ஒவ்வொரு நாள் காலையிலும் அலுவலகத்திற்குள் நுழையும் போது, அவள் தான் முதலில் கண்ணில் படுவாள்.
சிரித்த முகத்தோடு அவள் சொல்லும் அந்தக் காலை வணக்கத்தை விட்டுவிட யாருக்குத்தான் விருப்பமிருக்கும்?
குட்மார்னிங் சார்...
வெரி குட்மார்னிங்… என்று சொல்லியபடியே நிமிர்ந்து பார்க்கிறேன். திருத்தமான பளிச்சிடும் சேலை, அதற்கு ஏற்ற இறுக்கமான ரவிக்கை, நல்ல
நிறம், கற்றைமுடியைப் பின்னி அதில் ஏதோ ஒரு பூ. ஜிமிக்கி அணிந்த காதுகள், காதோரத்து தலைமுடியை மேலே ஏற்றிக் குத்தப்பட்ட கிளிப், உற்சாகம் தரும் மென்மையான நறுமணம், இப்படி எப்பொழுதும், புதிதாய் அப்பொழுதுதான் பிறந்தவளாய் எனக்குப் படுவாள், அந்த முப்பதுகளைக் கடந்த, இரண்டு பெண் குழந்தைகளின் தாய்.
நிறம், கற்றைமுடியைப் பின்னி அதில் ஏதோ ஒரு பூ. ஜிமிக்கி அணிந்த காதுகள், காதோரத்து தலைமுடியை மேலே ஏற்றிக் குத்தப்பட்ட கிளிப், உற்சாகம் தரும் மென்மையான நறுமணம், இப்படி எப்பொழுதும், புதிதாய் அப்பொழுதுதான் பிறந்தவளாய் எனக்குப் படுவாள், அந்த முப்பதுகளைக் கடந்த, இரண்டு பெண் குழந்தைகளின் தாய்.
7 பேர் பணிபுரியும் அந்தத் துவக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் அவள் சேமிப்புக் கணக்குப் பிரிவிலும், நான் கடன் பிரிவிலும். ஆனாலும் இருக்கைகள் என்னவோ அருகருகில் தான். அலுவலகப் பணிகள் சார்ந்து, எங்கள் அனைவருடனும் இயல்பாகப் பேசுபவள். தேவையின்றிப் பேசுவதோ, தனிப்பட்ட குடும்ப செய்திகள் குறித்து அரட்டை அடித்தோ பார்த்ததில்லை. அவள் அதிகமாய் பேசுவது, புதிதாய் வந்த அந்தத் திருமணமகாத கணிணி மையப் பொறுப்பாளராக இருக்கும் அந்த இளைஞனுடன் தான். நாங்கள் அமர்ந்திருக்கும் வரிசையில், எனக்கடுத்து அவள், அவளுக்கு அடுத்து, வரிசையின் கடைசியில் அவன். மதிய இடைவெளியில், அவளும் அலுவலக உதவியாளராக இருக்கும் இன்னொரு பெண்ணும், அந்த இளைஞனும் முதலில் ஒன்றாய் உணவறைக்குச் சென்று வருவது வழக்கம். அவர்கள் வந்தபின், ஆண்கள் மூவரும் ஒன்றாய் உணவுக்குச் செல்வோம். மேலாளர் அவரறையிலேயே உணவை முடித்துக் கொள்வார்.
அந்த இளைஞனும் அவளும் சிரித்துப் பேசிக் கொள்ளும் போதெல்லாம் எங்களுக்குப் பொறாமையாக இருக்கும். அவர்கள் அதைப் பற்றிக் கவலைப்பட்டதில்லை. சாடையாய் ஏதோ செய்தியைப் பரிமாறிக் கொள்வதும், ஒருவருக்கொருவர் கேலி செய்து கொள்வதும், எங்கள் மூவருக்கும் ஏனோ மன உளைச்சலைக் கொடுத்தது.
