Share it

Saturday, September 15, 2018

அவள் | சிறுகதை | கதிரவன்

மாலை நேரம். தங்களது பணி முடிந்து வீடு திரும்பும் மக்கள் கூட்டம். ஆர்ப்பரிக்கும் ஹாரன் சத்தம். சாலையோர வியாபாரிகளின் கூக்குரல்கள். அனைத்தையும் ஒரு சில நொடிகளில் கரு மேகம் தூறல் தந்து பெருமழையாய் பொழிந்தது. மழையின் ஒலியை தவிர எதையுமே உணர முடியாத அமைதிக்கு நடுவே சாலையோர நாற்காலியில் ஒரு உருவம் மட்டும் தனித்து அமர்ந்திருந்தது. கடைகளில் ஒதுங்கிய மக்களின் கவனம் நாற்காலியை கூர்ந்து கவனிக்க அங்கு இருப்பது ஒரு பெண் என்பதை அறிந்து ஒரு சிலர் குடையோடு அவளிடம் ஓட அவள் எந்தவித சலனமும் இன்றி அமர்ந்திருந்தாள் வானம் நோக்கி. இவர்கள் அவள் அருகில் செல்வதற்குள் ஒரு கார் வேகமாய் வந்து அவள் பக்கத்தில் நின்றதும் அதில் இருந்து வந்த நபர் "வாடாம்மா வீட்டுக்கு போகலாம். மழைன்னா உனக்கு ரொம்ப புடிக்கும்னு அப்பாவுக்கு தெரியும். அதுக்காக வெளியூர்ல வந்து இப்படி நனையணுமா?" என்றவாறு மகளை காரில் ஏற்றிக்கொண்டு கிளம்பினார்.



மறுநாள் காலை கிருஷ்ணமூர்த்தி தனது மனைவியிடம் "கல்யாணி, இன்னைக்கு நம்ம வீட்டுக்கு என் உயிர் நண்பன் சோமு அவன் பொண்ணோட வர போறான். அவனுக்கு மீன் அயிட்டம்னா ரொம்ப புடிக்கும். சமைச்சு வச்சிரு. நான் ஆஸ்பிட்டல் வரைக்கும் போயிட்டு வந்துர்றேன்" என்று கிளம்பினார். அவரது மனதில் பால்ய கால நினைவுகள் சுழல ஆரம்பித்தது. நொங்கு வண்டியை போல டயர் வண்டி ஓட்டிய பருவத்தில் இருந்து ஆரம்பித்தது. தேன் மிட்டாய், ஜவ்வு மிட்டாய், காக்கா கடி ஆரஞ்சு மிட்டாய், சுத்துற மிட்டாய், சூட மிட்டாய், மஞ்சள் பை, கிழிந்த புத்தகம், காகித பொம்மைகள், நண்பனின் பேய் கனவு, மாறுவேட போட்டி, தமிழ் அய்யா, எறி பந்து, மழை நீர் குளியல், கூட்டாஞ்சோறு, கில்லி என தன்னோட எல்லா சிறுவர் கால நிகழ்விலும் கலந்தே இருந்தான் அவருடைய நண்பன் சோமு. நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு சந்திப்பு இன்று.

சோமு வருவதற்குள் கிருஷ்ணமூர்த்தி வீடு வந்து சேர்ந்தார். சோமு காரில் இருந்து இறங்கியதும் கிருஷ்ணமூர்த்தி ஓடி வந்து கட்டியணைத்து "வாடா படவா, இத்தனை நாளா எங்கள தெரியலையாக்கும் சாருக்கு" என்றவர் பக்கத்தில் நின்ற அவரது மகளை பார்த்து "டேய் இது நம்ம காவ்யா குட்டியாடா இது? உங்க அம்மா இறந்த வீட்ல இரண்டு வயசு குழந்தையா பாத்தது. என்னம்மா வளந்துட்டா. நான் வளத்துக்குறேன்னு சொன்னேன் நீ தான் ஒத்துக்கல" என்றவாறு வீட்டுக்குள் அழைத்து போனார்கள். அனைவரும் ஒன்றாய் அமர்ந்து சாப்பிடும் போது கிருஷ்ணமூர்த்தி தனது நண்பனுக்கு தனது கையால் பரிமாறினார்.




