Share it

Thursday, September 6, 2018

அவளும் நானும் | சிறுகதை | கதிரவன்

எல்லோரும் படிக்கிற மாதிரி ஒரு கதை சொல்லணும்னு முடிவு பண்ணிட்டேன். சரி அப்ப இதுவரை பயணிக்காத இடத்திற்கு போகலாம்னு முடிவு செஞ்சதும் நான் எழுதுன பதிவு தான் நீங்க படிக்க போறது. அப்புறம் என்ன யோசனை எனது விரல்களை பிடிச்சுக்கோங்க, உங்களை ஒரு அழகான குடும்பத்திற்குள் அழைத்து செல்கிறேன்.



காலையில் இருந்து எந்த அறிகுறியும் காட்டாத வானம் சூரியன் மறைந்ததும் நீண்ட கால தாகமாய் மண்ணில் மழையாய் உருவெடுத்து பெருக்கெடுத்து பாய்கிறது. ஆபிஸ்ல இருந்து வெளியேறி சிக்னலில் சிதைந்து மழையில் நனைந்து என்னோட அபார்ட்மெண்ட்ஸ் வரும்போது மணி ஒன்பது தாண்டியது .திறந்த படி கிடக்கும் அபார்ட்மெண்ட்ஸ் உள்ளே போய் உடை மாற்றி உணவு சமைத்து சாப்பிடும் போது அவள் என்னை கடந்து செல்கிறாள். வழக்கம் போல் எந்தவித சலனமும் இன்றி .சாப்பிட்டு முடித்ததும் அவள் அறையை கடந்தே என் அறையில் ஐக்கியம் ஆகிறேன். அன்று தபுசங்கர் எழுதிய கவிதைகள் படிக்கிறேன். கவிதைகள் என்னை பின்னோக்கி தள்ளுகிறது .

பழனி பக்கத்துல நெய்க்காரப்பட்டி தாங்க என் சொந்த ஊர். தனித்தன்மை இல்லாத தமிழை பேச்சு வழக்கில் கொண்ட ஊர் பழனி. குட்டி கோடம்பாக்கம்னு தான் சொல்றாங்க. வருஷத்துல பாதிக்கும் மேல சினிமா சூட்டிங் நடக்கும். இன்னும் அழியாத விவசாயம் அங்க இருக்கு. எங்கப்பா முருகேசன் ஒரு விவசாயி. விவசாயத்த கெளரவமா நினைக்குறவர். எங்கம்மாவுக்கு தெரிஞ்ச உலகமே எங்கப்பா, நான் அப்புறம் இரண்டு அண்ணன்கள் ஒரு தங்கச்சி. அண்ணன்களுக்கு கல்யாணம் ஆகி ஒவ்வொருத்தருக்கும் இரண்டு இரண்டு குழந்தைகள். தங்கச்சிக்கும் கல்யாணம் பண்ணிட்டாங்க. எங்க வீட்ல நான் நிறைய படிச்சேன். மும்பை, சென்னை, பெங்களுர்ன்னு நிறைய ஊர்களுக்கு கம்பேனி மூலமா போய்ட்டு வந்திருக்கேன்.



தீபாவளி, பொங்கலுக்கு ஊருக்கு வந்தே ஆகணும்னு அப்பாவோட கட்டளை. அப்பாவோட அதட்டல விட அம்மாவோட அன்புக்கு அடிமை. ராத்திரி வந்துட்டா போதும் எங்கம்மாவ நடுவுல உக்கார வச்சு நாங்க எல்லோரும் சுத்தி உக்காந்து அம்மா கையால உருண்ட சோறு சாப்பிடுவோம். பசி அடங்கிய பின்பும் அம்மா கையால சாப்பிட ஆசையா இருக்கும். எனக்கும் என் தங்கச்சிக்கும் அம்மா மடியில படுக்க பெரிய சண்டையே நடக்கும் இப்ப வரைக்கும். எங்கப்பாவோட நண்பர் சுப்பிரமணி பல வருஷத்துக்கு அப்புறம் ஊருக்கு திரும்பினார். எங்கம்மாவும் அப்பாவும் போய் நலம் விசாரிச்சுட்டு வந்தாங்க. அவுங்களுக்கு எல்லா உதவியும் அப்பா தான் செஞ்சு தந்தார். ஒரு நாள் அப்பா எனக்கு போன் பண்ணி "அருண் நம்ம மணி பெரிய பொண்ணு ஏதோ இண்டர்யூ விஷயமா நாளைக்கு காலையில சென்னை வருது. கூட இருந்து உதவி பண்ணி நைட் ரயில்ல ஏத்தி விட்ரு. ஊருக்கு புதுசு தம்பி. கவனமா பாத்துக்க சரியா" என்றார். அன்னைக்கு லீவ் போட்டுட்டு அவளுக்காக ஸ்டேஷன்ல காத்திருந்தேன். ரொம்ப சின்ன வயசுல பாத்தது இப்ப எப்படி இருப்பான்னு தெரியல. சின்ன வயசுல அவளுக்கு பேய் கதை சொல்லி அழக வச்சுருவேன். அதை நினைச்சு எனக்கு நானே சிரிச்சுட்டு இருந்தேன்.

