Share it

Tuesday, October 9, 2018

முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | அத்தியாயம் - 08 | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா


பயணம் 8


மெல்ல மெல்லப் படைகள் நகரத் தொடங்கியது வனத்தினுள். சிறு சிறு துளி நீர் சேர்ந்து எவ்வாறு பிரவாகம் ஆகுமோ அதுபோல் குழுக்களாய் நகர்ந்த வீரர்கள் நடு வனத்திற்குள் சென்றதும் பெரும் படையாய் உருவெடுத்தார்கள். வீரர்களின் மத்தியில் அமைதியும் கட்டுப்பாடும் குலைந்து ஆக்ரோஷம் பிறந்தது. இது பெரும் பதட்டத்தை உருவாக்கியது தளபதிகளுக்கு. முதல்நாள் இரவு வந்ததும் தளபதிகள் அனைவரும் இரவு உணவை முடித்து ஒன்று கூடினார்கள். 


மதி நனையும் இனிய இரவுப்பொழுது. நடுவனத்தில் துள்ளியோடும் சிற்றோடையின் கரையில் பெரும் பாறையும் சிம்மாசனமானது. அனைத்துத் தளபதிகளும் முதன்மைத் தளபதியும் ஒன்று கூடி அமர்ந்தார்கள். 

"அனைவரும் உணவருந்தி ஆயிற்றா?" என்றார் முதன்மைத் தளபதி. 

"ம்... ஆயிற்று நாயகரே" என்றார் உபதளபதி. 

"வீரர்கள் உறங்கி விட்டார்களா? இல்லை இன்னும் ஆக்ரோஷ, ஆரவாரப் பேச்சுகள் தொடர்கிறதா?" என்றார். அப்பொழுது அவர் பேச்சில் சற்று கடுமையிருந்தது. 

அவரின் கோபம் உணர்ந்த உபதளபதி "அனைவரும் உறங்குகிறார்கள் நாயகரே" என்றார். 

"நல்லது கண்காணித்துக் கொள்ளுங்கள் சரியா?" 

"ஆகட்டும் நாயகரே..." என்று விடைபெற்றார்கள் உபதளபதிகள்.

"தளபதிகளிடம் ஒரு கேள்வி, நமக்குத் தந்த உத்தரவின் படி நம் ஒவ்வொருவரின் குழுக்களும் மொத்தமாய் இணைய இன்னும் மூன்று காததூரம் செல்ல வேண்டும். நம்முடைய வேகத்தால் நாம் விரைவாய் இணைந்து விட்டோம். இதன் விளைவு ஆக்ரோஷக் கூச்சல்களும் வேடிக்கைப் பேச்சுகளும்... இப்படியே சென்றோமேயானால் விளைவு எவ்வாறு இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும் தானே... நாமே நம்மைக் காட்டிக் கொடுத்திடுவோம்... நம் அரசரின் திட்டமும்... பல்லவத்தின் உயர்ந்த கனவும் வீணாகிவிடும்" என்று மனம் கலங்கி வருத்தத்தில் கூறினார் முதன்மைத் தளபதி. 

"உண்மை தான் நாயகரே! எங்களுக்கும் இதே பயம் தான் நாயகரே" என்று மற்ற தளபதிகளும் வருத்தமுடன் தெரிவித்தார்கள். 




"அப்படியெனில் இதற்கான தீர்வை நாம் எடுத்தாக வேண்டும்... வீரர்கள் ஒன்றாய் இணைந்தால் ஏற்படும் விளைவை நாம் கண்டுவிட்டோம். அதனால் விடியலில் அனைவரும் ஒன்றாய்க் கிளம்ப வேண்டாம். களபப்பின் எல்லை வரை நான்கு தனித்தனிக் குழுக்களாய்க் கிளம்பச் செய்யலாம்" என்று முதன்மைத் தளபதி உரைத்து முடித்ததும் "நண்பரே, இது இனி சாத்தியம் ஆகுமா? அதுவுமில்லாமல் இது அரசரின் ஆணைக்கு எதிராய் செயல்படுவது போல் ஆகாதா?" என்று கேட்டார் மற்றொரு மண்டல முதன்மைத் தளபதி. 