இந்த நால்வரில், ஐம்பதைக் கடந்த இருவரில் தானுண்டு, தன் வேலையுண்டு என்று, எந்த நேரமும் அலுவலகப் பணி சார்ந்தே இயங்கிக் கொண்டிருக்கும் மேலாளர், நடிகைகளில் துவங்கி, கழிவறையைச் சுத்தம் செய்யும் பெண்வரை, பாத விரல் அமைப்பை வைத்துக் கொண்டே, ஒரு பெண்ணின் கெண்டைக்கால் தசையின் அளவில் இருந்து, கால் பாதம், தொடை, இடை, மார்பகங்கள், கைவிரல், கழுத்து, கண்கள், கூந்தல், வாசம், மூக்கு, நெற்றி, தலைமுடியின் தன்மை, அவள் அதை பின்னிக் கொள்ளும் முறை, அவள் விரும்பும் பூ, இவற்றையெல்லாம் ஆய்வுக்குட்படுத்தி, அவள் இதுவரை, எத்தனை பேரைப் பார்த்திருப்பாள், தனிமையில் எப்படி நடந்து கொள்வாள், கணவனுடனான அவள் உறவு போன்ற அனைத்தையும் ஒரு தேர்ந்த சோதிடனைப் போல எங்களோடு பகிர்ந்து கொள்ளும் ஒரு காசாளர், ஆவென வாய்பிளந்து கேட்டுக் கொண்டு, வீட்டைத் தவிர்த்து, தெருவில் செல்லும் எல்லாப் பெண்களிடம் அதைச் சோதித்துப் பார்த்துக் கொண்டு, ஆமா, அவ அப்படித்தான் போல என்று முடிவெடுத்துவிட்டு குடும்பம் குட்டியோடு காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் நானும், இன்னொரு அலுவலரும்.
வார இறுதியில் ஒரு நாள், உயர்தர பாரில் நானும் அந்தக் கசாளரும், அரை பியரில் நானும் மூன்றாவது ரவுண்டில் அவரும் இருக்கும் போது, அவரே ஆரம்பித்தார்.
"உனக்கெல்லாம் வயசு பத்தாது தம்பி, பொதுவாவே இந்தப் பொண்ணுங்களுக்கு, தன்னை விட வயசு கம்மியான பசங்கன்னாவே ஒரு கிளுகிளுப்பு. அதுவும், இந்த கல்யாணமாகாத சின்னப் பசங்கங்கன்னாவே ஒரு பெரிய கிக். ஒன்னுமில்லாத விசியத்துக்கு மூஞ்சீல ஏகத்துக்கு ரியாக்ஷன் காமிப்பாளுக. தேவையில்லாம சிரிப்பாளுக, சாடைப் பேச்சு பேசுவாளுக, ரொம்ப உரிமையெடுத்துகிட்டு, தொட்டுப் பேசுவாளுக.
வாய்ப்பு கிடைச்சா… ம்ம்ம்ம்ம்... மத்த எல்லாமும்… சின்னப் பசங்கன்னாவே… ஒரு விதமான அருவருப்பான இளிப்பு… பொம்பளை சிரிச்சாப் போச்சு… பொகையில விரிஞ்சாப் போச்சுன்னு சும்மாவா சொன்னாங்க…
உன்னையும், உன் சின்ன வயசுல எவளாச்சும் வளைச்சிருப்பாளே…"
"இல்லை சார், நிறைய பேர் என்கிட்ட பேசுவாங்க, உரிமையா பழகுவாங்க, போகும் போது பைக்ல கொண்டுபோய் வழியில இறக்கிவிடச் சொல்லுவாங்க, எதாவது பொருட்களை வாங்கிட்டு வரச் சொல்லுவாங்க, ஆனா அதைத் தாண்டி எதுவும் இல்லை சார்"
"அடப் போப்பா, வெவரமில்லாத ஆளா இருக்கே? இந்தப் பொண்ணுங்க இருக்காங்களே, அவங்க எப்பவும் இப்படித்தான், லேசா கோடு போட்டுக் காமிப்பாங்க, நாமதான்யா அதுல ரோடு போடனும்…"
"எல்லாப் பொண்ணுங்களுமேவா…?"
"பின்ன? இவ்வளவு ஏன்? அன்னைக்கு நீ என் வீட்டுக்கு வந்தபோது, என் பொண்டாட்டி உனக்கு காப்பி போட்டு கொண்டு வந்து கொடுத்திட்டு, அந்தாண்ட இந்தாண்ட போகாம, வழ வழன்னு சம்பந்தமே இல்லாம உன்கிட்ட சிரிச்சி சிரிச்சிப் பேசிகிட்டே இருந்தால்ல, ஞாபகமில்லையா உனக்கு? உன் பொண்டாட்டியும் அப்படித்தான், என் பொண்டாட்டியும் அப்படித்தான்… வேணும்னா நீ கவனிச்சுப் பாரு, உன் பொண்டாட்டி சின்ன வயசு பால்க்காரன், காய்கறிக்காரன், மளிகைக் கடை டெலிவரி பையன் இவங்ககிட்டெல்லாம் எப்படி பேசறான்னு? அதே கொஞ்சம் நடுத்தர வயசு ஆளுகளோட பேசும் போது, என்ன செய்யறான்னு பாரு…"
இப்படிச் சொல்லிவிட்டு அவர் அடுத்த ரவுண்டுக்குப் போய்ட்டார். நான் அந்த இடத்திலயே நின்றுவிட்டேன்.