ரயில் வந்ததும் எல்லோரும் வெளியேறிய படி இருக்க எனது தோள்களை ஒரு கை தொட திரும்பினேன். அது அவளே தான். பாத்ததும் உணர முடிந்தது. அதே விஜியாகவே சிரித்தாள். நான் போலாம்னு சொன்னதும் அவளது லக்கேஜ் என்கிட்ட கொடுத்துட்டு என்கிட்ட பேசிட்டே வந்தா. அவ என்னை இன்னும் அரை டவுசர் போட்டிருந்த அருணாகவே நினைத்து பேசி கொண்டே இருந்தாள். ஆனால் நான் என்னையே அறியாமல் அவளது பேச்சை ரசித்து கொண்டு இருந்தேன். என்னோட ரூம்ல போய் ரெடியானதும் நல்ல ஹோட்டல்ல சாப்பிட்டு இண்டர்வியூ அட்டண்ட் பண்ணி செலக்ட் ஆனதும் இரவு ரயில்ல அனுப்பி வச்சிட்டு ரூம்க்கு வந்ததும் அன்று நடந்த எல்லா சம்பவங்களையும் நினைவுபடுத்தி மகிழ்ந்தேன். எனக்குள் அவளது அசைவுகள் கூட கவிதையாகி போனது. காற்றில் பறந்த அவளது கூந்தல் அசைவும் ஓவியமானது. எனது கனவுகளில் நிறைந்தவள் ஒரு வாரத்துக்கு பிறகு சென்னைக்கு வேலைக்கு வந்தாள். கம்பேனில அவளுக்கு ரூம் கொடுத்திருந்தாங்க. ஞாயிற்றுக்கிழமை மட்டும் வெளிய வரலாம். ஆனா அவ வர்றது கிடையாது. எனக்கும் கூப்பிட தைரியம் வரல.

ஒரு நாள் அவளா கூப்பிட்டு "அருண் இன்னைக்கு எனக்கு பிறந்த நாள். அம்மா உன்னை கூட்டிட்டு கோயில் போயிட்டு வர சொன்னாங்க" என்றதும் மின்னலை விட வேகமாய் அவள் முன் தோன்றினேன். அவளோட விருப்பத்திற்கு கோயில் அப்புறம் என்னோட விருப்பத்திற்கு ஹோட்டல்ன்னு சுத்திட்டு நைட் ரூம்க்கு கூட்டிட்டு போய்விட்டேன். நாளுக்கு நாள் அவளை ஞாயிற்றுகிழமைகளில் வரவழைத்து தியேட்டர், பீச்சுன்னு போயிட்டு வந்தோம். இப்பவெல்லாம் அம்மாவின் அனுமதி தேவைப்படாமல் போனது. கொஞ்சம் கொஞ்சமாய் எங்களுக்குள் காதல் படர்வதை இருவரும் உணர்ந்தோம். எதிர்ப்பாராத தீண்டுதல்களில் விலகினோம். அடுத்த தீண்டலுக்காக காத்திருந்தோம். காதலை சொல்ல காதலர் தினத்தை பயன்படுத்தி கொண்டோம். தயக்கமே இல்லாமல் காதல் மலர்ந்தது. உரிமை கூடியது. சுதந்திர காதலை சுவாசித்தோம்.

காதல் கண்டிப்பாக காட்டி கொடுத்துவிடும். எங்களை ஊருக்கு வர சொன்னார்கள். நோக்கம் புரிந்து உறுதியுடன் புறப்பட்டோம். இரண்டு குடும்பத்தாரும் எங்கள் வீட்டில் கூடி இருந்தனர். எங்கப்பா மெளனம் கலைத்து "அப்புறம் சென்னை முழுக்க சுத்து சுத்துன்னு சுத்துவீக போல. என்னப்பா காதல்னு சொல்ல போறீங்களா?" என்றதும் யோசிக்காமல் தலையசைத்தேன். எங்கப்பா ரொம்ப அமைதியாக "என் நண்பன் என் மேல வச்சிருந்த நம்பிக்கையும் ஒரு தகப்பனா நான் வச்சிருந்த நம்பிக்கை இரண்டுமே தப்பா போயிருச்சு. எங்கள பத்தியெல்லாம் நீங்க யோசிக்கவே இல்ல தானே. சரிப்பா கடைசியா ஒரே வார்த்தை. எங்களோட நட்பு முக்கியம்னா காதல மறந்து தான் ஆகணும். உங்களோட காதல் முக்கியம்னா பெத்தவங்கள மறந்துட்டு கிளம்புங்க" என்றதும் அனைவரும் அவரின் பேச்சிற்கு ஆமோதிப்பதாய் அமைதியாய் இருக்க நான் அவள பார்த்து "போலாம் விஜி. நம்ம வாழ்க்கையை நம்மளே முடிவு பண்ணிக்கலாம்" என்று அவள் கரம் பற்றி வெளியேறினேன்.