"சூழ்நிலைக்குத் தகுந்தவாறு செயல்பட வேண்டும். இதை அரசரும் இளவரசரும் நன்கறிவார்கள். அதனால் அவரவர் உபதளபதிகள் மூலமாய் வீரர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். முதல் குழுவிற்கும் அடுத்த குழுவிற்கும் சீரான கால இடைவெளி விட்டு நாம் நகரச் சொல்ல வேண்டும். இளவரசரின் படை அவ்விடம் அடையும் பொழுது நாம் அனைவரும் அங்கிருக்க வேண்டும். வேகம் அதேநேரத்தில் விவேகமும் இருக்க வேண்டும். ராஜகுரு கூறியது நினைவுள்ளது அல்லவா?" என்று தம்முடைய தளபதிகளுக்குப் பக்குவமாய் எடுத்துரைத்து அதிகாலையில் தெற்கு மண்டல முதன்மைத் தளபதியாரின் தலைமையில் ஒரு குழுவும் கிளம்பியது. இருந்த தடம் தெரியாமல படிப்படியாகக் குழுக்கள் கிளம்பியது. 

அதேநேரத்தில் பல்லவ தேசத்தில் இளவரசரின் புரவி புழுதி பறக்கப் பாசறைக்குள் நுழைந்தது. தளபதிகள் அனைவரையும் அழைத்து "இன்னும் ஒருநாள் மட்டுமே நம் கை வசம் உள்ளது. நாளை மறுநாள் அதிகாலையில் நாம் படையுடன் பயணிக்க வேண்டும். அதற்குண்டான ஆயத்தப் பணிகள் துரிதமாய் நடக்க வேண்டும்" என்று உத்தரவிட்டார். 

"இளவரசே, அனைத்துப் படைகளும் தயார் நிலையில் உள்ளது. இரண்டு பாதையிலும் எந்தெந்த படைப் பிரிவுகள் எந்த மாதிரியான விகிதத்தில் பயணிக்க வேண்டும் என்பதைப் பிரித்தாயிற்று. அனைவரும் உங்களின் உத்தரவிற்காகக் காத்திருக்கிறோம் இளவரசே" என்றார் முதன்மைத் தளபதி பணிவுடன். 

"நல்லது. நாளை மறுநாள் அனைவரையும் கிளம்பத் தயாராக இருக்கச் சொல்லுங்கள் தளபதியாரே. நீங்கள் வகுத்த படியே படைகள் அணிவகுத்து வரட்டும். கவனமாய்க் கையாளுங்கள். வருகிறேன்" என்று அனைவருக்கும் வணக்கத்தைக் கூறி விடைபெற்றார் இளவரசர். 

அரண்மனையில் அரசர் இளவரசரின் வருகைக்காகக் காத்திருந்தார். இளவரசர் அரண்மனைக்கு வந்ததும் "வா சிவா... உனக்காகத் தான் காத்திருந்தேன்" என்றதும் இளவரசர் "ஏன் தந்தையே? எதாவது முக்கியச் செய்தியா?" என்றார் ஆர்வமுடன். 

"ஆம் சிவா... நாம் எப்பொழுதும் போருக்குக் கிளம்புவதற்கு முன் நம் காளியை வழிபட்டு விட்டுத் தான் கிளம்புவது வழக்கம். ஆனால் இம்முறை அதைச் செய்யாமல் படைகளைப் போருக்கு அனுப்பி விட்டோம்... அதனால் ஏனோ மனதை உறுத்துகிறது சிவா. நாளை முக்கிய மந்திரிகள் தளபதிகளுடன் சென்று காளியை வழிபட்டு வந்துவிடுவோம்" என்றார் அரசர். 

"ஆகட்டும் தந்தையே. நானும் இதுபற்றி யோசித்தேன். நாளை காலை நான் மட்டும் வழிபட்டு வந்திடலாம் என நினைத்திருந்தேன். நீங்கள் கூறியது மிக்க மகிழ்ச்சி தந்தையே... நாளை தயாராய் இருக்கிறேன் போய் வருவோம்" என்றார் இளவரசர். 

