Share it

Wednesday, September 12, 2018

முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | அத்தியாயம் - 04 | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா

பயணம் - 04


அந்தி சாய்ந்து ஆதவன் மறையும் மாலை நேரம். பொன்னிறக் கதிர் எங்கும் பரவி மங்களகரமாய்க் காட்சிளித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இளவரசர் அவரின் மெய்க்காவல் வீரர்களுடன் புயலெனப் புரவியில் பாசறையைச் சென்றடைந்தார். வாயிலில் எக்காளம் அடித்து இளவரசரின் வருகை தெரிவிக்கப்பட்டது. முன்புறத்தில் நின்றிருந்த உபதளபதிகளும் வீரர்களும் நேராய் வரிசையாய் நின்றார்கள். வீரர்கள் இமைகள் கூட இமைக்காமல் நேராய் நிமிர்ந்து நின்றிருந்தார்கள். அறையிலிருந்த தளபதிகள் அவ்விடம் வந்து வரிசையாய் நின்றார்கள். குதிரையை விட்டுக் குதித்து இறங்கியவர் வீரர்கள் நின்றிருந்த இடம் நோக்கி விரைந்தார். வீரர்கள் வாளையும் வேலையும் நிலத்திலூன்றி மண்டியிட்டு இளவரசருக்கு வணக்கத்தைக் கூறினர். வீரர்களின் வணக்கத்தை ஏற்று பதில் வணக்கமளித்தார். தளபதிகள் வந்து அவரை அறையை நோக்கி அழைத்துச் சென்றார்கள். 



சுற்றிலும் மூன்றடுக்குப் பாதுகாப்பிலிருக்கும் பாசறை இன்று கொஞ்சம் கூடுதல் பாதுகாப்பிலிருந்தது. விவாதிக்கப்படும் அறையைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு இருந்தது. சிறப்புப்படை வீரர்களைத் தவிர மற்ற வீரர்களுக்கு அங்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு விசயத்தையும் தெளிவாய்க் கண்காணித்தபடியே அறைக்குள் சென்றார் இளவரசர். அவரின் பின்னே தளபதிகளும் அறைக்குள் பிரவேசித்தார்கள். சதுரமான அறை அது. தூண்களில் ஒளிரும் பந்தங்கள் ஆங்காங்கு விளக்குகள் வாசனை திரவியம் கலக்கப்பட்டு அது ஒளியுடன் மணத்தையும் அறை முழுவதும் நிரப்பிக் கொண்டிருந்தது. இளவரசர் அமர சிறு மேடை போன்ற அமைப்புடைய இடத்தில் ஆசனமிடப்பட்டிருந்தது. தளபதிகள் அமர அதற்கு எதிர்ப்புறமாய் ஆசனம் போடப்பட்டிருந்நது. சுவரில் பல்லவ தேச வரைபடமும் அதைச் சுற்றியுள்ள தேசங்களின் வரைபடங்களும் முக்கிய சாலைகள் மற்றும் அங்கிருக்கும் முக்கிய இடங்களும் வரைபடத்தில் குறிக்கப்பட்டிருந்தது. 

ஆசனத்தின் அருகே சென்று திரும்பி தளபதிகளை அமரச்சொல்லித் தானும் அமர்ந்தார். அவரின் இருபுறத்திலும் மெய்க்காவல் வீரர்கள் வாளேந்தியபடி நின்றிருந்தார்கள். அமைதியாய் அனைவரும் வந்து விட்டார்களா எனக் கண்களை உலாவ விட்டு உறுதிப்படுத்திக் கொண்டு தளபதிகளைப் பார்த்துத் "தங்களின் உபதளபதிகளையும் உள்ளே அழையுங்கள்" என்றார். தளபதி ஒருவர் வெளியே சென்று வீரரிடம் இளரசரின் உத்தரவைக் கூறியதும் அனைத்து உபதளபதிகளும் தளபதிகளின் இருக்கைக்குப் பின்னால் ஒன்றும் விளங்காமல் ஒருவிதமான பதற்றத்துடன் நின்றிருந்தார்கள். "ஒற்றர்களை அனுப்பிவிட்டீர்களா?" எனக் கேட்டார். "அனுப்பி விட்டோம் இளவரசே" என்றார்கள் பணிவுடன். "சரி சந்தோஷம். தகவலேதேனும் வந்ததா?" என்றார் சந்தேகத்துடன். "நேற்று தான் கிளம்பினார்கள் நாளையிலிருந்து தகவல் வரத் தொடங்கும் இளவரசே" என்றார்கள் மாறாத பணிவுடன். "நல்லது. நம் படைகள் நகர்வு குறித்துத் திட்டம் ஏதேனும் வகுத்தீர்களா?" என்று இளவரசர் கேட்டதும் தளபதிகள் அவரவர் மனதிலிருந்த கேள்விகளால் இளவரசரைத் துளைத்தெடுக்கத் தொடங்கினார்கள். 

