Share it

Thursday, October 11, 2018

முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | அத்தியாயம் - 09 | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா


பயணம் 9 


அதிகாலையில் முதன்மைத் தளபதி அவர்களின் உத்தரவின் பேரில் ஒவ்வொரு குழுவாய் சரியான கால இடைவெளியில் நகரத் தொடங்கியது. எந்த ஆராவாரமும் இல்லாமல் வீரர்கள் மௌனம் காத்து அமைதியாய்ப் போய்க் கொண்டிருந்தார்கள். இரவில் கூடாரங்கள் அமைத்துக் கொண்டிருக்கும் சமயத்தில் மரத்தின் உச்சியில் விசித்ரமான சப்தம் கேட்டு வீரர்கள் சுதாகரித்து நிமிர்ந்து பார்த்தார்கள். 



மரத்தில் யாருமில்லை, இருளில் சரியாக பார்க்கவும் இயலவில்லை. மீண்டுமொரு முறை இதே சப்தம் கேட்டதும் வீரர்கள் இருவர் சென்று தலைமைத் தளபதிகளிடம் சென்று "நாயகரே, வணக்கம் நாங்கள் கூடாரம் அமைக்கும் இடத்திற்கு மேல் பறவையின் சப்தம்போல் இல்லாமல் விசித்திரமான சப்தம் கேட்கிறது. மேலே இருள் சூழ்ந்துள்ளதால் சரியாக கவனிக்க முடியவில்லை" என்று நடந்ததைக் கூறினார்கள். 

உபதளபதிகளை அழைத்து "நம் குழுவுடைய ஒற்றர்களை உடனடியாக இங்கே வரச் சொல்லுங்கள்" என்று உத்தரவிட்டார் தளபதி.

சில விநாடிகளில் பத்துப்பேர் வந்தார்கள். "அருகில் வாருங்கள்" என அழைத்தார் தலைமை தளபதி. அனைவரும் அவர் அமர்ந்திருந்த இடத்தைச் சூழ்ந்து நின்றார்கள். 

"நான் சொல்வதை கவனமாய்க் கேளுங்கள். பத்து பேரும் ஆளுக்கொரு திசைக்கு நம் கூடாரம் அமைத்திருக்கும் பகுதியிலிருந்து சிறிதுதூரம் வனத்திற்குள் சென்று மரமேறி உச்சியிலிருந்து நம்முடைய கூடாரத்தைச் சுற்றி மரத்தின் மேலோ, கீழோ ஒற்றர்களின் நடமாட்டம் அல்லது எதிரிகளின் படையிருந்தால் நம்முடைய சங்கேத ஓசையை எழுப்பி சமிக்ஞை செய்யுங்கள். என்னுடைய கணிப்புப்படி ஒற்றர்களாக இருக்கவே வாய்ப்புள்ளது. நீங்கள் பார்த்ததும் சமிக்ஞை மொழியில் தெரிவியுங்கள். அதன் பிறகு உங்களுக்கு உத்தரவு வரும் வரை அமைதியாய் நீங்கள் பார்த்தவரைப் பின் தொடருங்கள், அவருக்குத் தெரியாமல். உத்தரவு வந்ததும் நீங்கள் அம்பினால் அவர்களைத் தாக்குங்கள். அவர்களின் உயிர் போகக் கூடாது. அதேநேரத்தில் தப்பித்துச் செல்லவும் கூடாது. இவ்வளவு தான் உங்களுக்கான பணி. சரி நீங்கள் கிளம்புங்கள்" என்று உத்தரவிட்டார் தலைமைத் தளபதி. 

அவர்களும் திக்கொருவராய்ச் சென்று மறைந்தார்கள். உபதளபதியை அழைத்து "நம்முடைய கூடாரம் இருக்கும் திசையைச் சுற்றிலும் நெருப்பு மூட்டப்பட்டுள்ளதா?" என்று கேட்டார் தளபதி. 

"ஆம் நாயகரே" என்றார் உபதளபதி. 