மறுநாள் விடியலில் அரசர், இளவரசர் மற்றும் முக்கியஸ்தர்கள் அனைவரும் நகருக்கு வெளியிலிருக்கும் அவ்வாலயத்திற்குச் சென்றார்கள். கல்லினால் செய்யப்பட்ட ஆளுயர சிலை நின்றிருந்தது. கண்களில் உக்ரமும் கைகளில் பலவிதமான ஆயுதம் தாங்கி நின்றிருந்தாள் காளி. அரசரின் வருகையைப் பார்த்த இரு பூசாரிகளும் வேகமாய் வந்து வணங்கி ஆலயத்திற்குள் அழைத்துச் சென்றார்கள். அனைத்து ஏற்பாடுகளும் தயாராய் இருந்தது. அரசரைப் பார்த்து "ஆரம்பிக்கலாமா அரசே" என்றார் ஒருவர் பணிவாய். அனைவரின் முகத்தையும் ஒருமுறை பார்த்து வருகையை உறுதி செய்து "ம்... பூஜையைத் தொடங்குங்கள்" என்றார் அரசர். 

இரண்டு பூசாரிகளில் ஒருவர் உடுக்கை போன்ற அமைப்புடைய இசைக்கருவியை அடிக்கத் தொடங்கி அவரே பாடவும் செய்தார். மென்மையாய் இருந்த இசை வேகமெடுத்தது. பூசாரியின் பாடலின் வேகமும் சப்தமும் கூடியது. நின்றிருந்தோர் நாடி நரம்புகளில் இசை உட்புகுந்து உத்வேகத்தை ஊட்டியது. இசை உச்சத்தைத் தொடும்போது பூசாரி முடிவிரிந்த கோலத்தில் உக்கிரமாய் ஆடினார். அனைவரும் ஒருவித பரவசநிலைக்கு ஆட்பட்டார்கள். அதிகாலை ஆதவன் ஒளியில் கோவில் பூசாரி காளிக்கு தீபாராதனை காட்டத் தொடங்கினார். பாதத்திலிருந்து உச்சிவரை தீபவொளியால் காளியை தரிசித்தார்கள். அதே குறையாத ஆக்ரோஷத்துடன் அருள்பாலித்தாள் காளி. அனைவரின் ஊனுக்குள்ளும் பரவியது வெற்றி என்ற வெறி. பூசாரிக்கு தட்சணையிட்டு விடைபெற முற்படுகையில் உடுக்கையடித்த பூசாரி கையில் வேலுடன் ருத்ரமாய் "நில்லுங்கள்..." என்றார். அனைவரும் அதிர்ச்சியுற்றுத் திரும்பினார்கள். 

இளவரசைப் பார்த்து 'இங்கே வா' என்று கைசாடை செய்தார். அவரும் எதார்த்தமாய்ப் போய் நின்றார். கூடவே மற்றொரு பூசாரியும் சென்றார். 

"ம்... களம் காணப் போகிறாயா? காடு வெட்டி சமன் செய்து போகிறாயா?" என்று கம்பீரமான குரலில் கர்ஜித்தார். 

"ஆம் ஐயா" என்று புரியாமலும் சந்தேகத்துடனும் கூறினார் இளவரசர். 

"என் வாக்கில் நம்பிக்கை இல்லை உனக்கு... ம்... இன்னும் சொல்கிறேன் கேள்! தெற்கு நோக்கி விரிகிறாய்... கரை கட்டிய மன்னன் மதிலை உடைத்து நீ குடியேறத் துடிக்கிறாய் சரியா?" இளவரசர் பேச்சில்லாமல் இமைக்காமல் அவரையே பார்த்து 'ஆம்' என்று தலையை மட்டும் அசைத்தார். 

அரசர் மற்றொரு பூசாரியைப் பார்த்தார். அரசரின் பார்வையே அவர் கேட்கத் துடிப்பதை உணர்த்தியது. பூசாரி பவ்யமாய் "தாயே... நீங்கள் சொல்வது சரிதான்... அறியாமல் தவறிழைத்து விட்டோம். போகும் காரியம் ஜெயமாகுமா கூறுங்கள்..." என்றார். 