(வழக்கமான விஷயம் தான் இப்போதைக்கு ஒரு இடைவேளை எடுத்துக்கலாம்)

சென்னை வந்ததும் நண்பர்கள் மத்தியில் பதிவு திருமணம். சொந்தமாக ஒரு அபார்ட்மெண்ட்ஸ். இருவர் மட்டுமே வாழும் சொர்க்கம். இறுக்கமான அணைப்புக்குள் நெருக்கம். நினைத்த கணத்தில் சுவாச கலப்பு. இளமை கால கனவுகள் அரங்கேறிய தருணங்கள் அவை. நாட்கள் கடந்து மங்கை மழலை சுமந்த தருணம் சின்னதாய் தடுமாற்றம். தவறி விழுந்தவள் கரு கலைப்புக்கு ஆளானாள். வயிற்றுக்குள் ஒரு வெற்றிடம். அவளை மனஅழுத்தத்திற்கு உள்ளாக்க அவனோ எதிர்காலத்திற்காக சுறுசுறுப்பாக உழைக்க ஆரம்பித்தான். அவளை தனிமை விரட்டியடித்தது. அவனது அரவணைப்பிற்கு ஏங்கிய தருணங்கள் கானலானது. அவளுக்குள் எரியும் அனலை உணராது போனான். அவள் அமைதியானாள். கொஞ்ச நாள்ல பேச்சுகள் குறைந்தது. அரவணைப்புகள் தள்ளி போனது. கூடல் மறந்து ஊடல் ஊடுறுவும் சமயம். ஒரு வீட்டிற்குள் இரண்டு திசைகள். அவன் சமாதானம் செய்தான். அவளுக்கு ஏற்கும் மனநிலை இல்லை. சின்ன சின்ன மோதல்கள் இதயங்களை சிதறடிக்கும் வார்த்தைகளில் முடிவடைந்தன. ஒரு வருடத்திற்கு முன்பே விவாகரத்து வரை போக முடிவு செய்தனர். வக்கீல்களை பார்த்துவிட்டு வீடு திரும்பினார்கள். அன்று முதல் இருவருக்குள்ளும் எந்தவிதமான சலனமும் இல்லை.

அருணும் விஜியும் ஆபிஸ் முடிந்து திரும்பும் போது அவர்களது வீட்டு வாசலில் அவனது தங்கையும் அவளது கணவனும் காத்திருந்தார்கள். அருணை பார்த்ததும் அவன் தங்கை ஓடி வந்து மார்பில் சாய்ந்து அழுதாள் "ஏன்டா இப்படி பண்ற? அப்பாகிட்ட வந்து பேச மாட்டியா? அம்மா அழுகாத நாளில்லை. இங்க பாரு உன் மாப்பிள்ளைக்கு காது குத்து வச்சிருக்கோம். நீ விஜியோட கண்டிப்பா வரணும். அப்பாகிட்ட பேசிட்டேன். நீ இல்லாம வீடு வீடாவே இல்ல". அழுது கதறிவளை சமாதானபடுத்தி அனுப்பி வைத்தோம். பிரியப்போகும் சமயத்துல இது என்ன சோதனை. இருந்தாலும் என் தங்கச்சி பாசத்திற்காக அவளிடம் பேச முடிவு செய்தேன். அவள் காத்திருந்தவளை போல "எனக்கு உன் மேல தான் கோபம். உன் குடும்பம் மேல இல்ல. பிரியப்போகும் போது நான் தர போற கடைசி பரிசு உன் குடும்பம் தான். கிளம்பலாம்" என்றாள்.