"அனைத்து இடத்திலும் நெருப்பை நன்கு எரிய விடுங்கள். அணையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நான் இன்னும் சிறிது நேரத்தில் அங்கு வருகிறேன்" என்றார் தளபதி. 

"நாயகரே, சின்ன சந்தேகம்" என்று தயக்கத்துடன் கேட்டார் உபதளபதி. 

"கேளுங்கள்" என்றார் தாமதிக்காமல். 

"எதற்கு நடுவனத்தில் நாம் நெருப்பை அதிகமாய் எரிய விடவேண்டும்? அது நமக்கே ஆபத்தாகாதா நாயகரே?" என்று பணிவுடன் கேட்டார். 

"எதை வைத்து நம் எதிரி நம்மை கண்காணிக்கிறான் என நினைக்கிறீர்கள்?" எனக் கேட்டார் தளபதி. 

"சூழ்ந்திருக்கும் இருளை சாதகமாய்க் கொண்டு தான் நாயகரே" என உடனடியாக பதிலளித்தார். 

"இருளில் இருப்பவனுக்கு ஒளி அதிகமுள்ள இடத்தை எளிதாய் பார்க்க முடியும். ஆனால் வெளிச்சத்தில் உள்ளவர்களால் இருளில் உள்ளவர்களைப் பார்க்க இயலாது. இதைத் தான் அவர்கள் தனக்கு சாதகமாக்கினார்கள். நாம் நமக்கு சாதகமாக்குவோம்" என்று தெளிவாய் விளக்கினார் தளபதி. 

"நன்றி நாயகரே. நான் விடைபெறுகிறேன்" என்று விடைபெற்றார் உபதளபதி. 

திசையெங்கும் சென்ற ஒற்றர்கள் சிறிதுதூரம் சென்றதும் நல்ல உயரமான மரத்திலேறி நாலாபுறமும் அம்புலியின் ஒளியிலேயே கண்காணித்து மரம்விட்டு மரம் தாவி முன்னேறத் துவங்கினார்கள். கூடாரம் அமைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு கொஞ்சம் தொலைவிலேயே வாட்டமாய் மரத்தில் அமர்ந்து கொண்டு கூடாரத்திற்கு அருகில் வந்துவிட்டதை சங்கேத மொழியில் தலைமைத் தளபதிக்குத் தெரியப்படுத்தினார்கள் ஒவ்வொருவராய். கூடாரத்தின் அருகில் இயல்பாய் இருப்பதுபோல் இருந்தாலும் அனைவரும் உஷாராய் இருந்தார்கள். நெருப்பிலிருந்து வரும் வெளிச்சத்தை வைத்து சுற்றிலும் கண்காணிக்கத் தொடங்கினார்கள் ஒற்றர்கள். மெதுவாய் நகர்ந்து அருகில் வந்து கிளையிலுள்ள அடந்த இலையின் மறைவில் அமர்ந்து நன்றாய் கவனிக்கத் தொடங்கினார்கள். வடக்கு திசையில் இரண்டு பேரும் கிழக்கு திசையில் மூன்று பேரும் வெற்று உடம்புடனும் தோளில் வில்லம்புடனும் மரத்தில் அமர்ந்து கண்காணித்து கொண்டிப்பதைக் கண்டு கொண்டார்கள் பல்லவ ஒற்றர்கள். சங்கேத மொழி மூலம் ஆட்கள் அமர்ந்திருப்பதைத் தளபதிகளுக்குத் தெரிவித்து விட்டு தலைமைத் தளபதியின் உத்தரவுக்காகக் காத்திருந்தார்கள். அமைதியாய் சலனமில்லாமல் அவர்களின் நடவடிக்கைகளை மட்டும் உற்று நோக்க ஆரம்பித்தார்கள். 