இப்படிச் சொல்லிவிட்டு அவர் அடுத்த ரவுண்டுக்குப் போய்ட்டார். நான் அந்த இடத்திலயே நின்றுவிட்டேன்.
அடுத்த ஓரிரு நாட்களில் வீட்டில், தெருவில், பெண்களை கவனிக்க ஆரம்பித்தேன். அவர் சொல்வதெல்லாம் உண்மையாகவே படுகிறது. தன்னை விடச் சிறிய வயதுடைய ஆண்களைக் கண்டால், இவர்களுக்குக்குள் ஏதோ வேதியல் மாற்றங்கள் நடக்கிறது. வெகு இயல்பாகப் பழகுகிறார்கள். அவசியமில்லாமல் சிரிக்கிறார்கள்... அதேநேரத்தில், தன்னை விட வயதானவர்களைப் பார்த்தால், அமைதியாகிவிடுகிறார்கள். தேவையின்றி சிரிப்பதோ, பேசுவதோ இல்லை. பெரும் மன உளைச்சல். இதைப் போய் யாரிடமும் கேட்கவும் முடியாது. என் மனைவிகூட, திருமணம் போன்ற நிகழ்வுகளில் சந்திக்கும் உறவுகளில் இளவயதினரிடம் சிரித்துச் சிரித்துப் பேசுகிறாள். உரிமை எடுத்துக் கொண்டு செல்லச் சண்டை போடுகிறாள். கோவிலில், கடைவீதியில், காய்கறிக் கடையில், எங்கும் இதைக் காணமுடிந்தது.
அந்த வார இறுதியில், மன இறுக்கத்தைக் குறைக்க நினைத்து, வழக்கமாய் சில இலக்கிய நண்பர்கள் கூடும் இடத்திற்கு சென்ற போது, அங்கு யாரும் இல்லை, திரும்ப நினைக்கும் போதுதான்…
"என்னையா…? ரொம்ப நாளா காணோம், திடீர்ன்னு வந்திருக்க…? சரி வா கே. கே. நகர் வரைக்கும் கொஞ்ச தூரம் நடக்கலாம்…"
அந்தப் பள்ளி ஆசிரியர், நண்பர். உயர்ந்த மனிதர். மனிதர்களைத் தொடர்ந்து வாசிப்பவர், கவிஞர், நல்ல விமர்சகர். அடிக்கடி அவரை அந்தக் கூட்டத்தில் சந்திக்க முடியும். எதையும் வெளிப்படையாகப் பேசுபவர். கொஞ்சம் கறாரான பேர்வழி. இலக்கியம், சிறுகதைகள், கவிதைகள், மனித உறவுகள் சார்ந்த சிக்கல்கள் குறித்த பேச்சு மட்டும் வந்துவிட்டால், மனிதருக்குள் சாமி இறங்கி 'அருள் வந்தவர்' போல ஆகிவிடுவார். ஓவ்வொரு வார்த்தையும் ஆழமாய் சிந்திக்க வைக்கும். ரொம்ப வாஞ்சையான மனிதர். இன்னும் சொல்லப் போனால், எனக்கு அவரைப் பிடித்துப் போனதற்கு காரணம், அவரிடம் இருக்கும் அந்த வெளிப்படையான தன்மை. வஞ்சகமில்லாத எண்ணம். எப்பொழுதும் ஒரு குழந்தையைப் போல உணர்வெழுச்சிகளுக்கு ஏற்பவே இருக்கும், அவருடைய செயல்பாடுகள். எந்தவொரு முகமூடியும், எந்தச் சூழ்நிலையிலும், அணியாதது, அவர் இயல்பு.
"போலாங்க குருவே…" நான் அவரை, அப்படி அழைப்பதுதான் வழக்கம்.