இரவு எல்லோரும் தூங்கியவுடன் மாடியில் நண்பர்கள் இருவரும் பேசி கொண்டு இருக்கையில் கிருஷ்ணமூர்த்தி சோமுவிடம் "சொல்லுடா, உனக்கு என்ன பிரச்சினை?" என்றதும் சோமு அதிர்ச்சியுடன் அவரை திரும்பி பார்த்ததும் "நான் ஒரு சைக்காடிஸ்டா சொல்லல. ஒரு நண்பனா உணர்ந்து கேக்குறேன் சொல்லு" என்றதும் தனது மெளனம் கலைத்த சோமு "நம்ம காவ்யா பத்தி சொல்லணும் மூர்த்தி. அம்மா இல்லாத பொண்ணு. அப்பாவோட நிழல்ல அழகா வளந்தா. புடிச்சத படிச்சா. அருமையா .அவளுக்கு புடிச்ச மாதிரி கல்யாணம் பண்ணி வச்சேன். அருமையான மாப்பிள்ளை. ஆனா ஆறு மாசம் ஆகறதுக்குள்ள டைவர்ஸ் வரைக்கும் வந்துட்டார். காவ்யா மேல அடுக்கடுக்காய் குறை சொல்றார். எப்போதும் போன்ல யார் கூடவோ பேசறதா சொல்றார். சரியா அவர்கிட்ட பேசறது இல்லையாம். சிரிக்குறது இல்லையாம். தாம்பத்ய வாழ்க்கை சரியில்லைன்னு சொல்றார். நான் கேட்டா காவ்யா இல்லைன்னு மறுத்து சொல்றா. போன வாரம் மாப்பிள்ளை காவ்யாவ வீட்ல கொண்டு வந்து விட்டுட்டு டைவர்ஸ் வேணும்னு சொல்றார். அப்புறம் தான் கவனிச்சேன். காவ்யா ரூம்ல நிறைய வரையிறா. அதை போய் எடுத்து பாத்தா அதேல்லாம் வெறும் கிறுக்கல்கள். எனக்கு பயமா இருக்கு கிருஷ்ணா. தயவுசெய்து நம்ம பொண்ண காப்பாத்துடா" என்று கண் கலங்கினார்.

மறு நாள் காலையில் இருந்து கிருஷ்ணமூர்த்தி காவ்யாவோட நிறைய பேச ஆரம்பித்தார். இரண்டு நாட்களின் முடிவில் "சோமு, காவ்யா இங்க இருக்கட்டும். நம்ம இரண்டு பேரும் உங்க ஊருக்கு போயிட்டு வரலாம்" என்றார். உடனடியாக கிளம்பி போனார்கள். கிருஷ்ணமூர்த்தி காவ்யாவின் அறைகள், படித்த பள்ளி, கல்லூரி நண்பர்கள், அவளுடைய கணவன் தினேஷ் என அனைவரையும் விசாரித்துவிட்டு மறுபடியும் ஊர் திரும்பினார்கள். மீண்டும் காவ்யாவுடன் சகஜமாக பேசி பழகினார். பத்து நாட்களுக்கு பிறகு தன்னுடைய மருத்துவமனைக்கு சோமு மற்றும் தினேஷ் இருவரையும் வரச்சொன்னார். இருவரும் அவர் முன்பு அமர்ந்ததும் அவர்கள் முன்பு காவ்யா வரைந்த கிறுக்கல்களை கொடுத்து "இதில் எதாவது தெரியுதா?" என்றார். இருவரும் "ஒண்ணும் இல்ல. இது வெறும் கிறுக்கல்கள்" என்றனர். அவர்களை பாத்து சிரித்தபடியே "நல்லா பாருங்க. அந்த கிறுக்கல்கள் உள்ள ஒரு அழகான உருவத்தை வரைஞ்சிருக்கா. அப்புறமா தான் கிறுக்கி அதை மறைச்சிருக்கா" என்றதும் இருவரும் ஒன்றும் புரியாமல் விழித்தனர். 

தினேஷ்கிட்ட போய் "உங்க காவ்யா மனசு இப்ப இந்த நிலையில் தான் இருக்கு தினேஷ். காவ்யாங்கிற அழகான ஓவியத்தை பாக்காம அந்த கிறுக்கல்களை மட்டுமே பாக்குறீங்க நீங்க இரண்டு பேரும். இரண்டு வயசுல அம்மாவ இழந்த ஒரு பெண் குழந்தை. தனிமையில் வளந்திருக்கா. மத்தவங்களுக்கு கிடைச்ச வாழ்க்கை தனக்கு ஏன் கிடைக்கலைன்னு ஏங்கி இருக்கா. பொண்ணோட எதிர்க்காலத்துக்காக ஓடிட்டு இருந்த அப்பாவுக்கு பொண்ணோட ஏக்கம் புரியல. அந்த பொண்ணுக்கும் சொல்ல தெரியல. தன்னோட உணர்வுகளை புரிஞ்சுக்க போறது தன்னோட கணவன் மட்டும் தான்னு பெரிய கனவு கோட்டை கட்டிட்டா. தன்னோட மனசுல இருக்குற அத்தனை வார்த்தைகளையும் கொட்டி தீத்துறணும்னு ஆசை அந்த உயிருக்கு. அவளுக்கு புடிச்ச மாதிரி நீங்க வந்திருக்கீங்க. ஆனா அவள புரிஞ்சிகிட்டவனா நீங்க இல்லை" என்றதும் தினேஷ் கொஞ்சம் குழம்பி போனான்.