தாக்குதலுக்கான உத்தரவைப் பிறப்பித்து விட்டு உபதளபதிகளிடம் "பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கும் வீரர்களைத் தவிர மற்ற வீரர்களைக் கூடாரத்திற்குள் போகச் சொல்லுங்கள். நம்முடைய உத்தரவு வரும் வரை உள்ளேயே இருக்கச் சொல்லுங்கள்" என்று உத்தரவைப் பிறப்பித்து விட்டு நடக்கப் போவதை எதிர்பார்த்துக் காத்திருந்தார் தலைமைத் தளபதி. 

பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கும் வீரர்களைத் தவிர மற்ற அனைத்து வீரர்களும் உள்ளே சென்று விட்டார்கள். அந்த இடத்தில் நெருப்பிலெரியும் கட்டையின் சத்தத்தைத் தவிர மற்ற சத்தங்கள் ஏதுமில்லை. மரத்தின் மேல் பதுங்கியிருக்கும் மனிதர்களின் உருவங்கள் வெளிவந்தது. தன்னுடைய இடுப்பு வேஷ்டியின் மேலிருக்கும் கச்சையிலிருந்து சிறிய புட்டியை எடுத்து அதிலிருக்கும் திரவத்தை அம்பில் நனைத்து கூடாரத்தை நோக்கி எய்திட குறி வைக்கும் சமயத்தில் ஐந்து பேரின் மீதும் எட்டுத்திக்கிலிருந்தும் பத்து அம்புகள் பாய்ந்தது. ஐவரும் நிலைகுலைந்து மரத்திலிருந்து கீழே விழுந்தார்கள். அவர்கள் வைத்த குறி தவறி வேறிடத்தில் அம்பு விழுந்தது. 

ஒரே சத்தத்தில் கூடாரத்திற்குள்ளிருந்த மொத்த வீரர்களின் குறியும் ஐந்து பேர் மேல் இருந்தது. சற்றும் நினைத்துப் பார்க்காத தாக்குதலில் நிலைகுலைந்து விழுந்தவர்கள் சுதாரிக்கும் முன் கை கால்கள் கட்டப்பட்டு ஒரே இடத்தில் கிடத்தப்பட்டார்கள். 




தலைமைத் தளபதி அவ்விடம் வந்து ஐவரின் முகத்தையும் நன்கு உற்றுநோக்கினார். "யாரடா நீங்கள்? இந்நேரத்தில் மரத்தின் உச்சியில் உங்களுக்கென்ன வேலை? உண்மையைச் சொன்னால் உயிர் தப்பும். இல்லையெனில் சிரம் மண் சாயும்" என்று கர்ஜித்தார். 

அருகில் இரண்டு வைத்தியர்கள் வைத்தியம் பார்க்கத் தயாராய் நின்றார்கள். "ஐயா எங்களை ஒன்றும் செய்துவிடாதீர்கள். நாங்கள் நாடோடிகள். கொள்ளையடிப்பதே எங்கள் தொழில். நீங்கள் அனைவரும் உறங்கியதும் உங்களிடம் இருப்பதைத் திருடிக் கொள்ளலாம் என்றே மரத்தின் மேல் அமர்ந்திருந்தோம்" என்றான் ஒருவன் கெஞ்சியபடி. 

மெலிதாய்ப் புன்னகை விட்டு "உங்களின் பொய்யை என்னை நம்பச் சொல்கிறீர்களா?" என்று வலது கன்னத்தில் அறை விட்டார். துடித்து மண்ணில் சாய்ந்தான். சூழ்ந்திருந்த வீரர்களுக்கு அவரின் அறையின் வேகத்தால் அடிமனம் பதறியது. 

விழுந்தவன் எழுவதற்குள் பத்து ஒற்றர்களும் அவ்விடம் அடைந்தார்கள். வணங்கி நின்று "நாயகரே, இவர்களின் மடியிலிருந்த ஒரு புட்டியில் திரவமிருந்தது. அதில் நனைத்தே நம் மீது அம்பெய்தார்கள். அதற்குள் தாக்குதல் நடத்தி விட்டோம்" என்று முடிக்கும் தருவாயில் கூடாரம் அமைக்கப்பட்ட இடத்தைச் சுற்றிலும் தீபற்றி எரிந்தது. வீரர்களின் ஒருபகுதியினர் நெருப்பை அணைக்க விரைந்தனர். 

