு ஏதுவாய் இருக்கும். நம்முடைய படையெடுப்பு எவ்வளவு விரைவாய் நகர்கிறதோ அதுவரை நமக்கு சாதகம் இளவரசே. தாமதித்தால் நமக்குத் தான் பின்னடைவு" என்றார் களபப்பு தேசத்திற்குள் சென்று வந்த ஒற்றர்களில் ஒருவர். "ஏன் அவ்வாறு கூறுகிறீர்கள்?" என்றார் இளவரசர் கூர்மையாய்.

"தாங்கள் அறியாதது இல்லை இளவரசே. இன்னும் இருமாதத்திற்குள் மழை காலம் ஆரம்பமாகப் போகிறது. அந்த சமயத்தில் நம் படை வனத்தின் வழியே களபப்பு தேசத்தினுள் நகர்வதென்பது இயலாத காரியம். அதுமட்டுமில்லாது விவசாயிகளும் விவசாயத்தைத் தொடங்கியிருப்பார்கள். விளைநிலத்தைப் பாழாக்குவதையே அரசர் பாவம் என்பார். முளைவிடும் பயிரோடு நிலத்தையும் அழிக்க சம்மதிப்பாரா இளவரசே? இச்செயலைக் கொலைக்கு சமானம் என்பார். அதனால் தான் அவ்வாறு சொன்னேன்" என்று அரசரை நன்குணர்ந்தவராய்ச் சொன்னார் ஒற்றர். "உண்மை. முற்றிலும் உண்மை தான்..." என்று ஆமோதித்தார் இளவரசர். 

"ம்... அடுத்து கொங்கு நாட்டிற்குள் சென்ற ஒற்றர்கள் யார்?" என்றார் இளவரசர். மூன்று பேர் முன்வந்து நின்றார்கள். "நீங்கள் தான் சென்றீர்களா? நல்லது. நாம் களபப்பு தேசத்தின் மீது படையெடுத்தால் கொங்கு நாட்டுச் சிற்றரசர்கள் துணைக்கு வருவார்களா? இல்லை இப்பொழுதிருந்தே காவலுக்கு துணைக்கு நிற்கிறார்களா?" என்று இளவரசர் கேட்டதும் மூன்று பேரில் வயதில் மூத்தவரான ஒரு மத்திம வயதுக்காரர் "இளவரசே தொண்டை மண்டலத்தை ஒட்டிய வேங்கட மலையிலிருக்கும் களபப்பு தேசத்திற்குக் கொங்கு மன்னர்களின் ஆதரவு என்பது மிகக் குறைவு தான். ஆனால் நந்தி மலையைச் சுற்றியுள்ள களப்பிரர்களுக்கு அண்டை நாட்டினர் மற்றும் சில கொங்கு நாட்டினரின் ஆதரவு உண்டு. அவர்களின் ஆதரவும் சுயலாபத்திற்குத் தானே தவிர நெருங்கிய நட்பு என்று சொல்வதற்கில்லை இளவரசே" என்றார் தான் அறிந்ததை. 

"தொண்டை மண்டலப் பகுதியை ஒட்டிய கொங்கு நாட்டில் அவர்களுக்கு நட்பு அரசர்களில்லை என்பதை எப்படி அவ்வளவு உறுதியாய் உங்களால் கூறமுடிகிறது?" என்றார் இளவரசர் தெளிவு பெறவேண்டி. "தொண்டை மண்டலத்தை ஒட்டியுள்ள கொங்கு நாட்டைச் சேர மன்னர்களும் சோழ மன்னர்களும் பாண்டிய மன்னர்களும் கொங்கு நாட்டின் மீது போர்தொடுத்துத் தன் வசப்படுத்தி வைத்துள்ளார்கள். அதையும் தாண்டி இங்கு சுயராஜ்ஜிய அரசர்கள் இல்லை. அதேநேரத்தில் மூவேந்தர்களின் கட்டுப்பாட்டிலிருக்கும் கொங்கு சிற்றரசர்களுக்கு அவர்களின் மீது கோபமும் இல்லை. அதனால் கிளர்ச்சியோ குழப்பமோ ஏற்பட வாய்ப்பும் இல்லை" என்று தெளிவாய் விளக்கினார் ஒற்றர். 