அவனது தோள்களை தொட்ட கிருஷ்ணமூர்த்தி "அவளுக்கு நீங்க டைம் தரல. நீங்க கொடுத்த டைம் அவளுக்கு பத்தல. மறுபடியும் பயங்கரமான ஏமாற்றம் அவளோட வாழ்க்கையில். நீங்களும் அவளுக்கு தனிமைய பரிசாக கொடுத்துட்டீங்க. உங்கள குறை சொல்ல விரும்பல. அதே சமயம் உங்களால் அவள உணர முடியல. ஒரு உண்மைய சொல்லவா? அவ இன்னும் உங்கள அளவுக்கு அதிகமா காதலிக்குறா" என்றபடி தனது டேபிளில் இருந்த மற்றொரு ஓவியத்தை காட்டி "இது தான் தினேஷ். காவ்யா தனது கற்பனையில் உருவாக்கிய குடும்பம்" என்று காட்டினார். அந்த ஓவியத்தில் அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, நண்பன் என அனைத்து உறவுகளும் தினேஷ் உருவத்தில் இருந்தனர். தினேஷ் நிமிர்ந்து கிருஷ்ணமூர்த்தியை பார்த்ததும் "ஆமா தினேஷ். அவளோட எல்லா உறவும் நீங்க தான். அவ ரூம்ல போன்ல பேசிகிட்டு இருந்தது எல்லாம் தன்னோட கற்பனையில் உருவான தினேஷ்கிட்ட தான். நிஜத்தில் இல்லாத நிம்மதியை நிழல்ல தேடிருக்கா. கணவன இந்த அளவுக்கு காதலிக்குற மனைவி கிடைக்குறது அதிஷ்டம்" என்று தினேஷ் கண்களை பார்த்ததும் அதில் நீர் திவளைகள் எட்டி பார்த்தது.

தினேஷ் கைகளை பிடித்த கிருஷ்ணமூர்த்தி "காவ்யாவுக்கு ஒரு பிரச்சினையும் இல்ல. அவளுக்கு உங்க காதல் மட்டும் தான் வேணும் நிறைய. போய் அள்ளி குடுங்க தினேஷ். பிசினஸ் எல்லாம் தூக்கி போட்டுட்டு பொண்டாட்டியோட ஜாலியா ஊர் சுத்த போங்க" என்று கண்ணடித்தார்.

தினேஷ் தனது மனைவியை தேடி அவர் வீட்டுக்கு போனதும் அவளை காணவில்லை. புது ஊர் எங்கு சென்றாள் என்ற பயத்தில் ஆளுக்கு ஒரு திசையில் தேடி கொண்டு இருந்தனர். இரவு வந்ததும் அனைவருக்குள்ளும் பதட்டம் பற்றிக்கொண்டது. ஆறுதல் சொன்னாலும் அவள் தற்போதைய மனநிலை உணர்ந்த கிருஷ்ணமூர்த்தி கலங்கி போனார்.

இரவு பத்து மணிக்கு மேல் மழை விஸ்வரூபம் எடுத்தது. தேடி களைத்த தினேஷ் காவ்யா உக்காந்திருந்த அதே நாற்காலியில் உக்காந்து தன்னை அறியாமல் மழை நீர் வழியாக கண்ணீர் வடித்தான். வெடித்து சிதறும் கதறலை இதயம் குமுறலாய் புறம் தள்ளினான்.

மழையும் அவன் மனதும் ஓய்ந்தபாடில்லை. அப்போது அவனது தோள்களை பற்றியது அந்த வளையல் கரம். திடுக்கிட்டு திரும்பியவன் தீண்டியவள் தன்னுடையாள் என்பதை அறிந்து மேலும் மேலும் கதறி அழுதான். இப்போது அழுகை இன்பத்தில் நிகழ்ந்தது. இவனது அழுகையை அவள் உண்மையில் ரசித்தாள். அவன் அவளை இறுக கட்டியணைத்து இதய கடலில் வார்த்தைகளை தேடினான். ஓடி மறைந்த வார்த்தைகளை தேடி பலனில்லை. அவளது வெற்றியில் தொடங்கி அவள் முகத்தில் இடைவெளி இன்றி முத்தங்களில் காதலை பரிமாறினான். அவளுடைய இத்தனை நாள் வேதனைகளை இந்த முத்தங்கள் சரி செய்து கொண்டிருந்தது. அவள் தேடிய தாய்மை இது தான். அவள் தேடிய தோழமை இது தான். அவள் வாழ்க்கையில் கோடிட்ட இடங்கள் அனைத்தும் நிரம்பியாகிவிட்டது...! 

நன்றிகள்!

வணக்கங்களுடன் 
நான் 
உங்கள் 
கதிரவன்! 

சிறுகதை | தமிழ் | வலைத்தளம் | அன்பு | காதல் | அம்மா | காதலி | கணவன் | குடும்பம் | இல்லறம் | தாம்பத்தியம் | உறவுகள் | பிரிவு | கதிரவன் | சிகரம் 

No comments:

Post a Comment

Share it