தலைமை தளபதி "அவர்களின் இடுப்பிலிருக்கும் புட்டியை எடுங்கள்" என்றார். வீரர்கள் அவர்களிடமிருந்து உடனே எடுத்ததும் மருத்துவர் வாங்கி பரிசோதித்து "நாயகரே, இதுவொரு வகையான தனிமம். சில வகையான பாறைகளில் மட்டும் கிடைக்கக் கூடியது. பல பரிணாமத்திற்கு பிறகே இந்நிலையை அடையும். இதன் சிறப்பு ஈரத்தன்மையை இழந்தவுடன் தானாய் எரியத் துவங்கும் நாயகரே" என்றார் தெளிவாய் மருத்துவர். 

கோபத்தில் எழுந்த தளபதி "நீங்கள் நாடோடிக் கொள்ளையர்களா? உண்மையைச் சொல்லுங்கள், யாரடா நீங்கள்?" என்றார் அதட்டலாய். 

"நாயகரே அவர்கள் வாய் திறக்க வேண்டிய அவசியமில்லை. களப்பப்பு தேசத்து ஒற்றர்கள் தான்" என்றார் பல்லவ தேசத்து ஒற்றர். 

நிமிர்ந்து பார்த்து "எதை வைத்துச் சொல்கிறீர்கள்?" என்று கேட்டார் தளபதி. 

அவன் இடுப்பிலிருந்து கீழே விழுந்த முத்திரை மோதிரத்தைக் கொடுத்து "இதை வைத்துத்தான் நாயகரே" என்று தளபதியிடம் கொடுத்தார். 

வாங்கி உற்று கவனித்து விட்டு "இவர்களிடம் வாய்ப் பேச்சு உதவாது. இவர்களைப் புதைக்கும் அளவிற்கு ஐந்து குழிகளை வெட்டுங்கள்" என்றார் வீரர்களைப் பார்த்து. இரண்டு குழிகளில் இருவரைத் தள்ளி மண்ணைப் போட்டு மூடுங்கள். உயிருடன் துடித்து மூச்சடைத்து சாகட்டும்" என்று இருவரை தள்ளி விட்டார் தளபதி. கைகால்கள் கட்டுண்டு எழவும் முடியாமல் திணறினார்கள். "ம்... மண்ணைப் போடுங்கள்" என்றார். மண்ணைப் போட்டு மூடத் துவங்கினார்கள். மீதி மூன்று பேரின் கண்களில் மரணபயம் நிழலாடியது. இருந்தாலும் வாய் திறக்காமல் வைராக்கியமாய் நின்றிருந்தார்கள். 

"உயிருடன் புதைக்கப்பட்டு விட்டார்கள். நீங்கள் வாய் திறந்து எத்தனை பேர் வந்தீர்கள், என்ன திட்டத்துடன் களப்பிரர்கள் காத்திருக்கிறார்கள் என்று சொன்னால் அவர்களை மண்ணுக்குள்ளிருந்து விடுவிப்பதுடன் உங்களையும் விடுவிக்கிறேன். சொல்லுங்கள்" என்றார் தலைமைத் தளபதி. அகப்பட்டவர்களின் மனதினுள் எப்படியிருந்தாலும் சாவு தான் எதிரியிடம் சிக்கிய ஒற்றனுக்கு நாம் ஏன் வாய் திறப்பானேன் என்று அசராமல் நின்றார்கள் மௌனமாய். 

அடுத்த கணம் மீதமுள்ள மூவரில் இருவரின் மேல் அவர்களின் கையிலிருந்த தனிமத்தை உடம்பில் பூசிவிட்டு நெருப்பின் அருகில் நிற்க வைத்தார். சில நிமிடத்தில் ஈரம் காய்ந்தது. அவர்களின் உடம்பெங்கும் நெருப்பு பற்றியெரியத் தொடங்கியது. உயிருடன் துடிதுடித்து மண்ணில் விழுந்து இறந்தார்கள். 