[இனி கிளைமேக்ஸ் வந்தாச்சு .வாங்க அதையும் பாத்துட்டு வந்திருவோம்]

வீட்டு வாசல் வரை வந்தவர்களுக்கு வீட்டுக்குள் செல்ல தயக்கம் தடுத்தது. எங்கண்ணன் வந்து "நம்ம வீட்ல வர என்னடா தயக்கம். நீ வரணும்னு தான்டா காது குத்தே தங்கச்சி வச்சிருக்கா. போடா கிறுக்கு பயலே" என்றதும் கண்கள் தானாகவே வழிந்தது. சமையல் அறையில் எட்டி பார்த்தேன். என் அம்மா சமைத்துக்கொண்டு இருந்தார். என்னை பார்த்ததும் கோபமும் கண்ணீரும் பொங்கி வந்து "அருணு ஏன்டா இப்படி செஞ்ச. அம்மாகிட்ட சொல்லிருந்தா அப்பாகிட்ட பேசி கல்யாணம் பண்ணி வச்சிருப்பேன்ல. அவசர புத்தியால எங்கள பாடாய் படுத்திட்டியேடா நாயே" என்று அறைந்தாள். வலிக்காமல் அடிக்கும் தந்திரம் தாய்க்கு மட்டுமே உரித்தானது. எல்லோரும் வந்து நலம் விசாரித்தனர்.

கொஞ்ச நேரத்தில் அப்பாவும் வந்தார். என்னையும் விஜியையும் ஏற இறங்க பார்த்தார். ஒண்ணுமே பேசலை. ராத்திரி சாப்பிட்டதும் அம்மா அப்பாகிட்ட பேச தனியா அழைச்சுட்டு போனாங்க எங்க இரண்டு பேரையும். அப்பா எங்களை பார்த்ததும் "வாங்க தம்பி. எப்படி இருக்கீங்க? அப்புறம் விவாகரத்து வாங்க போறீங்க போல?" என்றதும் அம்மா மட்டுமில்ல நாங்களும் அதிர்ச்சியில் உறைந்தோம். கோபமான குரலில் "பத்து மாசம் தாங்கல உங்க காதல். பெத்தவன்னா என்னான்னு நினைச்சே, விலகி வந்தா விட்ருவோம்னா? ஒவ்வொரு பெத்தவனும் புள்ளைங்களுக்கு நிழல் மாதிரிடா. உங்களுக்கு தான் புரியமாட்டேங்குது. வாழ்க்கைய புரிஞ்சுக்கணும்னு தான் அனுப்பி வச்சேன். வாழ்க்கைய முடிச்சுக்க போறேன்னு வந்து நிக்குறீங்க. அதனால தான் வர வச்சேன். பொண்டாட்டி கஷ்டப்பட்டா புருஷன் தாங்கணும். வலியை உணரணும். புருஷனுக்கு பொண்டாட்டி உணர்த்தனும். உங்களுக்கு மட்டும் தான் கஷ்டமோ வாழ்க்கையில. முகமேல்லாம் ஆசிட் பட்டு சிதைஞ்சு போன பொண்ண ஒருத்தன் கல்யாணம் பண்ணி அவளுக்கும் வாழ்க்கை காட்றானே அவன்ட்ட என்னப்பா எதிர்ப்பார்ப்பு இருக்கு சொல்லு. உறவுகள் கூடி வாழ்றவன் எந்த காலத்திலும் தப்பு பண்றது கிடையாது. நீங்க போனதுக்கு அப்புறமும் நானும் அவுங்கப்பனும் நண்பனா தான் இருக்கோம். பிரியுற எண்ணத்தை விட்டுட்டு வாழறது எப்படின்னு யோசிங்க" என்றதும் இத்தனை நாள் இந்த அதட்டல் இல்லாமல் தான் பாதை மாறி போனதை உணர்ந்தோம். இரவு இருவரும் தனிமையில் இருக்கையில் அவளாய் "நாளைக்கு பழனிக்கு போய் குழந்தைக்கு நகை, துணி எல்லாம் அருமையா எடுக்கலாம்" என்றாள். இந்த வார்த்தைகள் என்னோட பழைய விஜியிடம் இருந்து வந்தது.

காது குத்து விழா அமர்க்களமாய் முடிந்தது. விஜியோட அம்மா அப்பாகிட்ட மன்னிப்பு கேட்டேன்.எல்லா வேதனைகளும் வெளிப்படையான அன்பில் சின்ன மன்னிப்பில் கரைந்துவிடுகின்றன.

[அழகானது வாழ்க்கை - உறவுகள் சூழ வாழும் போது]

நன்றி!

வணக்கங்களுடன் 
நான் 
உங்கள் 

கதிரவன்! 

#தமிழ் #சிறுகதை #குடும்பம் #திருமணம் #காதல் #அன்பு #பிரிவு #உறவுகள் #உணர்வுகள் #சொந்தம் #இல்லறம் #மகிழ்ச்சி #சிகரம் 

No comments:

Post a Comment

Share it