அனைத்துக் கேள்விகளுக்கும் மனம் கோணாது பதிலளித்து வந்தார். ஒரு கட்டத்தில் "நிறுத்துங்கள்!!!" என்று கூறி எழுந்தார். தளபதிகளும் எழ எத்தனித்தார்கள். தடுத்துக் கையமர்த்தி அமரச் செய்து மேடையின் மீது இளவரசர் மௌனமாய் இடமும் வலமும் நடந்து கொண்டு அவையினரைப் பார்த்து "ஆக ஒருநாள் முழுக்கக் கேள்விகளை மட்டுமே தயாரித்துள்ளீர்கள். போர்த்திட்டத்தைப் பற்றி யோசிக்கவில்லையா?" என்றார் கொஞ்சம் கண்டிப்பாய். அறை நிசப்தம் ஆனது. 

"இளவரசே! இது மற்ற போர்களைப் போலிருந்தால் எளிதாய்த் திட்டத்தை உருவாக்கியிருப்போம். ஆனால் இதுவோ சுற்றியும் கருநாகத்தை வைத்துக்கொண்டு நடுவிலிருக்கும் மாணிக்கக்கல்லை எடுப்பது போல் உள்ளது இளவரசே" என்று தன் மனதில் பட்டதை மறைக்காமல் உரைத்தார் தளபதிகளில் ஒருவர். "நல்ல உதாரணம் தான். ஆனால் கருநாகத்தைத் திசை திருப்பி மாணிக்கக்கல்லை எடுக்க வேண்டுமே?" என்று பதில் கேள்வி கேட்டார். 

"அவரவர் படைகளை எவ்வாறு நகர்த்தலாம் என்று யோசித்திருந்தாலே ஒரு திட்டம் கிடைத்திருக்கும். ஆனால் இத்தனை பேர் இருந்தும்..." என்று பல்லைக்கடித்தார் இளவரசர். நடுங்கிப் போனார்கள் சபையிலிருந்தோர்கள். "இதுவரை இப்படியொரு பிசகு இருந்ததில்லையே இம்முறை ஏன்?" என்று இளவரசர் கர்ஜித்தார் சிங்கமாய்.. மனதில் பயத்தைத் தேக்கி வைத்துக் கொண்டு தைரியத்தை வரவழைத்து "இளவரசே! இது சாதாரண போர் அல்ல என்று அரசர் கூறியதைக் கேட்டோம். உங்களின் முனைப்பையும் பார்த்தோம். இது பல்லவத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் போர். அதுவும் பல்லவத்தைப் பணயம் வைத்து... அதனால் ஏற்பட்ட பிழை தான் இளவரசே... மற்ற போர் போல் இருந்தால் இந்தப் பதற்றமும் நடுக்கமும் இருந்திருக்காது... பல்லவத்திற்காக உயிரையும் தர ஆயத்தமாய் உள்ளோம். ஆனால் எங்கள் மேல் கோபம் மட்டும் கொள்ளாதீர்கள் இளவரசே!" என்றார் யானைப்படையின் முதன்மைத் தளபதி. மௌனம் காத்த இளவரசர், நிலைமையைப் புரிந்து கொண்டு தான் திட்டம் வகுத்துக் கொண்டுவந்ததைச் சொன்னார். அனைவரின் முகமும் மலர்ந்தது. 

தான் நின்றிருந்த இடத்திலிருந்து வரைபடம் மாட்டியிருக்கும் இடத்திற்கு வந்தடைந்தார். அனைத்துத் தளபதிகளும் எழுந்து நின்று உன்னிப்பாய்க் கவனிக்க ஆயத்தமானார்கள். "இந்த வரைபடத்தின் இடம் அனைத்தும் நன்கு விளங்கும் தானே?" என்றார் தளபதிகளையும் உபதளபதிகளையும் பார்த்து. "நல்ல பரிச்சயம் இளவரசே" என்று சபையிலுள்ளோர்கள் கூறினார்கள். தன்னுடைய வலக்கரத்தால் இடையிலுள்ள குறுவாளை எடுத்து வரைபடத்தில் சுட்டிப் பல்லவ தேசத்துப் படைகளின் ஒவ்வொரு நகர்வும் எப்படி இருக்க வேண்டுமென்று அனைவருக்கும் எளிதாய் விளங்கும் வகையில் தன்னுடைய திட்டத்தைத் தெளிவாய் விளக்கினார். அனைவருக்கும் குழப்பம் தீர்ந்தது. நிம்மதி பிறந்தது. 