"நீங்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால் வேங்கட மலையிலிருக்கும் களப்பிரர்களின் மீது போர்தொடுத்தால் அவர்களுக்குத் துணையாய் யாரும் வரமாட்டார்கள் சரி தானே?" என்றார் இளவரசர். "உண்மை தான் இளவரசே. ஆனால் சமீபத்தில் அவர்களின் யானைப்படை வலுப்பெற்றுள்ளது. போர் வீரர்களின் எண்ணிக்கையும் போர்ப் பயிற்சி முறைகளும் சிறப்பாய் உள்ளதாய் முன்பே உங்களிடம் தெரிவித்துள்ளோம்" என்று ஒற்றர் மீண்டுமொருமுறை ஞாபகப்படுத்தினார் இளவரசருக்கு. 

"ஆம் நன்றாகவே ஞாபகம் உள்ளது. அதை மனதில் கொண்டே மனதில் திட்டம் வகுத்துள்ளேன். சரி நீங்கள் அனைவரும் மூன்று நான்கு நாட்களாய் உறக்கமில்லாமல் தகவலறிந்து வந்துள்ளீர்கள். போய் ஓய்வெடுங்கள். மாலை சந்திக்கலாம்" என்றார். சிரம் தாழ்த்தி "உத்தரவு இளவரசே" என்று விடைபெற்றுச் சென்றார்கள்.

அவர்கள் சொன்ன பதில்களால் இளவரசரின் மனம் தெளிவு பெற்றது. இறுக்கம் மறைந்து முகம் மலர்ந்தது. எழுந்து அரசரின் அறையை நோக்கி நடக்கத் தொடங்கினார். அவரின் வேகத்திற்கு வீரர்களால் ஈடு கொடுக்க முடியாமல் திணறினார்கள். அரசரின் அறைக் கதவு திறந்திருந்தது. காவலுக்கு நின்ற வீரன் சிரம் தாழ்த்தி வணக்கம் கூறி நின்றான். தலையை அசைத்துத் தான் வந்ததை அரசரிடம் தெரிவிக்கச் சொன்னார். வீரன் அரசரிடம் சென்ற மறுகணம் அழைப்பு வந்தது. அறையினுள் குளித்து முடித்து மேலாடையில்லாமல் வெற்று உடம்புடன் இறைவனை பூஜித்து அமர்ந்திருந்தார். இருநிமிடம் அமைதியாய் அமர்ந்திருந்தவர் எழுந்து உடம்பிற்குப் பட்டாடையைப் போர்த்தி இளவரசருக்கு அருகே வந்து "வா சிவா... என்ன விஷயம்? உன் முகம் மலர்ந்து பொலிவுடன் இருக்கிறது. காரணம் என்ன?" என்றார் இளவரசரின் தோள் மீது கைபோட்டபடி. 

"தந்தையே, நம் ஒற்றர்கள் இன்று அதிகாலையில் வந்திருந்தார்கள்" என்றதும் "என்ன செய்தி கொண்டு வந்திருக்கிறார்கள்" என்றார் ஆவலாய் அரசர். "நாம் முன்னரே முடிவு செய்தது போலத் தான் தந்தையே எல்லாம் நினைத்தபடி சாதகமாய் நடக்கிறது. எல்லாத் திசையிலிருந்து வரும் தகவல் எல்லாம் சுபச் செய்தியாய் வருகிறது" என்றார் மகிழ்ச்சியுடன். "மிகச் சிறப்பு. நாம் முன்பே எதிர்பார்த்த செய்தி தானே... மிக்க மகிழ்ச்சி சிவா..."

"இன்று அரண்மனையில் நம்முடைய வெற்றிக்காகச் சிறப்பு யாகத்தை ஏற்பாடு செய்திருக்கிறேன் சிவா" என்றார். "மிக்க மகிழ்ச்சி தந்தையே. என்ன தீடீர் ஏற்பாடு? என்னிடம் கூட சொல்லவில்லை?" என்று உரிமையாய் வினாவினார் இளவரசர். "வழக்கம் போல் செய்வது தானே? அதான் சிறப்பாய் சொல்ல வேண்டியதில்லை என்று நினைத்தேன். ஆனால் இம்முறை மனம் தைரியத்துடன் இருக்கிறது. வெற்றி நம்முடையது தானென்ற நம்பிக்கையும் அதிகமாய் உள்ளது சிவா" என்றார் பரவசத்துடன் அரசர். 

