Share it

Wednesday, August 22, 2018

ஞாபகங்கள் | அறிமுகம் | தொடர் கதை | சிகரம் பாரதி

நான் உங்கள் சிகரம் பாரதி. எனது எழுத்துப் பயணம் 2002இல் துவங்கியது. தமிழ்ப் பாடப் புத்தகங்களும் நூலகங்களும் பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளும் என் வாசிப்புக்குத் தீனி போட்டதுடன் என் எழுத்தார்வத்தையும் தூண்டின. அவ்வப்போது கவிதைகள், சிறுகதைகள் என கிறுக்கிக் கொண்டிருந்தேன். 

2003ஆம் ஆண்டிலும் பின்னர் 2006 தொடங்கி 2010 வரையிலும் கையெழுத்துப் பத்திரிகை நடத்தினேன். அந்தக் கால கட்டத்தில் தேசிய நாளேடுகளுக்கும் சஞ்சிகைகளுக்கும் கவிதை, கட்டுரைகளை அனுப்பி வந்தேன். அதன் போது எனது நண்பர்களையும் எழுதத் தூண்டி அவற்றை எனது கையெழுத்துப் பத்திரிகை மூலமாக வெளிக்கொணர்ந்தேன். அத்தோடு நிற்கவில்லை. என் நண்பர்களின் படைப்புகளை தேசிய நாளேடுகளிலும் சஞ்சிகைகளிலும் இடம்பெறச் செய்தேன். 




Photo credit to its owner only. Pic got by Google search.

நான் 2005ஆம் ஆண்டில் நாவல் ஒன்றை எழுதியிருந்தேன் (சிரிக்காதீங்க...!). அப்போது எனக்கு பதினைந்து வயது. படிக்கும் கொப்பித் தாளில் (A 5 அளவு) சுமார் 250 பக்கங்கள் கொண்ட 'ஞாபகங்கள்' என்னும் நாவலை எழுதியிருந்தேன். பின்னர் அதன் இரண்டாம் பாகத்தையும் எழுத ஆரம்பித்திருந்தேன் (மறுபடியும் சிரிக்கக் கூடாது...). ஆனால் தொடர்ந்து எழுத முடியாமல் இடை நிறுத்தி விட்டேன். 

அந்த 'ஞாபகங்கள்' நாவலை 'சிகரம்' இணையத்தளம் ஊடாக உங்கள் முன் சமர்ப்பிக்கப் போகிறேன். நிறை குறைகள் இருக்கும். அவற்றைச் சுட்டிக் காட்டுங்கள். சில வேளைகளில் என் கற்பனை சிறு பிள்ளைத் தனமானதாகவோ அல்லது பொருத்தமில்லாததாகவோ ஏன் தவறானதாகவோ கூடத் தோன்றலாம். அவ்வாறிருப்பின் பெரிய மனதுடன் மன்னித்து விடுங்கள். 

விமர்சனங்கள் தான் எழுத்தாளனைச் செதுக்கும் சிற்பி. நீங்கள் உங்கள் விமர்சனங்களால் என்னைச் செதுக்குவீர்கள் என நம்புகிறேன். சரியோ தவறோ உங்கள் மனதில் என்ன தோன்றுகிறதோ அதைத் தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களின் வாயிலாக இந்த நாவலைத் திருத்தி மீண்டும் வெளியிட எண்ணியுள்ளேன். 

எனது இளவயது முயற்சிக்கு உங்கள் ஆதரவை வழங்கி எனது எழுத்துக்களை மேம்படுத்த உதவுவீர்கள் என நம்புகிறேன். இந்த 'ஞாபகங்கள்' தொடரை உங்கள் வீட்டுப் பிள்ளையின் முயற்சியாகக் கருதி குறை நிறைகளை சுட்டிக் காட்ட வேண்டுகிறேன். வாருங்கள், எனது ஞாபக அலைகளில் நீந்தலாம். அப்போது நீங்கள் தொலைத்த ஒன்று உங்கள் நினைவலைகளில் கரை சேரலாம். எனது ஞாபகங்களை மீட்டிப் பார்ப்போம் வாருங்கள் தோழர்களே! 

#தமிழ் #கதை #தொடர்கதை #நாவல் #புதினம் #எழுத்து #ஞாபகங்கள் #கையெழுத்துப்_பத்திரிகை #பாடசாலை #கல்வி #வாழ்க்கை #முயற்சி #இணையம் #வலைத்தளம் #சிகரம்பாரதி #சிகரம் 

No comments:

Post a Comment

Share it