லா.சா.ரா வில் துவங்கி, சு.ராவையும், கி.ராவையும் கடந்து, வெயில், போகன், வரைக்கும் வந்தபோது, இரயில் தண்டவாளங்களை ஒட்டி, நாங்கள் வழக்கமாய் அமரும் இடம் வந்திருந்தது.
"அப்பறம் எப்படிப் போகுது உங்க வேலையெல்லாம்?" இது, பேச்சை நான் துவங்குவதற்கு அவர் கொடுக்குமிடம். நான் படித்த, அல்லது பாதித்த நிகழ்வுகள் குறித்து நான் பேசுவேன், பொறுமையாய் இடைமறிக்காமல் கேட்டு முடித்து, பின் அது குறித்த தன் கருத்துக்களை ஆழமாக என்னுள் பதிப்பார். அந்த நினைவுகளோடே வீடு திரும்புவது வழக்கம்.
"ம்ம்ம்... பரவால்லைங்க குரு, அப்படியே ஓடிகிட்டிருக்கு…" இப்பொழுது என் பங்கிற்கு நானும் ஏதாவது பேசவேண்டுமே? நீண்டநாட்களாக ஒரு செய்தி என்னுள்ளே தேங்கிக் கிடக்கிறது. எந்தப் புள்ளியில் அதைத் தொடங்குவது என்று தான் தெரியவில்லை. ஒரு வழியாய் ஏதேதோ பேசி, பின் அந்தப் புள்ளிக்கு வந்து நின்று, தட்டுத் தடுமாறிக் கேட்டுவிட்டேன்.
"இந்தப் பெண்களுக்கு தன்னைவிட வயசு குறைஞ்ச பசங்கன்னா ஏனோ ரொம்பப் பிடிக்குது. இளம் ஆணின் வேகம், உடல் உறுதி, இளமை ஆசையைத் தூண்டுதோன்னு தோனுதுங்க குரு…" என்று சொல்லியபடியே முகத்தை வேறு ஒரு பக்கம் திருப்பிக் கொண்டேன்.
அவர் எதுவுமே பேசவில்லை… என்னையே அவர் உற்றுப் பார்ப்பது போல் இருந்தது. அவர் என்ன நினைக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருவேளை இதை நான், இதை இவரிடம் பேசியிருக்கக்கூடாதோ?
ஒரு நிமிட அமைதிக்குப் பின், அவர், "இதை நீ இப்படிக் கேட்டதுதான் வருத்தமா இருக்கு. இந்த பசங்களுக்கு ஏன் தன்னை விட மூத்த பெண்களை ரொம்பப் பிடிக்குதுன்னு கேட்டிருக்கணும். சரி, எப்பவுமே பெண்களைக் குற்றவாளியாக்கியே பழகின ஆண் ரத்தம்தானே உன் உடம்பிலயையும் ஓடுது?" ஒரு நீண்ட அமைதி.
அந்த அமைதி ஏதோ செய்கிறது... ஐயோ… ஏதாவது பேசித் தொலைங்களேன்... உள்ளுர அலறுகிறேன்.
"சரி… சின்ன வயசில உங்க தெருவில இருக்கிற பெண் குழந்தைகளோடு, நீ அப்பா, அம்மா விளையாட்டு விளையாடியிருக்கியா?"
நல்லவேளை, ஓரளவு இருட்டு இருந்ததால், என்னையறியாமல் வந்த அந்த ஒரு மட்டரகமான புன்னகையை, அவர் பார்த்திருக்க வாய்ப்பில்லை. எதிர் வீட்டுப் பெண் தான் எப்பொழுதும் அம்மா, நான் தானே அப்பா. ஒற்றை மூங்கிலை, குறுக்கே நிறுத்தி, அதில் ஒரு பெரிய போர்வையை குறுக்காய் வைத்து, நான்கு மூலைகளிலும் செங்கல்லை வைத்து வீடாக்கியதும், மற்றவர்கள் எங்களுக்கு குழந்தைகளானதும், நான் அப்பாவாக வேலைக்குப் போனதும் நினைவுக்கு வந்தபோது….