"இப்பொழுதாவது வாய் திறப்பாயா? இல்லை இவர்களைப் போல் நீயும் சாகப் போகிறாயா?" என்று கடுமையாகக் கேட்டார் தலைமைத் தளபதி. 

"ஐயா சொல்லி விடுகிறேன். என்னை ஒன்றும் செய்யாதீர்கள். களபப்பு தேசத்தினருக்கு நீங்கள் வருவது இன்னும் தெரியாது. நாங்கள் உங்களை அழித்து விட்டு எம் மன்னரிடம் சொல்லலாம் என்றிருந்தோம். அதற்குள்..." என்று கதறி அழுதான்.  

ஒற்றனின் வாய் வார்த்தையில் வருவது உண்மையா என பலமுறை சோதித்து விட்டு "இவனின் கை கால்களைக் கட்டி உங்களின் பாதுகாப்பில் கவனமாய் வைத்துக் கொள்ளுங்கள்" எச்சரிக்கையாய்ச் சொல்லி விட்டு உபதளபதிகளை அறைக்கு அழைத்து விட்டு வேகமாய்த் தன் அறை விரைந்தார் தலைமைத் தளபதி. 

ஆசனத்தில் அமர்ந்து ஓலையொன்றில் நடந்த நிகழ்வைத் தெளிவாக எழுதிக் கொண்டிருந்தார். உபதளபதிகள் வந்து "நாயகரே" என்று பணிவுடன் அழைத்தார்கள். 

"இந்தாருங்கள். இதை நமக்குப் பின்னால் வரும் படைத் தலைவரிடம் நம் ஒற்றர் மூலம் உடனடியாக ஒப்படைக்கச் சொல்லுங்கள்" என்றார். 

உபதளபதியோ ஓலையைப் பெற்றுக்கொண்டு "நாயகரே, எதிரி நாட்டு ஒற்றனை நம் அருகிலேயே வைத்திருப்பது ஆபத்தாகாதா?" என்றார். 

"நீங்கள் சொல்வது சரிதான். நாளை இரவிற்குள் இளவரசர் சொன்ன இலக்கை அடைந்து விடுவோம். அவரும் விடியலுக்குள் வந்துவிடுவார். அவரிடம் ஒப்படைத்து விட்டு விசாரிக்கும் படி விசாரித்தால் நமக்கு இன்னும் தகவலேதும் கிடைக்கலாம். ஒருநாள் தானே, கைகால்கள் நன்கு கட்டிப்போடுங்கள். பிறகு முகத்தையும் துணியால் மூடிவிடுங்கள்" என்று உத்தரவிட்டு விட்டு ஆசனத்தில் கண்மூடி அமர்ந்தார். உத்தரவு பெற்றுக் கிளம்பிய உபதளபதிகள் தளபதி கொடுத்த ஓலையை ஒற்றரிடம் கொடுத்தனுப்பி விட்டு சிறிதுநேரம் கண்ணயர்ந்தார்கள். 

அதேநாள் காலையில் பல்லவ தேசத்திலிருந்து பெரும் சேனை புறப்படத் தயாரானது இளவரசரின் தலைமையில். 

நாளை வருவோம் ராஜபாட்டைக்கு... 

- சதீஷ் விவேகா 





முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | அத்தியாயம் - 09 | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா 
https://sigaram-one.blogspot.com/2018/10/Mudi-Meetta-Moovendhargal-09.html 
#முடிமீட்ட_மூவேந்தர்கள் #சதீஷ்_விவேகா #சரித்திரத்_தொடர் #வரலாறு #தமிழ் #சோழர்கள் #கரிகாற்_சோழன் #போர் #களப்பிரர் #இருண்ட_காலம் #சிகரம்

No comments:

Post a Comment

Share it