"இந்தத் திட்டத்தில் குறையிருப்பின் யார் வேண்டுமானாலும் சுட்டலாம்" என்றார் இளவரசர். "களப்பிரர்கள் நந்திமலையிலிருந்து இந்தப் பிரதான சாலையைத் தான் பயன்படுத்தி அருவா வடதலைக்குள் நுழைய வேண்டிய அவசியமில்லையே இளவரசே? கொங்கு தேசத்திற்குள் நுழைந்தால் எளிதாய் அடையலாம். அப்படி நுழைந்தாலே நம் திட்டம் வீணாகும் வாய்ப்புள்ளது அல்லவா இளவரசே?" என்று தளபதி கேட்டார். "மிகச்சரியான கேள்வி தங்களுடையது. அடுத்து என்ன கேள்வி?" என்றார் இளவரசர் முதல் கேள்விக்கு பதிலளிக்காமலேயே. 

"களப்பிரர்கள் மீது நாம் தாக்குதல் நடத்தும் மறுகணம் அவர்களுக்கு நட்பான கொங்கு நாட்டுச் சிற்றரசர்கள் துணைக்கு வருவார்கள் அல்லவா இளவரசே? அவர்களை நாம் சமாளிக்க என்ன செய்யலாம்?" என்று உபதளபதிகளில் ஒருவர் கேள்வி கேட்டார். "இந்த இருகேள்விகளுக்கான விடை நம்முடைய திட்டத்திலே இருந்ததே?" என்றார் இளவரசர். "யாருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்களேன்" என்று திரும்பி அவர்களைப் பார்த்து கேள்வியைத் திருப்பி விட்டுக் கை கட்டி வேடிக்கை மட்டும் பார்த்தார். சபை சலசலத்தது. 

"ஏன் குழப்பம்? நந்தி மலைக்குத் தகவல் செல்லட்டும். களப்பிரர்களின் நட்பு நாடுகள் தகவலறிந்து படையெடுத்துக் களம் புகட்டும். ஆனால் களப்பிரர்கள் நந்திமலையிலிருந்து நகர்ந்த மறுகணமே எல்லையிலிருக்கும் நம்படை களபப்பு தேசத்தினுள் நுழையும். நந்தி மலை நம் வசமாகும். இதை நன்கு உணர்ந்தவன் களப்பிரன். அதனால் நந்திமலையை விட்டு நகரமாட்டான். நட்பு தேசத்தை மட்டுமே ஏவுவான். நட்பரசர்கள் வந்து நிலைமையைப் புரிந்து திட்டம் வகுத்து நம்மேல் போர்தொடுக்கும் முன் களப்பிரர்களை அவர்களின் தேசத்திலிருந்து விரட்டியடித்து அருவா வடதலை தேசத்திற்குள் நாம் நுழைந்து விடலாம். இதுதான் நடக்கும். தங்களுடைய இரு கேள்விகளுக்கும் இதுதான் என்னுடைய பதில்" என்றார் இளவரசர். 

"இதற்கடுத்து களப்பிரர்கள் ஒன்று அருவா நாட்டிற்குள் நுழைய வேண்டும். இல்லையெனில் கொங்கு தேசத்திற்குள் தஞ்சம் புக வேண்டும். இந்த இரண்டில் ஒன்றுதான் சாத்தியம். கொங்கு நாட்டிற்குள் நுழைந்தால் நமக்குத் தொண்டை மண்டலத்தைப் பிடிப்பது மிக எளிது. அருவா நாட்டிற்குள் நுழைந்தால் இதேபோல் சரியான காலத்திற்குக் காத்திருந்து அருவா நாட்டைப் பிடிக்க வேண்டும். இதுதான் நடக்கும். இதைத் தாண்டி நடக்க வாய்ப்பே இல்லை" என்று உறுதியாய்ச் சொன்னார் இளவரசர்.

"அபாரம் இளவரசே. ஆனால் வடக்கிருந்து நம் நாட்டின் மேல் போர்தொடுத்தால்..." என்றார் ஒரு உபதளபதி. மெல்லிய புன்னகை விடுத்து "வடக்கில் பாதுகாப்பை உறுதி செய்யாமல் தெற்கில் நகரத் திட்டமிடுவேனா?" என்று இளவரசர் சொன்னதும் அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து "என்ன சொல்லுகிறீர்கள் இளவரசே, உண்மையாகவா?" என்றார் தளபதி ஆச்சரியமுடன். "உண்மை தான். அனைத்து எல்லைக்காவல் படைத் தலைவர்களுக்கும் ஓலையனுப்பியாகி விட்டது. பல்லவ தேசத்தைப் பணயம் வைத்து நகரப் போவதில்லை. பாதுகாப்புடன் நிறுத்தித் தான் நகர்கிறோம். அடுத்த உயரத்தை நோக்கி..." என்றார் இளவரசர். சபையிலுள்ள அனைவரும் ஒருமித்த குரலில் ஜெய கோஷத்தை எழுப்ப மண்டபமே அதிர்ந்தது. 