"என்னய்யா… சத்தத்தையே காணோம்… பழைய நெனப்பு வந்திருச்சா, அப்ப உன்கூட விளையாடின பொன்னு ஞாபகத்துக்கு வர்றாளா?" என்ற படியே சிரித்துக் கொண்டே சொன்னார், "அதெல்லாம் இல்ல, இப்ப பேச வந்தது… அந்த வயசுல உனக்கும் சரி, அந்தப் பெண்ணுக்கும் சரி ஆண் பெண் உறவெல்லாம் தெரிஞ்சிருக்காது…
சரி விசியத்துக்கு வருவோம், இந்த விளையாட்டுல அம்மாவா நடிக்கும் அந்தப் பெண் பார்த்தீன்னா, மற்ற குழந்தைகளை, மிரட்டும், சோறு போடும், ஒரு குச்சியைக் கையில வச்சிகிட்டு பாடம் சொல்லிக் கொடுக்கும். இயல்பா சிரிச்சிப் பழகும். ஆனா நீ வந்தவுடனே அப்படியே மாறி, உன் கிட்ட அதிகமா பேசாது, உனக்கும் சோறு போடும், உனக்கு சின்னச் சின்ன வேலை செஞ்சி கொடுக்கும். நீ வெளியில போனவுடனே, அது திரும்பவும் அந்தக் குழந்தைகளோட நெருக்கமா இருக்கும்.
இது மரபணுவில் இருக்குதோ, அல்லது சமூகம் சொல்லிக் கொடுத்ததோ எப்படிவேணா வச்சிக்க. ஆனா இந்தப் பெண் குழந்தைகளுக்கு, வயது குறைந்தவர்கள்னு இல்லை, எந்த வயதை உடையவராக இருந்தாலும் தன்னைவிட, கல்வியில், பொருளாதாரத்தில், அடிப்படை அறிவில், நாகரீகத்தில் இன்னும் ஏன், உடல்ரீதியான குறைபாடுகள் இருப்பவர்களை, இயலாமையில் இருப்பவர்களைப் பார்த்தவுடனே, ஒரு மதர்லி மெண்டாலிட்டிங்கற தாய்மை உணர்வு வந்திரும். இதுக்கு ஆண் பெண் வேறுபாடெல்லாம் கிடையாது. ஏதோ ஒரு விதத்தில், தனக்குச் சமமாக, அதாவது கணவன் என்ற நிலையில் இல்லாமல் இருக்கிற ஆண், பெண்ணை, தம்பிகளாகவோ மகன்களாகவோ, தங்கைகளாகவோ, மகள்களாகவோ நெருங்கிய உறவாவோ பார்க்க அவங்களாலதான்யா முடியும். உன்னாலையும் என்னாலையும் அது முடியாது. வயது குறைந்த ஆணிடம் அவள் எப்படிப் பழகுகிறாளோ அப்படியே, தன்னைவிட வயது குறைந்த பெண்ணிடமும் அவள் பழகுகிறாள். எதிர்பாலினமா இருக்கறதால நமக்கு சில நேரங்களில் அது வித்தியாசமாத் தெரியலாம். வயசு குறைவா இருக்கற பசங்களைப் பெண்களுக்குப் பிடிக்குங்கறது, எவனோ ஒரு வக்கிரம் பிடிச்ச முட்டாள் கிளப்பிவிட்டதாயிருக்கும்.
பொதுவாவே கணவர்களும் சரி, பெற்றவர்களும் சரி, இந்தப் பெண்களை, 'பொட்டப்புள்ளைக்கு ஒன்னுந் தெரியாது' என்று சொல்லி வளர்க்கும் சூழலில், பெரும்பாலும் வயதில் மூத்தவர்களிடம் பேசுவதில் எல்லாப் பெண்களுக்கும் ஒரு தயக்கம் இருக்கும். இது காலங்காலமாய் அவளை அடக்கி வைத்திருந்ததன் வெளிப்பாடு. பெரியவங்க முன்னிலையில் ஏதாவது பேசினால், விக்டோரியன் ஒழுக்க விதிகளை முன்னிறுத்தி அவளை அடக்கி விடுவாங்க அல்லது அவமானப் படுத்துவாங்க.
தான் சொல்றதை ஆர்வத்தோடு புதுசாக் கேட்கும், அந்த சின்னப் பையனின் அல்லது பெண்னின் மீது ஒரு அன்பும், தான் அவர்களை விட வயதில் மூத்தவள், அல்லது ஏதோ ஒருவிதத்தில் பெரியவள் என்ற எண்ணமும் அவளை அவர்களிடம் நெருங்க வைக்கிறது. சராசரியான ஒரு பெண் என்ற நிலையில இருந்து மாறி, ஒரு தாயாக, மீட்பனாகத் தன்னை உருவகிச்சுக்கறா.