"நாளை காலாட்படையை கிளம்பச் சொல்லிவிடலாமா சிவா?" என்றார் அரசர் ஆர்வமாய். "காலாட்படை நகர்வு மட்டும் தளபதிகளின் ஒற்றர்கள் வந்து தகவல் சொன்னதும் அதையும் கருத்தில் கொண்டு படை கிளம்புவதை முடிவு செய்யலாம்" என்றார் இளவரசர். அரசருக்கு முகம் கொஞ்சம் வாடியது. "ஏன் சிவா? இவ்வளவு யோசனை?" என்றார். 



"ஏன் தந்தையே இப்படியொரு கேள்வி எழுப்புகிறீர்கள்?" என்றார் சந்தேகத்துடன். சற்று நேரம் எதுவும் பேசாது சாளரத்தின் அருகிலிருக்கும் மேஜையின் மீது இரு கைகளையும் ஊன்றியவாறு உதித்துப் பிரகாசித்திருக்கும் ஆதவனைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தார். அருகிலிருந்த தன்னுடைய மெய்க்காவல் வீரரை அழைத்து "அவை நாயகரிடம் சென்று நம் ராஜகுரு அரண்மனைக்கு வந்ததும் நான் சந்திக்க விரும்பியதாகவும் அவர் அழைத்ததும் எனக்குத் தகவல் தெரிவிக்கும்படி சொல்லி விட்டு வாருங்கள்" என்று உத்தரவிட்டார். 

வீரரை வெளியில் அனுப்பிவிட்டு நம்மிடம் ஏதோ தனிமையில் உரையாட நினைக்கிறார் என்பதை யூகித்துவிட்டார் இளவரசர். இருந்தும் எதுவும் அறியாதவர் போன்ற முகபாவத்தோடு நின்றிருந்தார். வீரர் கிளம்பிச் சென்றதும் "சிவா பூஜையில் நீ கலந்து கொள்வாய் தானே?" என்றார் ஆசையாய். "உறுதியாய் சொல்வதற்கில்லை தந்தையே... மாலை தளபதிகள் வருவார்கள். அவர்களுடன் விவாதிக்க வேண்டும். ஆனால் பூஜை முடிவதற்குள் கலந்து கொள்ள முயற்சிக்கிறேன் தந்தையே" என்றார். "கலந்து கொள் சிவா. இது பல்லவ தேசத்தின் மேன்மைக்காக நடத்தப்படும் யாகம். நீயிருக்க வேண்டும்" என்றார் அரசர். "அதுவந்து தந்தையே, தளபதிகளின் பதிலைப் பொறுத்து உடனடியாய்ப் படையெடுப்பைத் தொடங்க வேண்டும். அதற்குண்டான வேலைகள் நிறைய உண்டல்லவா? அதைக் கவனிக்க வேண்டும். அதனால் தான் கூறுகிறேன்..." என்று இழுத்தார். 

அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்த அரசர் தீடீரென்று "போதும் நிறுத்து சிவா. விவாதித்துத் தெளிந்தவரை போதும். நாளை மதியம் படையைக் கிளம்பத் தயாராய் இருக்கச் சொல்... இனிவரும் தகவல் சாதகமானதோ பாதகமானதோ யோசிக்க வேண்டாம். கிளம்ப ஆயத்தமாக்கு. கடத்தும் ஒவ்வொரு கணமும் நம்முடைய வாய்ப்பை இழக்கிறோம் என்று உணர். நாளை மதியம் முதல் படை வனத்தின் வழியே செல்லட்டும். இரண்டு நாள் கழித்து மீதமுள்ள இருபடைகளும் தனித்தனியாய்க் கிளம்பட்டும். மனதைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்காதே. தளபதிகளை உடனடியாய் வரச்சொல். உத்தரவுகளைப் பிறப்பித்து ஆக வேண்டியவைகளைப் பார்க்கச் சொல்" என்று தீர்க்கமாய் சொன்னார் அரசர். 