"ஆஹா... பிரமாதம் இளவரசே. சிறப்பு... மிகச் சிறப்பு. நம்முடைய எல்லைகளுக்குள்ளும் யாரும் நுழைய முடியாது. படைகொண்டு நகரும் நாட்டிற்குள்ளும் நமக்குத் தடையாய் யாரும் இருக்க முடியாது. அப்படியொரு மிகச் சிறந்த திட்டம் இளவரசே!" என்றார்கள் பெருமிதத்தோடு தளபதிகள். "இன்னும் ஏதேனும் சந்தேகம் உண்டா?" என்றார். "இல்லை இளவரசே" என்றார்கள் சபையோர்கள். "அப்படியெனில் ஒற்றர்கள் வரும்முன் யாருடைய படை எந்த வழி நகர வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். காட்டின் வழியே செல்லும் காலாட்படைக்கு சமயோசிதமாய்ச் சிந்திக்கும் இரண்டாம் நிலை தளபதிகளில் நான்கு பேர் தலைமை தாங்கிச் செல்லட்டும். காட்டுப் பயணம், அதனால் மிகக் கவனம் அவசியம். அதை மனதில் கொண்டு யாரை அனுப்பினால் உத்தமமாயிருக்கும் என்பதை முதன்மைத் தளபதிகள் கூடி முடிவெடுத்து வையுங்கள்". 

"பிரத்யேக சாலையில் செல்லும் படைக்கு நானே தலைமையேற்கிறேன். அதில் அனைத்துப் படைகளும் இடம்பெறும். இந்த நகர்வு சந்தேகமில்லாத ஒரு நகர்வாய் இருக்கும். யாரும் எதிர்பாராத நேரத்தில் படை கிளம்பும். அடுத்துப் பிரதான சாலையின் வழியே எல்லைக்குச் செல்லும் படையிலும் அனைத்துப் படைகளும் இருக்கும். அதற்கு முதன்மைத் தளபதிகள் இருவர் தலைமை ஏற்று வழிநடத்துவார்கள். இந்த நகர்வும் சாதூர்யமாக நகரவேண்டும். என் அனுமதியோ மன்னரின் அனுமதியோ இல்லாமல் படை எப்புறமும் நகர்தல் கூடாது. எல்லையிலேயே முகாமிட்டுத் தங்கியிருங்கள். எங்கு செல்ல வேண்டும் என்ற தகவல் கிடைத்ததும் உடனடியாகப் படை அந்தப் பகுதிக்குக் கிளம்ப வேண்டும். மிகக் கவனமான விசயம், என் முத்திரை அல்லது மன்னரின் முத்திரையிட்ட ஓலை வந்தால் மட்டுமே நகர வேண்டும்" என்றார் கூர்மையாய். "சந்தேகிக்கும் நபர்களின் நடமாட்டத்தைக் கண்டால் உடனடியாக விசாரித்துக் கைது செய்து உங்களின் கட்டுப்பாட்டிலேயே வையுங்கள் சிறைக்குக் கொண்டு செல்ல வேண்டாம். விளங்கியது தானே?" என்றார். "நன்கு புரிந்தது இளவரசே!" என்றார்கள் முதன்மைத் தளபதிகள். 

"சரி. அனைவரும் கவனமாய் இருங்கள். குறிப்பாய் யானைப்படைக்கு சிறப்பாய்ப் பயிற்சியளியுங்கள். வீரர்களை இப்பொழுதிருந்தே மனதளவில் தயாராக்குங்கள். ஒற்றர்கள் வந்ததும் நிலைமையறிந்து முதல் குழு செல்லவேண்டும். அதற்குண்டான பணிகளும் விரைவாய் நடக்கட்டும். நாளை இதே நேரம் வருகிறேன்" என்று அனைத்தையும் கூறிவிட்டு மெய்க்காவல் புடைசூழக் கிளம்பினார் இளவரசர் சிவஸ்கந்தவர்மன். 

விடியலுக்கான நேரம் கனிந்து வரத் தொடங்கியது. விரைந்து வருவோம்... 

- சதீஷ் விவேகா 





#முடிமீட்ட_மூவேந்தர்கள் #சதீஷ்_விவேகா #சரித்திரத்_தொடர் #வரலாறு #தமிழ் #சோழர்கள் #கரிகாற்_சோழன் #போர் #களப்பிரர் #இருண்ட_காலம் #சிகரம்

No comments:

Post a Comment

Share it