உண்மையை வெளிப்படையாகச் சொன்னால், உன்னை விட வயசில மூத்த ஒரு பெண், உங்கிட்ட அன்பாப் பேசுறான்னா, அவ உன் மேல ஏதோவொருவிதத்தில் நம்பிக்கை வைச்சிருக்கிறாள். இவன் சின்னப் பையன், எதையும் தவறா நினைக்க மாட்டான். தன்னைக் கடந்து, எங்கயும் போயிட மாட்டான், இவன் நம்பிக்கைக்குரியவன் என்ற எண்ணமும், அவன் மீது ஒருவிதமான அன்பும் இருந்துகிட்டே இருக்கும். இன்னொன்னையும் நீ கவனிச்சுப் பாரு, ஏதோ ஒரு குறையை, இழப்பை, வலியை, அவமானத்தை, அவலத்தை, நீ அவகிட்டப் பேசும் போதுதான் அவ உன்னைய கவனிக்க ஆரம்பிக்கறா. ஏதோ ஒரு விதத்தில் உன் மீது அவள் பரிதாபம் கொண்டிருக்கிறாள். உன் இயலாமையை, குறைபாட்டை, அறியாமையை, திறமையை, அழகை, ரசித்து, அதுகுறித்து வெளிப்படையாப் பேசாம, உன்னோடு சேர்ந்து, உனக்கு நல்ல நட்பா பயணிக்க விரும்பறா. தனக்குக் கிடைக்காத, இல்ல தான் இழந்த வாய்ப்புகளை, நினைச்சு நினைச்சு வலியோட இருக்கற பெண்ணுக்கு, நம்மைச் சார்ந்தவங்களையாவது, பழகின நட்புகளையாவது, அந்த வலியில இருந்து காப்பாத்திட மாட்டோமாங்கற உணர்வு அதிகமாவே இருக்கும். தான் பெரிய ஆளு, அதிபுத்திசாலி, கில்லாடின்னு சொல்லிக்கற ஆண்களைப் பெண்கள் மதிக்கறதில்லைங்கறதையும் புரிஞ்சிக்கோ.
சில நேரங்கள்ல, இது புரியாத ஆண்கள், அத்துமீறும் போது, திரும்பவும் அவளுக்குள்ள இருக்கற அந்த மதர்லி மெண்டாலிட்டி, அவனைத் தவிர்க்கச் சொல்லாமல், அவனைத் திருத்தச் சொல்லுது. இந்த முயற்சியில சில நேரங்கள்ல, பெண்கள் தோத்துப் போயிடறாங்க. ஆனால் பல நேரங்களில் பல பெண்கள் இதில் வெற்றி பெற்றிருக்கிறாங்க…
உன் முகமூடியைக் களைஞ்செரிஞ்சிட்டு, உன் மனைவியையே கூட கவனிச்சுப்பாரு... அவளுக்குள்ளும் ஒரு அம்மா இருப்பது புரியும்"
அவர் பேசிக் கொண்டே இருக்கிறார்… ஏதோ ஒரு ரயில் அருகில் வரும் சத்தத்தில் எங்கள் பேச்சு தடைபடுகிறது.
உடனடியாக எனக்கு, அந்தக் காசாளரின் மனைவியைப் பார்த்துப் பேச வேண்டும் என்று தோன்றுகிறது.
எனக்குள் இன்னும் அந்த ஆண் ரத்தம் தானே ஓடிக் கொண்டிருக்கிறது?
ஆண் ரத்தம் | சிறுகதை | ஆரூரன் விசு
https://sigaram-one.blogspot.com/2019/02/Aan-Raththam.html
#சிறுகதை #வாழ்க்கை #ஆண் #பெண் #சமூகம் #விடுதலை #மனம் #அன்பு #தாய்மை #உறவு #திருமணம் #உரையாடல் #கல்வி #சமத்துவம் #உணர்வுகள் #எண்ணங்கள் #மாற்றம் #குரல் #எழுத்து
அருமை! அணுகுமுறையின்ம பரிணாமங்கள் ஆளுக்கு ஆள் வித்தியாசப் படுவதைத் துல்லியமாக எடுத்துக் காட்டியுள்ள அழகு வியக்கத்தக்கது. இயல்பான நடை, இறுக்கம் தளர்த்தும் வசனங்கள்! மனமார்ந்த பாராட்டுக்கள் !
ReplyDelete