வேலை இறுகப்பற்றி உடம்பை முறுக்கி "வெற்றி நிச்சயமாய்ப் பெறுவாய்... இடையில் தடங்கல் வரும். தயங்கி நிற்காதே, அமைதியாய்க் காத்திரு... காலம் கனிந்து வரும். அதுவே உன்னை அழைத்துச் செல்லும் காஞ்சிக்கு..." என்று கூறி முடித்ததும் கூடியிருந்தோருக்கு மயிர்க்கூச்செறிந்தது. 

எப்படி சாத்தியம் அரசாங்க அந்தரங்க விஷயம், முக்கியஸ்தர்களைத் தவிர யாருக்கும் தெரியாது. பூசாரி ஒரு கணத்தில் சொன்னதும் "தாயே..." என்று வணங்கி நின்றார்கள். இளவரசர் "தாயே மன்னித்தருளுங்கள். என்ன வேண்டும் தங்களுக்கு எம் பல்லவம் விரிவடைவதற்கு..." என்று இறைஞ்சி வேண்டி நின்றார். 

"நான் கேட்பதைக் கொடுப்பாயா?" என்றார் அதே கம்பீரத்தோடு காளியாய் அந்த பூசாரி. 

"ம்... கேளுங்கள்" என்றார் தயங்காமல். 

"உன் ஒரு துளி ரத்தம் கொடுடா போதும். உன் மூலம் பல்லவத்தை உயிர்பிக்க" என்றார் சாந்தமாய். 

கணநொடி தாமதிக்காமல் பூசாரி கையிலிருந்த வேலில் தன் விரல் பதித்து ரத்தத்தைக் கொடுத்தார் இளவரசர். உலகமதிரும் படி சிரித்து அந்த ரத்தத்தைத் திலகமாய் அனைவருக்கும் வைத்து விட்டு "போய் வா... போய் வா... வெற்றி உனதே போய் வா..." என்று மெல்லமாய் சாந்தியடைந்து மயக்க மடைந்தார் பூசாரி. அனைவரும் காளியை மீண்டும் வணங்கி விடைபெற்றார்கள் அவ்விடம் விட்டு. 

அரண்மனை வந்ததும் அரசரைத் தனியே அழைத்து "இது எப்படி தந்தையே சாத்தியம்?" என்றார் இளவரசர். 

"சில விஷயங்களை ஆராயக் கூடாது சிவா... ஏற்பதாய் இருந்தால் ஏற்றுக் கொள். இல்லையெனில் விட்டுவிடு" என்றார் அரசர். 

"ஏற்கிறேன், ஆனால்..." என்று இழுத்தார். 

"போ... போய் நாளை கிளம்புவதற்குண்டான ஆயத்தப் பணிகளைப் பார்... காளி உடனிருப்பாள். நம் திட்டமும் தெளிவாய் உள்ளது. போய் நடக்க வேண்டியதைக் கவனி" என்று ஆணையிட்டார் இளவரசருக்கு அரசர். 

மறுகணம் புரவியேறிப் பாசறை கிளம்பினார். வீரர்களின் நடமாட்டமும் களிறுகளின் பிளிறலும் புரவிகளின் குளம்படியும் வாள்கள் வேல்களின் உரசும் சத்தமும் உத்வேகத்தைத் தந்தது இளவரசருக்கு. போரின் நினைவலைகள் விரியத் தொடங்கியது. 'அனைவரும் தயாரா? வெளியிலிருந்து வரும் படைகளும் தயார் நிலையில் உள்ளதா?' என்று உறுதிபடுத்திக் கொண்டார் தளபதிகளிடம். 'நாளை கிளம்புகிறோம் கருத்தாய் இருங்கள் பணியில். இரவு வந்து இங்கேயே தங்குகிறேன். அனைவரும் ஒன்றாய்க் கிளம்புவோம்' என்றதும் தளபதிகளுக்கு உற்சாகம் பிறந்தது. இளவரசர் கிளம்பினார் நாளை பற்றிய சிந்தனையோடு.

நாமும் வருவோம்...

- சதீஷ் விவேகா 





#முடிமீட்ட_மூவேந்தர்கள் #சதீஷ்_விவேகா #சரித்திரத்_தொடர் #வரலாறு #தமிழ் #சோழர்கள் #கரிகாற்_சோழன் #போர் #களப்பிரர் #இருண்ட_காலம் #சிகரம்

No comments:

Post a Comment

Share it