இளவரசர் ஒருகணம் ஆடிப்போய் விட்டார் அரசரின் வார்த்தையின் வீச்சைப் பார்த்து. பின் நிதானித்து "ஏன் தந்தையே இவ்வளவு கோபப்படுகிறீர்கள்? அரைநாள் பொறுங்களேன். அவசரம் வேண்டாம் தந்தையே" என்றார் பணிவுடன். "இதற்குப் பெயர் அவசரமில்லை சிவா அவசியம்... நாம் பேசிக்கொண்டு மட்டும் தான் இருக்கிறோம். பல்லவ தேசத்தின் முன்பிருந்த வேகம் இப்பொழுது இருக்கிறதா? இல்லை, குறைந்து விட்டது. எப்பொழுதும் ஆலோசனை திட்டமிடுதலிலேயே நகர்கிறோம். செயலில் இறங்குவது எப்பொழுது சிவா? ஆனால் நம்முடைய எதிரியின் பலம் நானறிந்த வரை கூடிக் கொண்டு வருகிறது. நாமும் அதற்குத் தகுந்தாற்போல் செயல்பட வேண்டும். ஆனால் இங்கோ ஒவ்வொன்றாய்ப் பேசிப்பேசிப் பின் தெளிந்து படையெடுத்து நாம் நகரும் பொழுது அவன் விஸ்வரூபம் எடுத்து நிற்பான். நாம் சென்று அவனிடம்..." என்று அரசர் முடிக்கும் முன் "தந்தையே வேண்டாம். அந்த வார்த்தை கேட்கவா இரவு பகல் பார்க்காது உழைத்து வருகிறேன்?" என்று கோபப்பட்டார்.

அரசர் தன்னுடைய ஆதங்கத்தைக் கட்டுப்படுத்தி இளவரசரைத் தோளோடு அணைத்து மென்மையாய்ப் புன்னகை விடுத்து "சிவா... உண்மையைப் புரிந்து கொள். உன் உழைப்பையும் நீ நாட்டின் மீது கொண்ட பற்றையும் நான் குறைத்து மதிப்பிடவில்லை. அவமதிக்கவும் இல்லை. நாம் எப்பொழுது களபப்பு தேசத்தினுள் நுழைய வேண்டும், அந்த நேரம் நமக்கு வெற்றியைத் தருமா? என்று தீர்க்கமாய் சிந்தித்த பின் தான் போர் பற்றியே யோசித்தோம். நம் எதிரிகளின் நிலை, அவர்களின் பலம், பலவீனம் என அனைத்தையும் தீர விசாரித்துத் தெளிந்து ஆலோசனை செய்த பின் போர்தொடுக்க முடிவெடுத்தும் விட்டோம். ஆனால் நீயோ திருப்தியாகவில்லை மீண்டும் ஒருமுறை ஒற்றறிய வேண்டும் என்றாய். அதற்கும் சரியென்றேன். மீண்டும் செய்தி கிடைத்துத் தெளிந்த பின் அதிலும் திருப்தியாகாது தளபதிகளின் பதில் வரட்டும் என்று காலம் தாழ்த்திக் கொண்டேயிருப்பது ஒரு எதிர்கால அரசருக்கு அழகில்லை சிவா" என்று பொறுமையாய் எடுத்துரைத்தார் தன் மகனுக்கு அரசர். 

அமைதியாய்க் கேட்டுக் கொண்டிருந்தவர் அருகிலிருந்த ஆசனத்தில் அமர்ந்தார் இளவரசர். சில நிமிடம் நிசப்தமாய் இருந்தது அறை. வெளியில் சென்றிருந்த வீரன் அறையினுள் வந்து வணங்கி "அரசே ராஜகுரு வந்துவிட்டார். அவரின் அறையில் தங்களுக்காகக் காத்திருக்கிறார்" என்றார் பணிவுடன். 

"சிவா. நிதானமாய் யோசி... நான் சொன்னது உனக்குப் புரியும். நான் வருகிறேன்" என்று இளவரசரின் கூந்தலை வருடிவிட்டு ராஜகுருவைப் பார்க்க அவரின் அறைக்குச் சென்றார் அரசர்.

இளவரசருக்குத் தந்தையின் அறிவுரையிலிருக்கும் உண்மை விளங்கத் தொடங்கியது. இனி என்ன? 

வருவோம்... 

-சதீஷ் விவேகா 





#முடிமீட்ட_மூவேந்தர்கள் #சதீஷ்_விவேகா #சரித்திரத்_தொடர் #வரலாறு #தமிழ் #சோழர்கள் #கரிகாற்_சோழன் #போர் #களப்பிரர் #இருண்ட_காலம் #சிகரம்

No comments:

Post a Comment

Share it